யாருடைய போர்?

இடதுகால் மூட்டுக்கு மேல் தொடையில் பலமான காயம்பட்டிருக்கிறது சந்திரனுக்கு. இரத்தம் வழிய அந்த பரந்து விரிந்த, எதற்கும் பயன்படாத கரடுமுரடான நிலத்தில் அவன் வீழ்ந்துக் கிடக்கிறான். அவனது உயிர் எப்போது வேண்டுமானாலும் அவனைவிட்டு பிரிந்துவிடும். மூச்சு பலமாக இரைத்தது. வானத்தைப் பார்த்தப்படி, இரண்டு கைகளையும் அகலமாக பரப்பி வைத்துக் கொண்டு அண்ணாந்து படுத்திருக்கிறான். வலி கொஞ்சம்கூட தெரியவில்லை. அவன் கண்கள் வானத்திலேயே குத்திட்டிருந்தன. வானத்து மேகங்கள் ஒன்று திரண்டிருந்த காட்சி ஒரு ஓவியம்போல தெரிந்தது அவனுக்கு. அந்த ஓவியம் அவனது வீட்டின் நினைவுகளைத் தூண்டியது. அவனைச்சுற்றி ஒரே கூச்சல், துப்பாக்கிக் குண்டுகளும் பீரங்கிக் குண்டுகளும் பேரிரைச்சலோடு வெடித்துக் கொண்டிருந்தன. அவை விழுந்து வெடித்ததினால் மேலெழுந்த புழுதி அவன்மீது பட்டு நிரப்பிக் கொண்டிருந்தது. எப்போதெல்லாம் கண்களை மறைக்குமாறு புழுதி விழுகிறதோ, அப்போது மட்டுமே, அதுவும் மிகுந்த சிரமத்துக்கிடையே துடைத்துக் கொள்வான். மேலே நேராக வரையப்பட்ட அந்த ஓவியத்தை ஒருநொடி கூட தவறவிட்டுவிடக்கூடாது அவனுக்கு. தான் கலந்து கொள்ளும் கடைசிப் போர் இதுதான் என்ற நினைப்பு அவனுக்கு ஒருவித நிம்மதியை அளித்தது.

போர். மனிதன் தொடங்கிய காலம் முதலே ஏன் போர்கள் நடைபெற்று வருகின்றன? யுகம் யுகமாய் லட்சக்கணக்கான போர்களில் கோடிக் கணக்கானவர்கள் இறந்தும் ஊனமுற்றும்கூட அணையாத தீ கங்குகள் திடீரென பற்றி எரிவதைப்போல போர்கள் முன்னறிவிப்பின்றி மூண்டுவிடுகின்றன. தாயின் இழப்போ, தந்தையின் கனவோ, மனைவியின் அன்போ, பிள்ளைகளின் நம்பிக்கையோ, இவைகளில் எதைப்பற்றியும் போர்கள் கவலைக் கொள்வதேயில்லை. அவற்றுக்கு உயிர்கள் வேண்டும்; உடல்கள் வேண்டும். அவ்வளவுதான். இப்போது சந்திரன்; நாளையும் யாராவது.

எளிமையான கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் சந்திரன். அவனுக்கு ஒருபோதும் போர்கள் மீதோ ராணுவத்தின் மீதோ ஈடுபாடு இருந்ததேயில்லை. சொந்த கிராமத்திலேயே இருந்து விவசாயம் பார்க்கவேண்டும்; நேரம் கிடைக்கும்போது ஓவியங்கள் வரைய வேண்டுமென்பதே ஆசையாக இருந்தது. ஆனால் தம்பியின் படிப்புச் செலவு, தங்கையின் திருமணச் செலவு, பெற்றோரின் மருத்துவச் செலவு என அவனை ராணுவத்தில் தள்ள பல காரணங்கள் இருந்தன. ஏதாவது வேலைக் கிடைத்தால் போதும் என உறவினர் ஒருவரிடம் கேட்டபோது, “நீ நல்லா வாட்டசாட்டமா இருக்கே. விளையாட்டுகளில் பரிசு வாங்கியிருக்கே. ராணுவத்துக்கு முயற்சிப் பண்ணு. கண்டிப்பா கிடைச்சுடும், வீட்டு பிரச்னைகளும் தீர்ந்துடும்” என சொன்னதே இப்போது அவன் வீழ்ந்துக் கிடப்பதற்கு காரணம். அவன் தொடையில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்த ரத்தம் இன்னும் நிற்கவில்லை. “வீட்டுக்கு தேவையானதை ராணுவம் கொடுத்துவிடும். ஆனால் என் தம்பி பட்டதாரியாக வருவதைப் பார்க்க முடியாது, தங்கையின் கல்யாணத்தை முன்னிருந்து நடத்த முடியாது. மருத்துவமனையில் இருந்து அப்பா கம்பீரமாக வெளியே வருவதைப் பார்க்கமுடியாது” இப்படியான எண்ணங்கள் அவனை அழுத்தின. அவனது இமைகள், மிகவும் சோர்ந்துபோன குதிரை ஒன்று தள்ளாடிக் கொண்டு வண்டியை இழுப்பதுபோல மெதுவாக மூடின. அந்த வானத்து ஓவியம் கொஞ்சம் கொஞ்சமாக இருட்டில் மறைந்துப்போனது.

—–

மீண்டும் சுயநினைவு வந்தபோது, தன்னை ஏதோ ஒரு காட்டு மிருகம் இழுத்துக் கொண்டு போவதைப்போல உணர்ந்தான். “மிருகத்துக்கு இரையாகவா நான் பிறந்தேன்?” என்ற எண்ணம் தோன்றவே சற்று திமிறி தப்பிக்க முயன்றான். மனம் சொன்னதை உடல் கேட்கவில்லை.

“அமைதியா இரு. உனக்கு ஒன்னுமில்லே. ரத்தம் ஜாஸ்தி போய்டுச்சி, அதான் மயங்கிட்டே,” என்ற குரல் மட்டும் கேட்டது. கண்களை அவனால் முழுவதுமாகத் திறக்க முடியவில்லை. மிகவும் சிரமப்பட்டு கண்களைத் திறந்துப் பார்த்தபோது, ரத்தம் வழிந்துக் கொண்டிருந்த இடத்தில் ஒரு துணி கட்டப்பட்டிருந்தது. ஆனால் இழுத்து செல்கிறவனின் முகத்தைப் பார்க்க முடியவில்லை. இழுத்துச் சென்றவன் ஒரு மரத்தடியில் சந்திரனை படுக்க வைத்தான்.

“நமது படையைச் சேர்ந்தவனா? இல்லை, எதிரி நாட்டுக்காரனா?” தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். இன்னும் துப்பாக்கிச் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது. இருட்டத் தொடங்கியது. இரவு முழுவதும் எதிரியா நண்பனா எனத் தெரியாத, ஏன் முகத்தைக் கூட பார்த்திராத ஒருவனுடன் ஒரு மரத்தடியில் கிடப்பதா? “இங்கேயே கொன்று புதைத்துவிட்டு போய்விடவும் வாய்ப்பிருக்கிறது.”

—-

நேற்று இரவு வரை தூரத்தில் கேட்டுக் கொண்டிருந்த துப்பாக்கிகளின் ஓலங்கள் இப்போது வெகுதூரத்தில் கேட்டுக் கொண்டிருந்தன. கண்விழித்து பார்த்தபோது, மேகங்கள் வேறு மாதிரியான ஓவியத்தைத் தீட்டியிருந்தன.

“இப்போ பரவால்லயா?”

குரல் வந்த திசையைப் பார்த்தபோது எதிரிநாட்டுச் சீருடை அணிந்த ஒரு ராணுவக்காரன் அருகில் நடந்து வந்துக் கொண்டிருந்தான். திடுக்கிட்ட சந்திரன், ஏதாவது ஆயுதம் இருக்கிறதா எனத் தேடிப் பார்த்தான், ஆனால் எதுவும் கிடைக்கவில்லை.

“பயப்படாத, நான்தான் உன்ன நேத்து காப்பாத்தினேன். இப்போ வலி கொறஞ்சிருக்கா?” கேட்டுக் கொண்டே அருகில் வந்து உட்கார்ந்தான்.

“நேத்து நடந்த சண்டையில நாங்க முன்னேறிட்டோம். உங்க படைங்க உங்களோட போஸ்ட்களை விட்டுட்டு ஓடிடாங்க,” என சொல்லும்போது, சந்திரனுக்கு பேச்சே வரவில்லை. “நாங்க தோத்துட்டோமா?” என நினைத்துக் கொண்டான்.

“இல்ல, யாரும் ஜெயிக்கல,” என மனதைப் படிக்கும் மந்திரவாதிப் போல் பதில் அளித்தான் அந்த எதிரி நாட்டு ராணுவக்காரன். மேலும் அவனேத் தொடர்ந்தான்,

“எங்க படைகளோட நான் முன்னேறி போய்ட்டு இருக்கும்போது, நீ கீழ விழுந்துகிடந்த. பார்க்க பாவமா இருந்தது, அதான் உன்ன தூக்கிட்டு வந்தேன். வலி குறைஞ்சிருக்கா?” என மீண்டும் கேட்டான்.

“கொஞ்சம் பரவால்ல,” என சந்திரன் சொன்னான். இந்த பதிலின் மூலம் சந்திரன் தன்னை நம்புவதை புரிந்துக் கொண்ட எதிரிநாட்டுக்காரன், தன்னைப்பற்றிச் சொல்லத் தொடங்கினான்.

“என் பேரு திருக்குமரன். நீ என்னை திரு-னு கூப்பிடலாம். இங்க நாம ஓரளவு பாதுகாப்பாதான் இருக்கோம். உன்ன கொண்டுபோய் உங்க எல்லைல விட்டுட்றேன். அங்க இருந்து நீ யாரையாச்சி உதவிக்கு கூப்பிட்டுக்கோ.”

“நாம இருக்கிறது உங்க கட்டுப்பாட்டுல இருக்கற இடமா”

“இன்னிக்கு எங்களது, நேத்து உங்களது, நாளைக்கி யாரோடதோ!,” என பெருமூச்சுவிட்டான். இப்படியொரு பதிலை சந்திரன் எதிர்பார்க்கவில்லை.

காட்டில் கிடைத்தப் பழங்களை எடுத்துக்கொண்டு வந்து சந்திரனுக்குக் கொடுத்தான் திருக்குமரன். அதில் சிலவற்றை அவனும் சாப்பிட்டான். பின்னர் சிறிது நேரம் மரத்தடியிலேயே படுத்துக் கிடந்தனர்.

“சரி இதுக்கு மேல இங்க இருக்க முடியாது. உனக்கு உயிர் வாழ்ற ஆசை இருந்தா கெளம்பு. இப்ப கெளம்புனாதான் சரியா இருக்கும். யார் கண்ணுல பட்டாலும் ஆபத்துதான்,” எனத் தூண்டினான்.

ஆனால் சந்திரனால் எழ முடியவில்லை. மரத்தைப் பிடித்துக் கொண்டு எழ முயன்றும் முடியவில்லை. மரத்தடியில் அப்படியே உட்கார்ந்துக் கொண்டான். இதனைக் கவனித்த திருக்குமரன் ஓடி வந்து அவனை எழுப்பி நிற்க வைத்தான். ஆனால் சந்திரனால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. சந்திரனை கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு காட்டை நோக்கிப் போனான் திருக்குமரன்.

இப்போதும் தூரத்தில் குண்டு சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தன. ஆனால் ஒவ்வொரு குண்டும் வெடிக்கும்போதும், காட்டில் இருந்த அனைத்து மரங்களும் அதிர்ந்து குலுங்கின. போர்கள் எப்போதும் மனிதனோடு சேர்த்து விலங்குகளையும், பறவைகளையும் ஏன் மரங்களையும் கூட இறையாகக் கேட்கின்றன.

இருவரும் மெதுவாக நகர்ந்துக் கொண்டிருந்தனர்.

“ஆமா, உன் பேரு என்ன? சொல்லவேயில்லையே”

“சந்திரன்”

“ம்ம்ம், ஊர்ல எல்லாரும் இருக்காங்களா?”

“இருக்காங்க. எனக்காக காத்துட்டு இருப்பாங்க”

“கவலைப்படாதே. எப்போ உன்ன களத்துல இருந்து இழுத்துட்டு வந்தேனோ, அப்போவே என் பொறுப்பு”

“நீ எதுக்கு எனக்கு உதவுறே?”

“உயிருக்கு போராடுற மனுஷனைப் பாத்துட்டு எப்படி உதவாம போறது?”

சந்திரனைக் கைதாங்கலாக அழைத்துக் கொண்டுப் போவதால், திருக்குமரனின் முகம் மிக அருகில் இருந்தது. இன்னும் முழுமையாக தாடியும் மீசையும் கூட முளைக்காத சின்னப் பையன். ஆனால் நல்ல உயரம், தோள்கள் வலிமையானதாக இருந்தன. இல்லையென்றால், சந்திரனை சுமந்துக்கொண்டு எப்படி இவ்வளவு தூரம் வந்திருக்க முடியம்.

“என்ன அப்டி பாக்குற? நான் யாரையும் கொன்னது கிடையாது,” என்றான். இப்படி பேசிக்கொண்டே நீண்ட தூரம் வந்துவிட்டனர்.

நடந்த உரையாடல்கள் மூலம், திருக்குமரனுக்கு தாய் மட்டுமே என்பதும், அவனும் ராணுவத்துக்கு வர கொஞ்சம் கூட விரும்பியதில்லை என்றும் தெரிந்தது. அவர்கள் நாட்டில் ராணுவப்பணி கட்டாயம் என்பதால், வேறு வழியின்றி எதிரிகளைச் சுடுவதுபோல மரங்களையும் பாறைகளையும் சுட்டு பாசாங்கு காட்டிக் கொண்டிருந்ததும் தெரிந்தது.

இருவருக்கும் இந்த காடு புதியதென்பதால், வழி தெரியாமல், திசையை மட்டும் பார்த்துக் கொண்டு பொத்தாம்பொதுவாக சென்றுக் கொண்டிருந்தனர். இப்படியே வெகு நேரமாக நடந்து சென்றதில், சந்திரன் மிகவும் களைப்படைந்துவிட்டான். திருக்குமரனுக்கும் தோள்கள் வலித்தன. தன்னை ஏதாவதொரு இடத்தில் அமர்த்துமாறு கேட்டும் திருக்குமரன் மறுத்துவிட்டான். அவனுக்கு சந்திரனை அவர்கள் முகாம் அருகே விட்டுவிட்டு, தன் படையுடன் சேர்ந்துக்கொள்ள வேண்டும். அதுவும் யாராவது கண்டுபிடிப்பதற்கு முன்பே. அதனால் ஓய்வெடுப்பது கால தாமத்தை ஏற்படுத்துமென நடந்துக் கொண்டே இருந்தான். சந்திரனிடம் பேச்சுக் கொடுத்தால் வலியை மறந்து வேகமாக நடப்பான் என நினைத்து பேசத் தொடங்கினான்.

“இந்த இடத்துக்கு ஏற்கனவே வந்து இருக்கியா?” எனக் கேட்டான்.

“இல்லை”

“இது உன்னுடையதும் இல்லை, என்னுடையதும் இல்லை. இங்கே யாரும் வசிப்பதும் இல்லை. பிறகு எதற்காக நாம் சண்டையிட்டு செத்துக் கொண்டிருக்கிறோம்?” திருக்குமரனின் பேச்சு இருபது வயது இளைஞனுடையது இல்லை.

“ஏன்னா, இது எங்க நாட்டுக்கு சொந்தமானது”

அதன் பிறகு திருக்குமரன் எதுவும் பேசவில்லை.

—–

மாலை நெருங்கிக் கொண்டிருந்தது. போர் களத்தில் திருக்குமரனின் படைகள் முன்னேறிக் கொண்டிருந்தன. இதனால் சந்திரனும் திருக்குமரனும் பயணிக்க வேண்டிய தூரம் அதிகரித்துக் கொண்டே சென்றது. இனி ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது என சந்திரன் சொல்லிவிட்டதால், அவனை ஒரு மரத்தடியில் கிடத்திவிட்டு, சாப்பிட எதாவது கிடைக்குமா என தேடிச் சென்றான் திருக்குமரன். தனிமையில் விடப்பட்டதால் சந்திரனின் எண்ணம் எங்கெங்கோ சென்றது. “யார் இவன்? நம் நாட்டின் எதிரி. நான் அவர்களின் எதிரி. ஆனாலும் என்னைக் காப்பாற்ற இவ்வளவு சிரமப்படுகிறானே. இது எங்குபோய் முடியப்போகிறதோ!” என சிந்தித்துக் கொண்டிருந்தான். “இன்னிக்கு எங்களது, நேத்து உங்களது, நாளைக்கி யாரோடதோ!” என்று அவன் சொன்னது திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டேயிருந்தது.

இறைத்தேடி சென்ற திருக்குமரனோ ஒரு அருவியைக் கண்டுபிடித்தான். மிக உயரமான அருவியில் இருந்து தண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. அதனைச் சுற்றி பூச்செடிகள் பூத்திருந்தன. அருவி விழுந்து ஆறாக ஓடத் தொடங்கும் இடத்துக்கு அருகில் இரண்டு பாறைகள் இருந்தன. நண்பர்களோ காதலர்களோ அமர்ந்து அருவியின் சாரலில் லயித்தவாறே பேசுவதற்காக யாரோ திட்டமிட்டு போட்டு வைத்ததுபோலவே அந்த பாறைகள் இருந்தன.

திரும்பி வந்து பார்த்தபோது, சந்திரன் தூங்கிவிட்டிருந்தான்.

“சந்திரன், எழுங்க. ஒரு அருமையான இடம் ஒன்னு இருக்கு. வாங்க போகலாம்,” என எழுப்பி தோள்களில் தூக்கிக் கொண்டு நடந்தான்.

பாதி தூக்கத்தில் இருந்த சந்திரன் அருவியின் ஓசையில் விழித்துக் கொண்டான். சந்திரனால் சரியாக அமர முடியாதென்பதால், ஒரு பாறையின் அருகே அமர்த்திவிட்டு, அதில் சாய்ந்துக் கொள்ளுமாறு வசதி செய்துக் கொடுத்தான் திருக்குமரன். மற்றொரு பாறையின்மீது அவன் அமர்ந்து கொண்டான்.

“இங்க பாருங்க, எவ்வளவு அருமையான இடம்! இது தெரியாம பக்கத்தில் எங்கேயோ சண்டை போட்டுட்டு இருக்காங்க. வீண் சாவுகள்,” என சலித்துக் கொண்டான்.

சந்திரனால் பேச முடியவில்லை. ஆனாலும் சிரமப்பட்டு பேசினான். “உனக்கு உங்க நாட்டு மேல பக்தியே இல்லையே! என்னை காப்பாத்துற, இப்போ மற்ற வீரர்கள கிண்டல் பண்ற,” என்றான்.

திருக்குமரன் மெல்ல புன்னகைத்து விட்டு அருவியைப் பார்த்தவாறேச் சொன்னான்,

“எவ்ளோ அருமையான இடம். ரெண்டு பேர் உக்காந்து பேசுற மாதிரி. இது மாதிரி ரெண்டு பாறை போதுமே. உக்காந்து பேசித் தீர்க்க. பக்தி, பற்றுலாம் எனக்கு எதுவும் கிடையாது. சுத்தி இருக்கறவங்க எல்லாரும் நல்லா இருக்கனும். அதுபோதும் எனக்கு,” என்றான்.

“நீங்க இங்க செய்யுற காரியங்களால உங்க நாட்டு மக்களுக்கு எவ்வளவு பெருமையா இருக்கும். எங்களை எங்க பகுதியில இருந்து தொரத்தியிருக்கீங்க”

“உண்மைதான். ஆனா எனக்கு சண்டைப் பிடிக்கறதும் கொலை பண்றதும் பெருமை இல்ல” என்றான் தீர்க்கமாக.

திருக்குமரனே தொடர்ந்தான்,

“ஜனங்ககிட்ட ஓட்டு வாங்கி ஜெயிக்கனும். அதுக்கு அரசியல்வாதிங்களுக்கு ஒரு எதிரி வேணும். அந்த எதிரியை அவங்க ஜெயிக்கனும். அத வச்சி ஆட்சியில இருக்கனும். உலகம் முழுவதும் இந்த போதையிலதான் ஜனங்க இருக்காங்க. அதுக்கு நாமதான் பலிகடா.”

அதன்பிறகு சந்திரன் எதுவும் பேசவில்லை. அருவியில் விழும் தண்ணீர் எப்படி கலங்கி பின்னர் தெளிவடைகிறது என்பதை குழந்தையின் ஆர்வத்தோடு சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். பேசிக்கொண்டிருக்கும்போதே, அருகில் கிடைத்த ஒரு குச்சியை எடுத்து அருவியையும் மரங்களையும் அந்தச் சூழலையும் வரைந்தான்.

“என் இடத்தில நீயும் உன் இடத்தில நானும் இருந்திருந்தா உன்ன காப்பாத்தி இருப்பேன்னு நெனைக்கிறயா?” நினைவு திரும்பியவனாய் கேட்டான் சந்திரன்.

“தெரியல”

“கண்டிப்பா காப்பாத்தியிருக்க மாட்டேன். ஏன் நானே கூட உன்ன சுட்டுக் கொண்ணுட்டு இருப்பேன்” சலனமின்றி சொன்னான்.

“தெரியும்”

இந்த பதில் சந்திரனுக்கு சிறு அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் உண்டு பண்ணியது.

“அடடா, பிரஷ் இல்ல; பெயின்ட் இல்ல; ஆனா எவ்ளோ அழகா வரைஞ்சியிருக்க. உன் கையில போய் துப்பாக்கிய குடுத்து இருக்காங்களே!” என மண்ணில் வரையப்பட்டிருந்த ஓவியத்தைப் பார்த்து சிலாகித்தான். சந்திரனுக்கு எதுவும் சொல்லத்தோன்றவில்லை.

இருவரும் பாறைகளின் மீது சாய்ந்து சற்று தூங்க முயற்சி செய்துக் கொண்டிருந்தனர். ஆனால் இருவருக்கும் தூக்கம் வரவில்லை. சந்திரனின் சிந்தனை எங்கெங்கோ சென்றது, “இந்தச் சண்டையால் யாருக்கு பலன்? நான் செத்துவிட்ட பிறகு என் பிணத்துக்கு மரியாதை செலுத்தி சல்யூட் அடித்தால் எனக்கென்ன பயன்? இன்னும் எத்தனைப்பேர் சாக வேண்டும்? இத்தனைக் காலம் சக மனிதனை மனிதனாய் நான்கூட பார்த்ததில்லையே. முகமே தெரியாத எத்தனை பேரை தூரத்தில் இருந்து சுட்டுக் கொன்றிருப்பேன். யாருக்காக இவற்றைச் செய்தேன்? எனக்காகவா? சம்பளத்துக்காகவா? இல்லை உண்மையிலேயே நாட்டுப்பற்றா? நாடு என்ற ஒன்று இருக்கிறதா? எதற்குமே பயன்படாத இந்த நிலத்தின் மீது அவர்களுக்கு என்ன ஆசை? அதை காக்க நான் ஏன் வந்தேன்? எங்களின் பிணங்களின் மீதல்லவா நாட்டுப்பற்றுச் செடியை நட்டு வளர்க்கிறார்கள். எல்லா மக்களும் ஒன்றாக இருந்துவிட்டால் நாம் ஏன் சொர்க்கத்தை நாடிச் செல்லப்போகிறோம். அது இங்கேயே கிடைத்துவிடுமே. இந்த திருக்குமரனால் எப்படி இப்படி இருக்க முடிகிறது! அவன் உத்தரவுகளை மட்டும் மதித்து நடப்பவனாக இருந்திருந்தால் நான் உயிரோடு இருந்திருப்பேனா! நான் அணிந்திருக்கும் யூனிபார்மே போதுமே அவன் என்னை கொல்ல. ஆனால்…”

அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு குண்டு அருவியின் அருகே வந்து விழுந்து வெடித்தது. இதில் இருவருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லையென்றாலும், அழகான ஒரு ஓவியத்தை நார்நாராக கிழித்தது போல இந்த இடமே உருக்குலைந்தது. வண்ணவண்ணமாய் பூத்திருந்த செடிகள் பிடுங்கி எரியப்பட்டிருந்தன. அருவியின் தண்ணீர் கலங்கிப்போனது. மரங்கள் உடைந்து விழுந்திருந்தன.

“சரி வா. இதுக்கு மேல இங்கிருக்க கூடாது” என திருக்குமரன் அவசரப்படுத்தினான்.

சந்திரனால் இப்போது தானாக எழுந்து நிற்க முடிந்தது. ஆனால் நடக்க முடியவில்லை. மீண்டும் அவனைத் தோளில் போட்டுக் கொண்டு வேகமாக ஓட முயற்சி செய்தான் திருக்குமரன். ஆனால் சிரமமாக இருந்தது. உடம்பெல்லாம் வலித்தது. பலமாக மூச்சிரைத்தது. காட்டுக்குள் மோதல் நடக்கப் போகிறது என்பது மட்டும் அவனுக்கு புரிந்தது. அதனால்தான் இந்த ஓட்டம். இரவும் விரட்டியது.

நன்றாக இருட்டும்போது, சந்திரனுடைய நாட்டு முகாம்கள் தென்பட்டன. “இன்னும் நல்லா இருட்டட்டும், அப்றம் உன்ன உங்க முகாம்கிட்ட விட்டுட்டு போயிட்றேன்” சந்திரனை கீழே அமர வைத்தான்.

“நாம எதுக்கு சண்ட போட்டுட்டு இருக்கோம்?” என திடீரென கேட்டான் சந்திரன்.

அவனை பார்த்து புன்னகைத்துவிட்டு, யாராவது வருகிறார்களா என நோட்டமிட்டான். இரண்டு முகாம்களில் இருந்து யார் பார்த்துவிட்டாலும் ஆபத்து என்பதால் கூடுதல் கவனம் செலுத்தி கண்காணித்தான்.

“என்ன விட்டதுக்கப்பறம் என்ன செய்ய போறே?” சந்திரன் கேட்டான்.

“மறுபடியும் போய் மரத்தையோ பாறையையோ சுட்டுக் கொண்டிருப்பேன்” என்றான் அவன்.

நன்றாக இருட்டியது.

“சரி வா போலாம்” எனத் தூக்கிக் கொண்டு நடந்தான்.

ஒரு இரும்பு வேலி அருகே சந்திரனை இறக்கி வைத்துவிட்டு, “இதுக்கு மேல நீதான் போகனும்” என்றான்.

அந்த இடத்தில் மிகவும் மங்கலான வெளிச்சம் மட்டுமே இருந்தது.

“இப்போ போனாதான், விடியறதுக்குள்ள எங்க முகாமுக்கு போக முடியும்,” என திரும்பினான்.

அப்போது,

எங்கிருந்தோ வந்த ஒரு துப்பாக்கிக் குண்டு திருக்குமரனின் மார்பைத் துளைத்துக் கொண்டு வெளியேச் சென்று விழுந்தது. அதே இடத்தில் சுருண்டு விழந்தான். அவனைக் காப்பாற்ற சந்திரன் எவ்வளவோ முயன்றும் இறந்து போனான். கொஞ்ச நேரத்தில் சந்திரனும் அதே இடத்தில் மயங்கி விழுந்தான்.

அடுத்தநாள், கண் விழித்தபோது, ஒரு மருத்துவமனைப் படுக்கையில் படுத்திருந்தான் சந்திரன். அவனைச் சுற்றி மருத்துவர்கள், செவிலியர்கள் நின்றிருந்தனர். அவனுக்கு ரத்தம் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது. “நெறைய ரத்தம் போயிடுச்சி. ஆனா இனிமே ஒரு பிரச்னையும் இல்ல. யூ கேன் வாக் அகெய்ன்,” என ஒரு மருத்துவர் தோளில் தட்டிக் கொடுத்தார்.

அந்த நேரத்தில் சந்திரனின் உயரதிகாரி ஒருவர் அவனைப் பார்க்க வந்தார்.

“குட் ஜாப் சோல்ஜ்சர். சீக்கிரம் குணமாயிடுவே” என்றார்.

சந்திரன் எதுவும் பேசவில்லை.

“எவ்ளோ தைரியம் இருந்திருந்தா உளவு பாக்க நம்ம முகாமுக்கே வந்திருப்பான்! அந்த எதிரி நாட்டுக்காரனை நீதான் சுட்டுக் கொன்னியா?” உயரதிகாரி கேட்டார். கேள்வியில் ஒரு பெருமிதம் இருந்தது.

சில விநாடிகள் எதுவும் பேசாமல் படுத்திருந்தான் சந்திரன். பின்னர்,

“இல்ல. நான் மட்டுமே இல்ல” என்றான். குரல் மெல்ல ஒலித்தது.

– ருத்ரன் பராசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *