தீன் தமிழ்க் கவிஞன் ஆபிதீன் – பாகம் 4/4

மூன்றாம் பாகத்தை பார்க்க

புலவர் ஆபிதீனுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி நாகூர் ஜெய்னபு நாச்சியார். இவருக்கு மூன்று குழந்தைகள். இரண்டாம் மனைவி, சென்னை ஆமினா அம்மா. இவருக்கு நாலு பிள்ளைகள். 23.09.1966 அன்று புலவர் ஆபிதீன் மறைந்தபோது அவருடைய பிள்ளைகளின் வயது எத்தனை தெரியுமா? முறையே 12, 10. 8 , 6.

சென்னை மாநகரில் சின்னஞ்சிறு பாலகர்களை வைத்துக்கொண்டு, குடும்பத் தலைவனை இழந்து, வருமானமும் ஏதுமின்றி, குடும்பத்தை நடத்துவதென்பது எளிதான காரியமன்று. புலவர் உயிரோடிருந்த காலத்தில், சங்கு முஹம்மது அபூபக்கர் சாகிப் போன்ற தாராள மனம் படைத்த செல்வந்தர்கள் ஆபிதீன் காக்கா அவர்கள் மீது கொண்டிருந்த பேரன்பால் அக்குடும்பத்துக்கு பெரிதும் உறுதுணையாக இருந்தார்கள். “மெய்யைவிட்டு உயிர் மறையும் வரையும் கையை மேலாய்க் காத்துக் கொண்டவர்” என்று சங்கு வாப்பாவைப் பற்றி புலவர் ஆபிதீன் பாடியிருக்கிறார்.

1978-ஆம் ஆண்டு ‘முஸ்லிம் குரல்’ ஆசிரியர் கனி சிஸ்தி அவர்கள் முன்னெடுத்து, பல செல்வந்தர்களின் நிதியுதவி பெற்று, இரண்டு புதல்வியர்களின் திருமணத்தை நடத்தி நற்காரியம் புரிந்தார்கள்.

ஆபிதீன் காக்கா எழுதிய பாடல்களுக்கு, அவருக்கு அதிக பட்சமாக கிடைத்த தொகை வெறும் 80 ரூபாய் மட்டுமே. “சோழா கேள்! உப்புக்கும் பாடிப் புளிக்கும் ஒருகவிதை ஒப்பிக்கும் என்றன் உளம்” என்று ஒளவையார் பாடிய பாடல்தான் என் நினைவுக்கு வந்தது. ஒரு கோப்பை தேநீருக்கும், ஒரு தட்டை கொத்துப் புரோட்டாவுக்கும் பாடலெழுதித் தந்த ஒரு கவிவாணன் நிலையைக் கேட்டறிந்தபோது மனது வலிக்கிறது. கவிதை நமக்கு சோறு போடாது என்று முடிவெடுத்த அவர் சென்னை நீதிமன்றத்துக்கு எதிரேயிருந்த அச்சுக் கூடத்தில் அச்சு பிழைத்திருத்தம் செய்யும் வேலையில் சொற்ப ஊதியத்திற்கு பணிபுரிந்திருக்கிறார்..

இஸ்லாமியப் பாடல்கள் எழுதுவது அவ்வளவு சிரமமா? எத்தனையோ கவிஞர்கள் பாடல்கள் புனைகிறார்கள். இதில் ஆபிதீனை மாத்திரம் இந்த அளவுக்கு சமுதாயம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதற்கு என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கலாம். அவருடைய பாடல்களில் காணும் கருத்தோட்டத்தை ஆராய்ந்துப் பார்த்தாலே இந்தக் கேள்விக்கான பதில் எளிதில் கிடைக்கும்.

ஆபிதீன் ஏறக்குறைய 4,000 பாடல்கள் எழுதியுள்ளார். அதில் ஒரு பாடல்கூட சோடை போனதில்லை. அத்தனைப் பாடல்களும் வெற்றி முகத்தைக் கண்டன. நாகூர் ஹனிபாவின் வெற்றிக்கு புலவர் ஆபிதீன் காரணமாக இருந்தார், அதுபோலவே ஆபிதீன் அடைந்த பிரபலத்திற்கு நாகூர் ஹனிபா காரணமாக இருந்தார் என்பதே கலப்படமில்லாத உண்மை.

பேருலையுள் பெய்த அரிசியை வெந்தமை
ஓர்மூழை யாலே உணர்ந்தாங்கு – யார்கண்ணும்
கண்டதனால் காண்டலே வேண்டுமாம் யார்கண்ணும்
கண்டது காரணமாம் ஆறு. – (பழமொழி நானூறு 348)

இப்பாடலின் கருத்தை ஒரே வரியில் சொல்ல வேண்டுமெனில் “ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்று கூறிவிடலாம். ஆபிதீன் எண்ணற்ற பாடல்கள் எழுதியிருக்கின்றார். அதில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தனித்துவத்தைக் காண முடிகிறது. அச்சிறப்புகளை எடுத்துக்கூற இந்த ஒரே ஒரு பாடலே போதுமானது. நாம் இப்போது அலசப் போவது அவருடைய கேள்வி-பதில் பாடலில் ஒன்றே ஒன்றை மட்டுமே.

“எதையும் அப்படியே நம்பிவிடாதே! ஏன் எதற்கு என்று கேள்வி கேள். உன்னையே நீ அறிவாய்” என்று நமக்கு அறிவுறுத்துகிறார் அறிஞர் சாக்ரடீஸ்.

//ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை’//

என்று பாடுகிறார் கவிஞர் வாலி.

கேள்விகள் கேட்டு அதற்கான சரியா பதில் கேட்டுப் பெறுவதன் மூலமே ஒருவன் முறையான ஞானத்தைப் பெறுகிறான்.

//கேள்வி பிறந்தது அன்று; நல்ல பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று; யாவும் நடந்தது இன்று//

என்று பாடுகிறார் கவிஞர் கண்ணதாசன்

14-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இரட்டைப் புலவர்களைப் பற்றி நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். ஒருவர் முதல் இரண்டு அடிகளைப் பாட, இரண்டாமவர் மீதி இரண்டு அடிகளை பாடி முடிப்பார். ஏராளமான பாடல்களில் முதலாமவர் எழுப்பிய கேள்விக்கு செய்யுளின் தன்மை மாறாதவாறு இரண்டாமவரின் பதில் அதில் இடம் பெற்றிருக்கும்

கேள்வி-பதில் பாடல்களை இயற்றுவதில் புலவர் ஆபிதீன் மிகுந்த திறம் படைத்தவராக இருந்திருக்கிறார். ‘கேள்வி-பதில் பாடல்’ என்று நான் குறிப்பிடுவது அப்பாடலின் முதல் வரியில் கேள்வி இருக்கும். அதற்கடுத்த வரியில் அதற்கான பதிலும் இருக்கும்.

கேள்வி கேட்பது எளிது. அதற்கான விளக்கம் ஒரே வரியில் சொல்வது என்பது கடினமான ஒன்று.

கண்ணதாசனின் ஒரு பாடலில்

கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடி அசைந்ததா?
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா?
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா?

என்று கேள்விக்குமேல் கேள்வி கேட்டுக்கொண்டே செல்வார். ஆனால் இதற்கான பதில் அப்பாடலில் நமக்கு கிடைக்காது. கோழி முதலில் வந்ததா? முட்டை முதலில் வந்ததா? என்பது போன்ற கேள்வி இது. இதுபோன்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம். கேள்விகள் கேட்பது கடினமான காரியம் அல்ல.

கண்ணதாசனின் வேறு சில பாடல்களில் கேள்வியும் இருக்கும், அதற்கான பதிலும் அதிலேயே அடங்கி இருக்கும். அது ஒரு தனிச்சுவை.

கேள்வி : கண்ணிலே நீர் எதற்கு?
பதில் : காலமெலாம் அழுவதற்கு
கேள்வி : நெஞ்சிலே நினைவெதற்கு?
பதில் : வஞ்சகரை மறப்பதற்கு
கேள்வி : கையிலே வளைவெதற்கு?
பதில் : காதலியை அணைப்பதற்கு
கேள்வி : காலிலே நடை எதற்கு?
பதில் : காதலித்துப் பிரிவதற்கு

இதுபோன்ற கேள்வி-பதில் பாடல்கள் கண்ணதாசன் மட்டுமல்ல, வாலியும் நிறையவே எழுதியுள்ளார் (உ-ம்)

கேள்வி : இந்தப் புன்னகை என்ன விலை ?
பதில் : என் இதயம் சொன்ன விலை
கேள்வி : இவள் கன்னங்கள் என்ன விலை ?
பதில் : இந்த கைகள் தந்த விலை

புலவர் ஆபிதீனின் கேள்வி-பதில் பாடல்கள் நாகூர் ஹனிபாவுடன் பெண்பாடகி ஏ.ராணி இணைந்து பாடிய பாடல்கள் யாவும் மகத்தான வரவேற்பைப் பெற்றன. நாகூர் ஹனிபா கேள்வி கேட்பது போலும் அதற்கு ஏ.ராணி பதில் சொல்வதுபோலும் அமைந்த பாடல்கள் அக்காலத்தில் அனைவரையும் முணுமுணுக்க வைத்தன.

கேள்வி: மக்கள் யாவரும் ஒன்றே குலமெனும்
மார்க்கம் வந்ததும் யாராலே?
பதில்: மக்கா வென்னும் நகரம் தந்த
மாந்தர் திலகம் நபியாலே!
கேள்வி: விதவை உலகில் மறுமணம் செய்து
வனிதையர் வாழ்வது யாராலே?
பதில்: விதியாம் அதனை குர்ஆன் மூலம்
விளங்கிடச் செய்த நபியாலே!
கேள்வி: மனிதர் சமுகம் மாசுபடாமல்
மதுவிலக்கானதும் யாராலே?
பதில்: மணிமொழியாலே முரடரைத் திருத்தி
மறுமலர்ச்சி கண்ட நபியாலே!
கேள்வி: சொத்தில் உரிமை பெண்களுக்குண்டென
சட்டம் வந்ததும் யாராலே?
பதில்: சத்திய வழியில் நித்தியம் நடந்து
செயலில் காட்டிய நபியாலே!
கேள்வி: பசியின் கொடுமையை பணம் படைத்தோர்கள்
புரிந்திட நேர்ந்ததும் யாராலே?
பதில்: இஸ்லாம் கண்ட ரமலானை
இனிதே அமைத்த நபியாலே!

இன்றைய காலகட்டத்தில் ஏடுகள் பயன்படுத்தும் ‘மதுவிலக்கு’, ‘மறுமலர்ச்சி’, ‘மணிமொழி’ போன்ற எளிமையானச் சொற்களை அவர் ஏகத்துவப் பாடல்களில் பயன்படுத்தியிருப்பது ஈண்டு நோக்கற்பாலது.

நாகூர் ஹனிபாவுக்கு எத்தனையோ கவிஞர்கள், எத்தனையோ பாடல்கள் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். குணங்குடி மஸ்தான், பாவேந்தன் பாரதிதாசன், உடுமலை நாராயணகவி, நல்ல தம்பிப் பாவலர், ஞானபூபதி இபுராகீம், இறையருட் கவிமணி பேராசிரியர் கா. அப்துல் கபூர், அப்துல் ரசீது, இ. எம். நயினார், சாரண பாஸ்கரன், பொருள்வை மதிதாசன் (அப்துல் ரகீம்), கவிஞர் தா. காசிம், சிங்கப்பூர், க. து. மு. இக்பால், நாகூர் சேத்தான், எம். எம். ஏ. காதிர், நாகூர் சாதிக், கவிஞர் கருணானந்தம், நூர் மதிதாசன், திருவை அப்துல் ரகுமான், நாகூர் சலீம், தேங்கை சர்புதீன் ஆலிம், அபிவை தாஜுதீன், கூறைநாடு அப்துல் சலாம், வீரை அப்துல் ரகுமான், தத்துவக் கவிஞர் இ. பத்ருதீன், தாராபுரம் மு. ஜாபர் அலி இதுபோன்ற எத்தனையோ கவிஞர்கள் எழுதிய பாடல்களை நாகூர் ஹனிபா பாடியிருக்கின்றார்.

நாகூர் ஹனிபாவுக்கு பாடல் எழுதிக் கொடுக்க எத்தனையோ பேர்கள் தவமிருந்தனர். எல்லோருக்கும் அந்த அந்த அதிர்ஷ்டம் வாய்க்கவில்லை. மிக நெருக்கமான உறவு கொண்டிருந்த கவிஞர் இஜட் ஜபருல்லாஹ்வுக்குக் கூட இந்த வாய்ப்பு அமையவில்லை. இன்று இசைமுரசு அவர்களுக்கு மிகவும் நெருக்கமாக தன்னை அடையாளப் படுத்திக்கொள்ளும் பலரும் அப்போது அவரை நெருங்கக்கூட முடியவில்லை என்பதே எதார்த்தமான உண்மை.

நாகூர் இ.எம் ஹனிபா பாடி இசைத்தட்டில் பதிவான முதற்பாடல் புலவர் ஆபிதீன் எழுதியது என்றுதான் பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். 1954ஆம் ஆண்டு வெளிவந்தது இந்த இசைத்தட்டு. இலங்கை கம்பலை நல்லத்தம்பி பாவலர் எழுதிய

//சின்னச் சின்ன பாலர்களே
சிங்காரத் தோழர்களே//

என்ற பாடல்தான் அவர் பாடிய முதற்பாடல். மறுபக்கம் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு” என்ற பாடல் பதிவாகியிருந்தது.

ஆபிதீன் காக்கா பற்றிய பற்பல சுவையான தகவல்களை கவிஞரும் எழுத்தாளருமாகிய அ,.ஹிலால் முஸ்தபா வாயிலாக நாம் அறிந்துக் கொள்ள முடிகிறது.

ஆபிதீன் காக்காவின் இறுதிக்காலத்தில் நடந்த ஒரு நிகழ்வை அவர் நெகிழ்வுடன் நினைவு கூறுகிறார். ஒரு அன்பர் கவிஞரிடம் வந்து “அல்லா பற்றி ஒரு கவிதை எழுதித் தாருங்கள், நான் இருபது ரூபாய் தருகிறேன்” என்றாராம். கவிதை எழுதத் தொடங்கிய ஆபிதீன் காக்கா அன்பரிடம் திரும்பக் கேட்டாராம்.

“அதுசரி அல்லா இருக்கிறான் என்றா? இல்லை என்றா?” கவிதை எழுதச் சொன்னவர் அரண்டு போய் விட்டார். கவிஞர் மேலும் தொடர்கிறார்,

“என்னைப் பொறுத்தவரை அல்லா நிச்சயம் இருக்கிறான். ஆனால் இப்போது உங்கள் இருபது ரூபாய்க்கு நான் எழுதப் போகிறேன் எனவே உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்” என்றாராம். தன் தவறை உணர்ந்த அந்த நண்பர் வெட்கித்து போய் விட்டாராம்.

வறுமையின் பிடியால் வாடி வதங்கி நடை பாதையில் காய்கறி வியாபாரம் செய்ததை குறித்து அவர் ஒரு கீழக்கரை செல்வந்தரிடம் கூறியது.

“கவிதை எழுதினேன் எவரும் போதிய அளவு உதவவில்லை. காய்கறி விற்கிறேன். ஓரளவு குடும்பம் நடந்துகொண்டிருக்கிறது” .

“உரிமைக் குரல் இதழில் ஓர் இலக்கியச் சர்ச்சை தொடங்கியது. ஆபிதீன் காக்காவும் கவிஞர் தா.காசிமும்தான் மோதிக் கொண்டார்கள். ‘சீறா புராணத்தில் உமறுப்புலவர் முஹம்மது நபியை மகம்மது நபி’ என்கிறார் சர்ச்சை இதுதான். இதில் எதுசரி?

“மானிலம் தனக்கோர்
மணிவிளக்கெனலாய்
மகம்மதுநபி பிறந்தனரே”

இது சீறா. மகம்மது நபி மோனைக்காகப் போட்டது. ஆனால் இஸ்லாமியச் சொல்லாடலில் முஹம்மதுதான் சரியானது. இப்படி ஒரு பெயர்ச் சொல்லடிப்படையில் இருபெரும் கவிஞர்களும் ஆறு வாரங்கள் மோதிக்கெண்டார்கள்.

மிகச்சுவையாக இந்த வாதம்தொடர்ந்தது. அன்று இது ரசனை. இன்று இது எனக்கு வெற்றுவாதம். ஆனால் இந்த விவாதத்தில் இருவரும் முன்வைத்த ஆதாரங்கள் இலக்கிய வட்டத்தை இன்றுகூடப் பிரமிக்க வைக்கக் கூடிய சுவையானது. இறுதியில் காயிதெ மில்லத் இலக்கியச் சர்ச்சையை முடித்து வைத்தார்கள்” என்று இலக்கியச் சுவை நிறைந்த ஒரு தகவலை நமக்குத் தெவிட்டாது அள்ளித் தருகிறார் எழுத்தாளர் அ.ஹிலால் முஸ்தபா. இவை யாவும் நாம் எளிதில் அறியக் கிடைக்காத அற்புத தகவல்கள்.

ஆபிதீன் காக்கா ஓடும் ரயிலில் எழுதி ‘ஓவர் நைட்’டில் பிரபலமான பாடல்கள் ஏராளம். “அடி என்னடி ராக்கம்மா” என்ற பாடல்கூட ஓடும் ரயிலில் உதித்த பாடல்தான் என்று கவியரசு கண்ணதாசன் ஒருமுறை பேட்டியில் கூறியிருக்கிறார். கவிஞனுக்கு ஓட்டலில் ரூம் போட்டு பாட்டிலும் கையுமாக இருக்கும்போது மட்டுமே பாட்டு பிறக்கும் என்பதில்லை ஆசுகவிக்கு எந்தச் சூழ்நிலையிலும் கவிதை பிறக்கும். ஆடுகின்ற இருக்கையிலும், ஓடுகின்ற இரயிலில் கூட பாட்டு பிறக்கும்.

பேரறிஞர் அண்ணாவும் காயிதே மில்லத் இருவரும் பங்கு கொண்ட குளச்சல் முஸ்லீம் லீக் மாநாட்டில் கலந்துக் கொள்ளச் சென்றபோதுதான் இரயில் பயணத்தில் பிறந்த பாடல்

“நாட்டின் இரு கண்கள் நல்லவர்கள் போற்றும் வல்லவர்கள் இவர்கள்”

அய்யம்பேட்டை முஸ்லீம் லீக் மாநாட்டிற்குச் செல்வதற்கான பயணத்தை மேற்கொண்டபோது எழுதிய பாடல்தான்

“இதுதான் நாங்கள் செய்த துரோகமா – அல்லது
நீங்கள் சொல்லும் வகுப்பு வாதமா கூறுங்கள்”

இந்திய சுதந்திரத்திற்கு முஸ்லீம்கள் புரிந்த தியாகத்தை விவரிக்க இதைவிட வேறு சிறந்த பாடல் இதுவரை யாரும் எழுதவில்லை என்பதே என் கணிப்பு.

ஆபிதீன் காக்காவுக்கு அருந்தமிழில் இலக்கணத்தில் அபாரமான ஆற்றல் இருந்தது என்பதற்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு இங்கு க்றுதல் அவசியம்

‘அல்லாஹ்வின் நீதியை அறிந்துக் கொள்வது அவ்வளவு சுலபமல்ல, இறைவனால் நிகழ்த்தப்படும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு காரணம் உண்டு: என்ற கருத்தில் ஒரு பாடலை ஆபிதீன் காக்கா எழுதியிருந்தார்.

அப்பாடலின் பல்லவி :

‘யாரறிவார் உன்றன் நீதி?’

தனித்தமிழ் இயக்கம் மேலோங்கி இருந்த காலத்தில் ‘எந்தன், உந்தன் என்றெழுதும் பாவலர்காள், எங்கிருந்து இதனைக் கற்றீர்?” என்று சாடப்பட்டனர்.

எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ?
கண்ணும் கண்ணும் ஒன்றாய் கூடி பேசும் விந்தைதானோ?

என்றுதான் திரைப்படத்திலும் (1955) பாடல்கள் வெளிவந்தது. ஆபிதீன் இலக்கண விதிப்படி உந்தன் என்று எழுதாமல் ‘யாரறிவார் உன்றன் நீதி?’ என்றே எழுதினார் என்பது இலக்கணம் அறிந்த தமிழார்வலர்களும் கண்டு வியக்கும் செய்தி.

நாகூரின் அல்லாமா

அல்லாமா என்றால் அறிஞர் என்று பொருள். உலக மகாகவிகளில் ஒருவரான டாக்டர் இக்பாலை “அல்லாமா’ என்ற அடைமொழியிட்டு உலகம் அழைக்கிறது.

நாம் வாள் நிழலிலே வளர்ந்தோம்
வாள் நிழலிலேயே வாலிபமடைந்தோம்
இரு முனையும் கூர்மையான
இளம் பிறையே எங்கள் சமூகச் சின்னம்

என்று பாடினார் அல்லாமா இக்பால். அவரைப்போல பாடல்களில் இளைஞர்களுக்கு உரமேற்றும் கவிஞனை நாம் காண இயலாது.

எந்த இனத்தில் இளைஞர்களின் இதயம்
எஃகைப் போல உறுதியாக இருக்கிறதோ,
அந்த இனத்துக்கு வாள் தேவையில்லை

என்று அழகாக எடுத்துரைப்பார் இக்பால்.

இரவின் பயங்கர இருளிலே
களைப்படைந்த என் ஒட்டகப் படையை
வழி நடத்திச் செல்வேன்;
என் மூச்சு தீச்சுடரைக் கொளுத்தும்;
என் பெருமூச்சு தீப்பொறியைக் கக்கும்

என்று இஸ்லாமிய இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைக் கூறி தேற்றுகிறார்.

நாகூர் புலவர் ஆபிதீனின் புகழ்பெற்ற வரிகள் அந்த மகாகவியின் வரிகளோடு நம்மை ஒப்பிட்டுப் பார்க்க வைக்கிறது. அவரது இந்த ஒரு சில வரிகளில் அவரது உணர்ச்சிகள் மாத்திரம் கொப்பளிக்கவில்லை, அதற்கும் மேலாக ஆதங்கம், வீரம், தன்மானம், இறைபக்தி, கோபம், நாட்டுப்பற்று எல்லாவற்றையும் ஒரு சேர வெளிப்படுத்துகிறார் அவர். இத்தனை சிறிய கவிதை மனித உள்ளத்திலிருந்து ஆர்த்தெழும் இத்தனை உணர்ச்சிகளை ஒன்றாக்கி உரைப்பதென்பது அத்தனை எளிதான விடயமா?

இறைவன் மேலாணை
இனத்தின் மேலாணை
இறைமறை மேலாணை

ஈட்டியின் முனையில் நிறுத்தியபோதும்
ஈமான் இழக்க மாட்டோம்
காட்டிக் கொடுத்திடும் கயவர்கள் தம்மை
கனவிலும் விடமாட்டோம்

எல்லாம் இயன்ற ஏகனுக் கல்லால்
எவருக்கும் அஞ்சமாட்டோம்
நல்ல நம் நாட்டு நன்றியை மறந்து
நழுவியே ஓடமாட்டோம்

புலவர் ஆபிதீனை நாகூரின் அல்லாமா என்று அழைப்பதில் என்ன தவறு?

இப்பாடல் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய “தாயின் மேல் ஆணை, தந்தை மேல் ஆணை, தமிழக மேல் ஆணை” என்ற பாடலின் தொடக்க வரிகளின் தாக்கமாகக் கூட இருக்கலாம் என்பது சிலரது கருத்து.

1966 செப்டம்பர் 23-இல் புலவர் ஆபிதீன் காலமானார். ஆனால் அவருடைய நினைவுகள் இன்றளவும் நம் மனதில் உலவுகின்றன.

முற்றும்,
நாகூர் அப்துல் கையூம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *