தீன் தமிழ்க் கவிஞன் ஆபிதீன் – பாகம் 3/4

இரண்டாம் பாகத்தை பார்க்க

குன்றிலிட்ட விளக்காகத் திகழ வேண்டிய புலவர் ஆபிதீன் குடத்திலிட்ட விளக்காகத் திகழ்ந்தார் என்பதே உண்மை. அவர் நாகூரில் வாழ்ந்த காலம்  மிகக் குறைந்த காலம்தான். அவருடைய வாழ்வின் பெரும்பாலான காலம் ரெங்கூன், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, பம்பாய் என்றே கழிந்தது.

புலவர் ஆபிதீன் அவர்களைப் பற்றிய வாழ்க்கை நிகழ்வுகளை முதன் முதலில் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் பன்னூல் அறிஞர் எம்.ஆர்.எம். அப்துற் றஹீம், அறிஞர் ஆர்.பி.எம். கனி, பத்திரிக்கையாளர் ஜே.எம்.சாலி, சொல்லரசு ஜாபர் மெய்தீன் ஆகியோர். புலவர் ஆபிதீன் பற்றிய விவரங்களை அதிகம் அறிந்து வைத்திருந்தவர் நாகூர் ஹனிபா அவர்கள். இசைமுரசு அவர்கள் உயிரோடிருந்த காலத்தில் அவரை அணுகி பேட்டி எடுத்து வாழ்க்கை நிகழ்வுகளை ஆவணப்படுத்திய பெருமை இருவரைச் சாரும். ஒருவர் பத்திரிக்கையாளர் அ.மா.சாமி.  இன்னொருவர் நாகூர் ஹனிபாவை பேட்டி கண்டு ஆவணப்படம் தயாரித்த ஆளூர் ஷாநவாஸ்.

இவர்களன்றி நாகூர் ஹனிபாவை நேரடியாக பேட்டி கண்டும், கலைஞர் அவர்களிடம் மிக நெருக்கமாக இருந்த சின்னக் குத்தூசி மூலமாகவும், அறிவாலயம் ஆவணக் காப்பகத்திலிருந்தும் துல்லியமான நாட்கள், தேதி முதற்கொண்ட தரவுகள் சேகரித்து, நாகூர் ஹனிபாவிடம் நேரடியாக அணுகி புலவர் ஆபிதீனைப் பற்றிய செய்திகள் அறிந்து ஆவணப்படுத்திய பெருமை 100 வரலாற்று நூல்களுக்கும் மேலாக எழுதிய வரலாற்றாசிரியர் செ.திவான் அவர்களையேச் சாரும். இவர்களைப் போன்றோர் வரலாற்று ஆவணங்களுடன் தரும் தகவல்களே உறுதியானவை.

புலவர் ஆபிதீனைப் பற்றிய ஏராளமான ஆதாரமற்ற வாய்வழிச் செய்திகள் நிறையவே நம்மைச் சுற்றிச் சுற்றி வருகின்றன.

புலவர் ஆபிதீன் 1934ஆம் ஆண்டு ‘நவநீத கீதம்” என்ற பாடல்கள் அடங்கிய நூலைத் தொகுத்தார். பத்துப் பாடல்கள் கொண்ட அந்தப் பாடல் தொகுதி நாகையில் அச்சாகி வெளியிடப்பட்டது. இந்நூல் “மு.ஜெய்னுல் ஆபிதீன்” என்ற பெயரில் வெளியானது.

வறுமையின் காரணமாக வாழ்வாதாரம் தேடி அயல்நாடு சென்று பிழைக்க வேண்டிய சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டது. 1934ஆம் ஆண்டு பர்மாவுக்கு புறப்படுகிறார். ஆபிதீன் எந்தவொரு தொழிலையும் தரக்குறைவாகவோ, தன்னுடைய தகுதிக்கு குறைந்ததாகவோ  என்றென்றும் எண்ணியதில்லை.  எல்லாவித   பணிகளையும் அவர்  செய்யத் தயாராக இருந்தார். ரெங்கூன்  சென்ற அவர் அனைத்துவித வியாபாரங்களையும் செய்தார். அவர் ஒருபோதும் உழைக்கத் தயங்கியதில்லை. பாடல்கள் எழுதினார். பாடவும் செய்தார். பிற்பாடு அவருக்கு ஒரு தமிழ்ப் பத்திரிக்கை ஒன்றில் அவருக்கு பிடித்தமான எழுத்துப் பணி கிடைத்தது.  மிகவும் மகிழ்ந்து போனார்; நெகிழ்ந்து போனார். 

1935-ஆம் ஆண்டு ஆபிதீன் ரெங்கூனில் உள்ள இலக்கிய ஆர்வலர்களுடன் சேர்ந்து மீலாது விழா ஒன்றை ஏற்பாடு செய்தார். அந்த மீலாது விழாவில்தான் அவருடைய “திருநபி வாழ்த்துப்பா” என்ற கவிதைத் தொகுதியை அவர் வெளியிட்டார். இந்நூல் வெளிவருவதற்கு ரெங்கூனில் உள்ள தமிழார்வலர்கள் அவருக்கு பேருதவி புரிந்தனர். இந்நூலில் அவர் பெயர் “மு.ஜெய்னுல் ஆபிதீன்” எனக் காணப்படுகிறது.

கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் அவர் பர்மாவிலேயே காலத்தைக் கழித்தார். 1942ஆம் ஜனவரி மாதம் தொடங்கி மே மாதம் வரை ஜப்பானிய விமானங்கள் ரெங்கூனில் சரமாரியாக குண்டுகள் பொழிய ஆரம்பித்தன. தமிழர்கள் அங்கிருந்து தப்பி, கடும் சோதனைகளைச் சந்தித்து,  மிகுந்த சிரமங்களுக்கிடையே இந்தியா வந்துச் சேர்ந்தனர்.

நாகூர்க்காரர்கள் சிலர், குறிப்பாக புலவர் ஆபிதீன், பி.ஏ.காக்கா போன்ற நாகூர் பிரபலங்கள் உயிரைப் பயணம் வைத்து பலப்பல இன்னல்களுக்கிடையே நடந்தே தாயகம் வந்துச் சேர்ந்தனர். பர்மா எல்லையில் உள்ள ஆற்றைக் கடந்து இப்போதைய பங்களாதேஷ் வந்து அடைவதற்குள் எண்ணற்ற பேர்கள் நடக்க இயலாமலும், ஆற்றில் முதலைக்கு இரையாகியும், காட்டு விலங்குகள் தாக்கப்பட்டும், நோய் வாடப்பட்டும், பசிக்கொடுமையினாலும் மடிந்து போயினர். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர்கள் ஊரைக் காலி செய்துக்கொண்டு தங்களுடைய சொத்துக்கள் வியாபாரம் அனைத்தையும் துறந்துவிட்டு வெறுங்கையுடன் தமிழகம் வந்தனர்.

அப்படி வந்தவர்களில் ஒருவர்தான் நம் ஆபிதீன் காக்கா. ஆபிதீன் காக்காவுடைய இந்த அனுபவக் கதைகளை பலரும் அவரிடமிருந்து கேட்டிருக்கின்றனர்

உண்மை இப்படி இருக்க 1936ஆம் ஆண்டு முதல் 1938வரை  அவர் “கவிஞன் குடிசை” என்ற நூலகம் வைத்திருந்தார் என்று சொல்வதெல்லாம் வெறும் கட்டுக்கதை. “கவிஞன் குடிசை” என்ற ஒரு குடில் இருந்தது உண்மை. ஆனால் வாய்வழிச் செய்திகளாய் குறிப்பிடப்படும் ஆண்டு, அதில் நடந்த நிகழ்வுகள், நடந்த உரையாடல் யாவும் முன்னுக்குப்பின் முரணானச் செய்திகள். 

கற்பனைக்குச் சுவை கூட்ட வேண்டி கவிஞர் குடிசைக்கு 1936ஆம் ஆண்டு, (அதாவது கலைஞர் 5ஆம் வகுப்பு படிக்கையில்) ஒவ்வொரு வாரமும் விடுமுறையின்போது “கவிஞன் குடிசைக்கு வந்து விடுவார், எப்போது பார்த்தாலும் அங்கு நூல்களையே படித்துக் கொண்டிருப்பார் என்று கூறுவதெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட புனைவுகள்.

1942ஆம் ஆண்டு ரெங்கூனிலிருந்து திரும்பிய பிறகு ஆபிதீன் காக்கா தன்னிடம் இருந்த மிச்ச மீதி பணத்தைக்கொண்டு ஒரு குடிசை போட்டு அதற்கு “கவிஞன் குடிசை’ என்று பெயரும் வைத்து அங்கு ஒரு படிப்பகம் வைத்திருந்தது உண்மை. அந்த படிப்பகத்தில் ‘தாருல் இஸ்லாம், ‘குடியரசு, ‘பால்யன்’ போன்ற பத்திரிக்கைகள் பரப்பி வைக்கப்பட்டிருக்கும். நூலகம் போன்று நிறைய நூல்கள் எல்லாம் அங்கு இருந்ததில்லை. (பால்யன் இதழ் வெளிவந்தது 1944ஆம் ஆண்டு). புறம்போக்கு இடத்தில் கதவே இல்லாத ஒரு குடில் அது. வெறும் ஒரு திரைச்சீலை மாத்திரம் தொங்கும். அதில் பாதுகாப்பாக நூல்கள் வைக்க வசதிகள் கிடையாது. இவை யாவும் இசைமுரசு அவர்கள் வாயிலாக பெறப்பட்ட செய்திகளாகும்.    

1936ஆம் ஆண்டு கவிஞன் குடிசையில் கூட்டாஞ்சோறு நடக்கும், ஒவ்வொரு வாரமும் கலைஞர் கவிஞன் குடிசைக்கு வந்து விடுவார்,  எப்போதும் அவர் நூலிலேயே மூழ்கி இருப்பார், அப்போது ஒருவர் “ஓய் கருணா நீம்பர் மதுரை தமிழ்ச் சங்கத்துக்கு அறிஞராக போறியுமா? அல்லது மெட்ராஸ் மாகாணத்துக்கு மந்திரியாகப் போறியுமா?” என்பார். அச்சமயம் இன்னொருவர் “கருணா – கரு நா” என்று சிலேடையிலேயே சொல்லாடல் ஆடுவார் என்று சொல்வதெல்லாம் வாய் வழியாக பல காலமாக சொல்லப்பட்டு வரும் பொழுதுபோக்கு கதைகள்.

1969ஆம் ஆண்டு அண்ணாவின் மறைவுக்குப் பின் கலைஞர் அவர்கள் முதன் முறை தமிழக முதலமைச்சராக பதவியேற்றபோது நாகூரில் வாழ்ந்த முதியவர்கள் சிலர், முதலமைச்சருடன் தனக்கு நெருக்கம் இருந்தது என்பதைக் காட்டிக் கொள்வதற்காக ‘கலைஞர் – புலவர் ஆபிதீன் – நாகூர் ஹனிபா” இவர்கள் மூவரையும் இணைத்து தாங்களே நேரில் பார்த்ததுபோல் பல கட்டுக்கதைகளை இட்டுக்கட்டி புனைவதை சிறுவயதில் நண்பர்கள் நாங்கள் அனைவரும் நிறையவே கேட்டு ரசித்திருக்கிறோம்)   

ஒரு கால கட்டத்தில் கேட்ட இக்கதைகளை எல்லாம் அவரவர்கள்  பங்குக்கு கற்பனை உரையாடல்களையும் சேர்த்து பரப்பி விட்டார்கள். நேரில் இந்தக் காட்சிகளை எல்லாம் கண்கூடாகக் கண்டதாக  உள்ளுரில் கூறும் ஒருவர் 1936ஆம் ஆண்டில் ஒரு வயது பச்சிளங் குழந்தை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.  இது கோயபல்ஸ் கோட்பாட்டை நமக்கு நினைவுறுத்துகிறது. .

1936 அல்லது 1938ஆம் வருடம் கவிஞன் குடிசை பற்றிய தகவல்கள் வெறும் கட்டுக்கதைகள் என்பதற்கு கீழ்க்கண்ட சான்றுகளே போதுமானவை.

1.   இசைமுரசு நாகூர் ஹனிபா அவர்கள் ஏப்ரல் 2015 மறைந்தபோது கலைஞர் தன் பேட்டியில் எங்களுடைய நட்பு 75 ஆண்டுகால நட்பு என்று குறிப்பிட்டார். அவருக்கிருந்த அபார நினைவாற்றல் எல்லோரும் அறிந்ததே. 75 ஆண்டுகால நட்பு என்றால் 1940 முதல் தொடங்கிய நட்பு என்று பொருள். 100 நூல்களுக்கு மேல் எழுதியிருக்கும் வரலாற்றாசிரியர் செ.திவான் எழுதிய நூல்களிலும் இது காணப்படுகிறது. செ.திவான் திரட்டிய தரவுகள் அண்ணா அறிவாலயம் ஆவண காப்பகத்திலிருந்து பெறப்பட்டதாகும்.

2.   1940-ஆம் ஆண்டில்தான் திருவாரூர் ஒடம்போக்கி ஆற்றுமணலில் நடந்த பொதுக்கூட்டத்தின் போது அவர்கள் இருவருடைய நட்பு மலர்ந்தது. அதே ஆண்டில்தான் நீதிக்கட்சி தலைவர் பன்னீர்செல்வம் மறைந்தபோது ஆபிதீன் காக்கா எழுதிய “பரகதி அடைந்தனையோ பன்னீர் செல்வமே” என்ற பாடலைப் பாடியது. இப்பாடலை அவர் பர்மாவில் இருந்தபோது எழுதி அனுப்பியது என்று சொல்கிறார்கள்.

3.   22.05.1938-ல் மீலாது விழா கூத்தாநல்லூரில் நடந்தது. கான் பகதூர் கலீபுல்லா சாகிப் தலைமையில் நடைபெற்ற அந்த மீலாது விழாவில் தந்தை பெரியார் கலந்துக் கொண்டார். தொண்டராக நாகூர் ஹனிபா பங்கு கொண்டார். அச்சமயம் கலைஞருக்கும் அவருக்கும் நட்பு மலரவே இல்லை. ஆபிதீன் காக்காவும் அப்போது இந்தியாவில் இல்லை.

அறிவாலயம் ஆவணக் காப்பகத்தில் உள்ள குறிப்புகளில் 1939ஆம் வருடம் கலைஞர் 8ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார் என்று காணப்படுகிறது. அப்படியென்றால் 1936ஆம் ஆண்டு அவர் 5ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் சிறுவனாக இருந்தார் என்பதும் உறுதியாகிறது.  

கலைஞர் தனது வாலிபப் பருவத்தில் நாகூர் அடிக்கடி வந்துப் போனது உண்மை. கெளதியா தஃப்ஸ் குழுவிலிருந்த இளைஞர்களுடன் நட்பு கொண்டிருந்தது உண்மை. “கவிஞன் குடிசை” என்ற பெயரில் ஒரு படிப்பகம் இருந்ததும் உண்மை.

ஆளுமைகளைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளை பதிவு செய்கையில் ஆதாரத்துடன் கூடிய செய்திகளை மட்டுமே பதிவு செய்தல் வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இதனை எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் திரும்பத் திரும்ப சொல்லப்படும் ஆதாரமற்றச் செய்திகள் வரலாறாகிவிடும். ஒளரங்கசீப், திப்பு சுல்தான் போன்றோர்களின் வரலாறு ஆனதைப்  போல. .

1942ஆம் வருடம் பர்மாவிலிருந்து திரும்பிய புலவர் ஆபிதீன் வாழ்வாதாரம் தேடி திரும்பவும் 1947ஆம் ஆண்டு சிங்கப்பூர் சென்றுவிட்டார். அங்கும் அவர் பார்க்காத தொழில்கள் இல்லை. ஆபிதீன் சிறந்த ஓவியராக இருந்தார் என்பதை முன்பே நாம் பார்த்தோம். சிங்கப்பூரில் அவர் விளம்பரப் பலகையில் வரையும் ஓவியராக பணி புரிந்தார். ரெங்கூனில் அவருக்கு கிடைத்தது போன்றே அவருக்குப் பிடித்தமான எழுத்துப் பணி கிடைத்தது, மலேயா நண்பன் என்ற நாளிதழில் பணி கிடைத்தது. பிறகு துணை ஆசிரியராக அவருக்கு பதவி உயர்வு கிடைத்தது. ஒரு சில ஆண்டுகள் கழித்து அவரது சீரிய பணியாலும், எழுத்துத் திறமையாலும், கடும் உழைப்பாலும் நிர்வாக ஆசிரியராக நல்ல நிலைமைக்கு வந்தார்.

அதன் பிறகு 1949-ஆம் ஆண்டு ஆபிதீன் கொழும்புக்குச் சென்றார். அங்கும் ஒரு தமிழ் பத்திரிக்கையில் அவருக்கு வேலை கிடைத்தது, அங்குதான் அவரது ‘தேன்கூடு’என்ற கவிதைத் தொகுதி  1949ஆம் ஆண்டு   வெளியிடப்பட்டது, அப்போதுதான் அவர் ‘புலவர் ஆபிதீன்” என்ற பெயரில் பிரபலமானார், பிரபலமும் ஆனார்.

மறுபடியும் அவர் நாகூர் திரும்பினார். 1960ஆம் ஆன்டு “அழகின் முன் அறிவு”, 1961ஆம் ஆண்டு “முஸ்லீம் லீக் பாடல்கள்”  ஆகிய அவரது நூல்கள் வெளியாயின. கெளதியா பைத்து சபா புலவராக அவர் பிரபலமானது இக்காலகட்டத்தில்தான். பாடல்கள் எழுதியும் மேடைக் கச்சேரிகள் செய்தும், ஓவியம் வரைந்தும்,  நாடகங்களுக்கு கதை வசனம் எழுதியும்,  நாடகங்களில் நடித்ததோடு மட்டுமன்றி நாகூரில் “பயோனியர் வாட்ச்’ என்றகடிகார கம்பேனியில் விற்பனை பிரதிநிதியாகவும் பணியாற்றினார்.

நன்றாக பாடும் திறன் கொண்ட ஆபிதீன் எப்போது தன்னைவிட ஒரு சிறந்த பாடகரான,  வெண்கலக்குரல் கொண்ட நாகூர் ஹனிபாவைக் கண்டுக் கொண்டாரோ அன்று முதல் தான் மேடைக் கச்சேரி செய்வதை நிறுத்திக் கொண்டார்.

நாகூர் ஹனிபாவுக்கு அதிகமான பாடல்கள் எழுதிக் கொடுத்த புலவர் ஆபிதீன் அவர்கள்தான்.  இந்த இமாலயச் சாதனையை இசைமுரசு இ.எம்.ஹனிபாவின் இறுதிக்காலம் வரை வேறு யாராலும் முறியடிக்கவே முடியவில்லை.

தொடரும்
நாகூர் அப்துல் கையூம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *