தீன் தமிழ்க் கவிஞன் ஆபிதீன் – பாகம் 2/4

முதல் பாகத்தை பார்க்க

தீன் தமிழ்க் கவிஞன் ஆபிதீன் 2/4

புலவர் ஆபிதீன் 1916-ஆம் ஆண்டு நாகூரில் பிறந்தவர் நாகூர் தர்காவின் ஆஸ்தான புலவராகத் திகழ்ந்தவர். அவரது படைப்புகளை செவ்வென ஆராய்ந்து ஏராளமான தகவல்களைத் திரட்டித் தந்த பெருமை நாகூர் சொல்லரசு மு. ஜாபர் முகைதீன் அவர்களைச் சாரும் இவர் ஒரு நடமாடும் கலைக் களஞ்சியமாகத் திகழ்ந்தார் என்றால் அது மிகையாகாது. அவர் தனது வீட்டில் பராமரித்து வந்த நூலகத்தில் ஏராளமான அரிய நூல்கள் சேகரித்து வைத்திருந்ததைக் கண்டு நான் பிரமித்துப் போயிருக்கிறேன். புலவர் ஆபிதீன் 4,000-க்கு மேற்பட்ட பாடல்கள் எழுதியிருக்கிறார் என்பது மறைந்த சொல்லரசு ஜாபர் அண்ணன் தரும் நம்பகரமான தகவல்.

ஆபிதீன் ஒரு புலவர் மட்டுமல்ல. அவர் ஒரு முத்தமிழ் வித்தகர்கூட. பாடல்கள் எழுதினார். மேடைகளில் தானே பாடினார். நாடகங்கள் எழுதினார். தானே நடித்தார். எழுத்தாளர், இதழாளர், இதழாசிரியர். ஓவியங்கள் தீட்டுவார், அச்சுக் கோர்ப்பார். ஆங்கிலம், உருது, மலாய், பர்மி, சிங்கள மொழிகள் தெரியும் என்று அவரது பன்முகத் தன்மையை ஊரறிய உலகறிய வெளிக் கொணர்கிறார் சொல்லரசர்.

ஆபிதீனைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளை முறையே பதிவு செய்து உலகுக்கு அறிவித்ததில் எம்.ஆர்,அப்துற்றஹீம் மற்றும் ஆர்,பி,எம்,கனி இவர்கள் இருவருக்கும் சமபங்கு உண்டு,

புலவர் ஆபிதீனின் தந்தையார் பெயர் முகம்மது உசைன் சாகிபு மரைக்காயர். தாயார் பெயர் சுல்தான் கனி அம்மையார். உடன் பிறந்தோர், ஒரு சகோதரர், இரு சகோதரிகள். இவர் படித்தது நாகூர் கெளதியா நடுநிலைப்பள்ளியில்.

நான் ஏற்கனவே சொன்னதைப் போல ஆபிதீன் செய்யாத தொழிலே கிடையாது, வாய்ப்பை சாதகமாக்கிக் கொள்ள, வாழ்வாதரத்திற்கு வேண்டி அத்தனை விதமான தொழில்களையும் அவர் முயன்று பார்த்தார். ஏதாவதொரு தொழில் தனக்கு கை கொடுக்காதா என்ற எதிர்ப்பார்ப்பில் வாழ்வில் ஏற்றமுற எண்ணி எதிர்நீச்சல் அடித்தார். அவரது அத்தனை முயற்சிகளும் விழலுக்கு இறைத்த நீராகவே வீணாய்ப் போனது,

“ஒரு பெரும் மேதைக்கு வேண்டிய எல்லா அம்சங்களும் என்னிடம் உண்டு. உடம்பும் பணமும்தான் குறை”. இது புலவர் ஆபிதீன், அவரைப் பற்றி அவரே செய்துக் கொண்ட சுயவிமர்சனம். புலவரின் வாக்குமூலத்தை அறிஞர் R.P.M கனி அவர்கள் தனது ‘இஸ்லாமிய இலக்கியக் கருவூலம்’ (1963) என்ற நூலில் குறிப்பிடுகிறார்,

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை யறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை யறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தான் இருந்தானே !

என்கிறது திருமந்திரம், ஆபிதீன் தன்னை அறிந்தவர், தனக்குத் தானே சுய அலசல் செய்துக் கொண்டவர். செய்துக் கொண்ட சுய பரிசோதனையின் காரணமாக தன் பலம் எது, பலவீனம் எது என்பதை நன்குற அறிந்தவர். கண்மூடித்தனமாக வெறும் கனவுலகில் மிதந்தவரில்லை. எதார்த்தம் புரிந்தவர், உழைக்க மனமிருந்தும், உள்ளத்தில் திடனிருந்தும், பொருளாதாரத்தில் அவர் முன்னேற முடியாமல் போனது எப்படி என்பது நமக்கு புரியாதப் புதிர்.

நாகூர் ஹனிபா ஏராளமான பேட்டிகளில் புலவர் ஆபிதீனை தன்னுடைய ‘குருநாதர்’ என்றே மரியாதை தொனிக்க குறிப்பிட்டிருக்கிறார். 1986-ஆம் ஆண்டு முஸ்லிம் முரசு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் “என்னுடைய மரியாதைக்குரிய ஆசிரியர்” என்று குறிப்பிடுகிறார்

புலவர் ஆபிதீன் எழுதிய பாடலைக் கேட்டு கூடியிருந்த ஆயிரக்கணக்கானோர் ஓ’வென்று கதறி அழுத கதை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இந்த நிகழ்வை உங்களுக்கு சித்தரிக்கும் முன்பு தமிழர் செல்வம் சர் ஏ,டி,பன்னீர் செல்வத்தைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பது அவசியம்.

1930, 1931 களில் பிரிட்டனில் கூடிய முதலாவது மற்றும் இரண்டாவது வட்ட மேசை மாநாடுகளில் கலந்துக்கொண்டு திராவிடர்களுக்காகாக வாதாடிய பார்-அட்-லா பட்டம் பெற்ற வழக்கறிஞர் சர் ஏ.டி.பன்னீர் செல்வம். 1937-ல் சென்னை மாகாணத்தின் உள்துறை மற்றும் நீதித்துறை அமைச்சர் பதவிகள் வகித்தவர்.

இது இந்திய சுதந்திரத்திற்கு முன்பான வரலாறு. இங்கிலாந்தில் போர்க்கால அமைச்சரவை ஏற்பட்டது. இந்திய அமைச்சருக்கு உதவியாக ஏற்படுத்தப்பட்ட ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் 10.01.1940-ல் நியமிக்கப்பட்டார்.

1.3.1940 அன்று பன்னீர் செல்வத்தை ஏற்றிக்கொண்டு பம்பாயிலிருந்து கறாச்சி பின்னர் கறாச்சியிலிருந்து லண்டனுக்கு புறப்பட்ட ‘அனிபால்’ விமானம் ஒமான் தீபகற்பத்தின் அருகில் வளைகுடா பகுதியில் விபத்துக்குள்ளாகி அவரது மரணச் செய்தி தமிழகத்தை எட்டியது. தமிழகமே சோகத்திற்குள்ளானது. ஒவ்வொரு ஊர்களிலும் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. திருவாரூரில் நடைப்பெற்ற இரங்கல் கூட்டத்தில் புலவர் ஆபிதீன் எழுதிய பாடலை எட்டுக்கட்டை சுருதியில் கலங்கிய கண்களுடன் நாகூர் ஹனிபா பாடுகிறார்.

பரகதி சேர்ந்தனையோ பன்னீர் செல்வமே
தஞ்சை பனையூர் தலைமையும் போச்சே
தமிழரின் நெஞ்சம் துடித்திட லாச்சே

ஹனீபாவின் கம்பீரக் குரலும், அந்தப் பாடலில் பொதிந்திருந்த ஆழமான சோகமான மனமுருகும் ஆபிதீனின் வரிகளும் எல்லோருடைய உள்ளத்தையும் போட்டு உலுக்கியது. அந்தச் சபையே கண்ணீர்க் கடலில் மூழ்கியது. அங்கு குழுமியிருந்த அத்தனைப் பேரும் வாய் விட்டு அழத் தொடங்கி விடுகிறார்கள். அந்தப் பாடலின் தாக்கத்திற்கு காரணம் புலவரின் மனதைப் பிழியும் வரிகளா அல்லது நாகூர் ஹனிபாவின் பிசிறில்லாத சோகத்தைப் பிழியும் உச்ச ஸ்தாயி சிம்மக் குரல்வளமா என்று தெரியவில்லை.

நாகூர் ஹனிபா, புலவர் ஆபிதீன் இவர்கள் இருவரையும் இரட்டையர் என்றே அழைத்தனர். எப்படி விஸ்வநாதன் – ராமமூர்த்திக்கும் கண்ணதாசனுக்கும் இடையே ஒருவித கெமிஸ்ட்ரி வொர்க்அவுட் ஆனதோ, எப்படி இளையராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் இடையே ஒரு அபாரமான புரிதல் இருந்ததோ அதுபோல நாகூர் ஹனிபாவுக்கும் புலவர் ஆபிதீனுக்கும் இடையே ஒருவித எண்ண அலைகள் ஒருமித்து ஒத்துப் போயின.

இருவருமே பெரியார் பித்தனாக இருந்தனர். பெரியாரின் புரட்சிக் கருத்துக்களில் ஊறிப் போயிருந்தனர், திராவிடச் சிந்தனைகள் மேலோங்கி இருந்தன, இருவரும் “குடியரசு’ பத்திரிக்கை கையுமாகவே அலைந்தனர்.

இப்பொழுதெல்லாம் யாராவது ஒருவர் நல்லதொரு பதிவு போட்டால் உடனே அதை கட் & பேஸ்ட் செய்து முகநூலில் தன் பெயரைப் போட்டு பதிவேற்றி விடுகிறார்கள் இதுபோன்று “ஆப்பு” வைக்கும் வைபவம் எனக்கே பலமுறை நிகழ்ந்திருக்கிறது. இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்தோ என்னவோ புலவர் ஆபிதீன் ஏராளமான பாடல்களில் தன் பெயரையும் பாடலுக்கிடையில் திறம்பட சேர்ப்பதில் வழக்கமாக்கி வைத்திருந்தார். உருது கஜல் பாடல்களில் இதுபோன்ற வழக்கத்தை உருதுக் கவிஞர்கள் பின்பற்றி வந்தனர்.

இதோ பெரியாரைப் பற்றி நம் புலவர் எழுதிய பாடல், வெண்கலக் குரலோன் நாகூர் ஹனிபாவின் குரலில் மேடைகள்தோறும் ஒலிபெருக்கியில் முழங்கியது,

பேரறிவாளர் அவர் பெரியார் எனும் ஈவேரா
ஆரறிவார் பெருமை தமிழா,
ஆபிதீன் சொல் ஈவெரா தமிழா
ஆபிதீன் சொல் ஈவெரா !

தூங்கிக் கிடந்த உன்னை தூக்கித் துடைத்தணைத்து
தாங்கித் தரைமேல் இட்டார் – தமிழா
தாத்தாவாம் ஈவெராவே – தமிழா
தாத்தாவாம் ஈவெராவே !

வேதியர் கண்கள் முன்னே
வேஷ்டிகளை அணிந்து
வீதி உலாவச் செய்தார் – தமிழா
வீரராம் ஈவெராவே – தமிழா
வீரராம் ஈவெராவே !

புரோகிதப் புற்றுக் கையை
புகுத்த தருமத்திற்கு
விரோதம் என்றே கூறிட்டார்
வித்தகர் ஈவெராவே – தமிழா
வித்தகர் ஈவெராவே !

இப்பாடல் அக்காலத்தில் எல்லோருடைய உதட்டிலும் தவழ்ந்தது. எல்லோரையும் முணுமுணுக்க வைத்தது. பெரியார் எனும் ஆளுமையை பிரமாண்டமாக்கியது.

ஆபிதீன் காக்காவுடைய எழுத்தாற்றலை எடுத்துக் கூற இதில் காணும் இந்த இரண்டு வரிகளே போதுமானது எனலாம். எத்தனை விஷயங்களை உள்ளடக்கி விட்டது கீழ்க்காணும் இவ்வரிகள்.

“தூங்கிக் கிடந்த உன்னை துடைத்தணைத்து
தாங்கித் தரைமேல் இட்டார்”

ஆஹா! என்னவொரு அருமையான சொல்லாடல்!!!!

சற்றே கண்ணயர்ந்து தூங்குவது வேறு. கண்முன் நடக்கும் அக்கிரமத்தை சகித்துக் கொண்டு கண்டும் காணாததுபோல் கண்மூடித் தூங்குவது வேறு.

“தூங்கிக் கிடந்த உன்னை” என்று விளிப்பதன் மூலம் “உணர்ச்சியற்ற பிண்டமாக உறங்கிக் கொண்டிருக்கின்றாயே தமிழா!” என்று ஒடுக்கப்பட்டவர்களை பார்த்து உணர்வூட்டும் வகையில் உசுப்பி விடுகிறார் நம் புலவர்.

“தூங்காதே தம்பி தூங்காதே” என்று பாடலெழுதிய கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

“நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள்
நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்”

என்று சமுதாயத்தைப் பார்த்து குற்றம் கூறுவார். ஆனால் ஆபிதீன் காக்கா அவர்களோ….

“தூங்கிக் கிடந்த உன்னைத் துடைத்தணைத்து” என்ற முதல் வரியில் பல அவலங்களை உள்ளடக்கி விட்டார். தூங்கிக் கிடந்தான் அந்த ஒடுக்கப்பட்டவன். சரி. ஏன் அவனை துடைத்து அணைக்க வேண்டும்.?

“நீ எங்களோடு சமமாக நின்று பேசக்கூட லாயக்கற்றவன் .உன்னைத் தொட்டாலே தீட்டு. நீ மல ஜலம் அள்ளத்தான் லாயக்கு” என்று சாடப்பட்டு சகதியில் கிடந்தவனை “துடைத்தார்” பெரியார் என வர்ணித்திருப்பது அம்சம். “துடைக்க” மட்டுமல்ல “அணைத்தார்” என்று புலவர் கூறுவது அதைவிட சிறப்பம்சம்.

எல்லோரும் எல்லோரையும் அணைத்துக் கொள்ள மாட்டார்கள். “நான் உயர் சாதி; நீ கீழ் சாதி” என்று வேற்றுமை காட்டுபவன் ஒருபோதும் அணைத்துக் கொள்ள மாட்டான். மீண்டும் அந்த வரிகளை கூர்ந்து கவனியுங்கள்.

தூங்கிக் கிடந்த உன்னை துடைத்தணைத்து
தாங்கித் தரைமேல் இட்டார்

தூங்கிக் கிடந்த அவனை தந்தை பெரியார் துடைத்ததோடு நிற்காமல், அணைத்ததோடு நிற்காமல், “தாங்கியும்” கொண்டார்.

யாரைத் தாங்கிப் பிடிப்பார்கள்? என்ன செய்வதென்று குழம்பித் தடுமாறுபவனை, ஒடுக்கப்பட்டவனை கைத்தாங்கலாக தூக்கி அணைத்து ஒரு சமூக அந்தஸ்த்தை கொடுத்தவர் பெரியார் என்பதை புலவர் ஆபிதீன் கோடிட்டுக் காட்டுகிறார்,

அடுத்த வரியைக் கவனியுங்கள். தூங்கிக் கிடந்தவனை துடைத்தெடுத்தார்; அரவணைத்தார்; தாங்கிப் பிடித்தார். இப்பொழுது என்ன செய்தார் தெரியுமா?

“தரைமேல் இட்டார்”. அவனைத் தரைமேல் இட்டார் என்று சொன்னால் அவன் ஏற்கனவே பள்ளத்தில் கிடந்தான் என்றுதானே பொருள்? படுபாதாளத்தில் கிடந்த ஒரு சமுதாயத்தை மேலே கொண்டு வந்தார் பெரியார் என்பதை கவிஞர் எவ்வளவு லாவகமாக கூறுகிறார் என்பதை நாம் ரசிக்க முடிகிறது.

இரண்டே வரிகளில் ஒரு கவிஞன் இத்தனை விஷயங்களை உள்ளடக்க முடியும் என்பதற்கு ஆபிதீன் காக்கா அவர்களுடைய எழுத்தாற்றலே சிறப்பான சான்று.

வறுமையில் வாடியபோதும் வளமான சிந்தனைக்கு ஒருபோதும் அவரிடத்தில் பஞ்சமில்லை. வார்த்தைகளை வசப்படுத்தத் தெரிந்த மோடி மஸ்தான். விரலாலேயே சொற்களைச் சொடுக்கி வித்தைக் காட்டத் தெரிந்தவர் இவர்தான்.
.
திராவிட இயக்கம் பரவலாகிக் கொண்டிருந்தக் காலத்தில் பெரியாரைப் பற்றி நாகூர் E.M.ஹனிபா அவர்கள் பாடிய பாடல்கள் தமிழகமெங்கும் மாற்றங்களை விளைவித்துக் கொண்டிருந்தது.

ஆபிதீன் ஆத்திகரா? நாத்திகரா?

ஆபிதீன் ஆத்திகரா நாத்திகரா என்று அவர் பாடல்களை மேலோட்டமாக மட்டுமே மேய்ந்து குழம்பிப் போனவர்கள் உண்டு.

புலவர் ஆபிதீனின் சிந்தனை எப்போதும் சற்று வித்தியாசமாகவே இருக்கும். அவருடைய சிந்தனைக் கோணத்தை மேலோட்டமாக பார்க்கையில் நேரான பாதையை விட்டு விலகியோடுவதாக தோற்றமளிக்கும். ஆனால் பொருளுணர்ந்து விளங்குபவர்களுக்கு அதன் உள்ளர்த்தம் தெளிவாகவே புரியும்.

கவிஞர்கள் தங்களை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப் படுத்திக் காண்பிப்பதற்காகவே குதர்க்கமாக சிந்திப்பார்களோ என்னவோ எனக்குத் தெரியாது. குதர்க்கமாக கேள்வி கேட்டபின் புத்திசாலித்தனமாக பதில் சொன்னால் அதை ஏற்றுக் கொள்ளலாம். அதை கேள்விக்குறியாகவே விட்டுச் சென்றால்……? நமக்கு அதற்கு பதில் சொல்லத் தெரியாமல் போனாலும், அந்த கவிதையை புரிந்துக் கொள்ளும் அளவுக்கு நமக்கு ஞானம் இல்லை என்று நழுவிச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை. குதர்க்கமான சிந்தனைகளுக்கு நாம் விளக்கம் கேட்கப்போய், பதிலானது அதைவிட குதர்க்கமாக வந்தால் நாம் எங்கே போய் முட்டிக் கொள்வது.

அண்மையில் நான் படித்த புலவர் ஆபிதீன் அவர்களுடைய “கருணையுள இறையவனே!” என்ற கவிதையை படித்து நான் மிகவும் குழம்பிப் போய்விட்டேன், அவர் “ஆத்திகரா? இல்லை நாத்திகரா?” என்று என் மனதுக்குள் சிறிய பட்டிமன்றம் கூட வைத்துப் பார்த்தேன். தொடக்கத்தில் குழம்பிப் போனாலும் கூட கடைசி வரிகளை படித்தபின்தான் எனக்குள்ளிருந்து ஒரு நிம்மதி பெருமூச்சு வந்தது.

எல்லாமுன் செயலென்று
ஏற்கவிலை; ஏனென்றால்,
எல்லாமே நீ செய்தால்,
ஏன்பின்னர் தண்டனையே?

என்கிறார் புலவர். எல்லாமே இறைவனின் நாட்டப்படிதான் நடக்கின்றது என்று இஸ்லாமியர்கள் சொல்லுகிறார்கள். “எல்லாம் அவன் செயல்” என்று இந்துமதம்கூட அறிவுறுத்துகிறது. ஆனால் புலவர் ஆபிதீன் மட்டும் இந்த உண்மையை ஏற்க மறுக்கிறார். அதற்கு அவர் கேட்கும் கேள்வியும் நியாயம்போல் தெரிகிறது. “எல்லாமே அவன் செயல் என்றால் பிறகு எதற்காக இறைவன் நமக்கு தண்டனை வழங்க வேண்டும்?” “எதற்காக இந்தக் கேள்வி, கணக்கு? எதற்காக இம்மை மறுமை? எதற்காக சுவர்க்கம் நரகம்? எதற்காக இறுதி நாள் தீர்ப்பு?

புலவர் ஆபிதீனின் ஒரு சின்ன கேள்விக்குள் இத்தனை துணைக்கேள்விகளும் அடங்கி விடுகின்றன. புலவருக்கு பைத்தியம் கீத்தியம் பிடித்து விட்டதா? இவர் ஆத்திகரா? நாத்திகரா? ஏன் இந்த குதர்க்கமான கேள்வி? நம் ஈமானையே ஆட்டம் காண வைக்கும் கேள்வியல்லவா இது? என்று நாம் குழப்பத்தில் ஆழ்ந்து விடுகின்றோம். அடுத்துவரும் வரிகளை பாருங்கள்:

என்னுள்ளே இருப்பதுவாய்
எண்ணவிலை; ஏய்க்கவிலை
என்னுள்ளே சிக்கியபின்
எத்தவமும் அவசியமோ?

என்று பாடுகிறார் புலவர். “பிடறி நரம்பைவிட சமீபமாக இறைவன் இருக்கின்றான்” என்கிறது இஸ்லாம், “இறைவன் உனக்குள் இருக்கிறான்” என்கின்றது இந்துமதம்.

புலவர் ஆபிதீனுக்கு மாத்திரம் வரக்கூடாத சந்தேகம் ஒன்று வந்து அவரை ஆட்டிப் படைக்கின்றது, அவருக்குள் இறைவன் இருப்பதாக அவர் நினைக்கவில்லையாம். அவர் கூறும் காரணமும் நம்முடைய சிந்தனையைத் தூண்டுகின்றது. “நமக்குள் இறைவன்” என்று ஆகிவிட்டபோது மனிதன் ஏன் இறைவனை வழிபட கோயிலுக்கும், பள்ளிவாயிலுக்கும் சென்று வரவேண்டும்? “புலவரே! உங்களுக்கு சிந்தனை வருவதென்னவோ நியாயம்தான். அதற்காக எங்களை ஏன் வீணாக போட்டு குழப்புகின்றீர்” என்று அவரைப் பார்த்து நமக்கு கேட்கத் தோன்றுகிறது

எங்கெங்கும் நிறைந்தவனாய்
எப்பொழுதும் நம்பவில்லை.
எங்கெங்கும் நீயிருந்தால்
எவ்வுருவும் உனதலவோ?

என்று பாடுகின்றார். அப்படியென்றால் “எங்கும் நிறைந்தவனே அல்லாஹ்! அல்லாஹ்!. எல்லாம் அறிந்தவனே சுபுஹானல்லாஹ்” என்ற பாடல் பொய்யா? “இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்” என்கிறதே இந்துமதம். எங்கும் இறைவன் நிறைந்திருக்கிறான் என்று சொன்னால் காற்று, நீர் மழை, சந்திரன், சூரியன் எல்லாமே இறைவன்தான் என்றுதானே அர்த்தம்? அப்படியென்றால் அவைகளை வணங்குவது எப்படி தப்பாகும்? என்ற விஷமத்தனமான ஒரு கேள்வியை சூசகமாக எழுப்பிவிட்டு நம்மை பாடாய்ப் படுத்துகிறார் புலவர் ஆபிதீன்.

கண்ணுக்குள் மணியாயும்
கருதியதுங் கிடையாது
கண்ணுக்குள் மணியானால்
காரிருளில் செயலெங்கே?

இறைவன் கல்புக்குள் இருக்கிறான் என்பார்கள் சிலர். கண்ணின் மணியாய் இருக்கின்றான் என்பார்கள் வேறுசிலர். “கண்ணுக்குள் மணியானால் பயங்கரமான இருட்டிலும் நம் கண்கள் காண வேண்டுமே? இப்படியெல்லாம் நம்மை போட்டுக் குழப்பும் புலவரின் மீது நமக்கு ஆத்திரம் ஆத்திரமாக வருகின்றது, இவருடைய கவிதையை படிப்பதற்கு பதிலாக படிக்காமலேயே இருந்திருக்கலாம். படித்ததினால்தானே இத்தனை குழப்பமும், வீண் சந்தேகங்களும்?

இறுதியாக அவர் வடிக்கும் வரிகளில்தான் கிளைமாக்ஸ் அடங்கி இருக்கின்றது.

கண்ணாலும் காண்பவெலாம்
கட்டாயம் அழியுமாதல்,
கண்ணாலும் காணொண்ணாக்
கருணையுள இறையவனே!

இதைப் படித்து முடித்த பிறகுதான் அவர் ஈமான் மீது நமக்கு நம்பிக்கையே துளிர்விடுகின்றது. நமக்கு தெளிவும் பிறக்கின்றது.

ஏன் இறைவன் அரூபமாக இருக்கின்றான் என்பது மில்லியன் டாலர் கேள்வி. மனிதன் இறைவனை நம்ப வேண்டும் என்று இறைவன் நினைத்திருந்தால் அவனுக்கு அது ஒரு சாதாரண விஷயம். ஒரே ஒரு முறை அவன் எல்லோருக்கு முன்பும் வானத்தில் தோன்றி “நான்தான் இறைவன்” என்று நமக்கு வெளிக்காட்டியிருந்தால் பிரச்சினையே இல்லையே. உலகத்தில் எந்த நாத்திகனும் இருக்க மாட்டான். எவனும் பாவம் செய்ய மாட்டான். மோசம் செய்ய மாட்டான், ஊரார் பொருளை கொள்ளையடிக்க மாட்டான். சூது, வாது, கொலை, கொள்ளை எதுவும் உலகில் நிகழாது. எல்லா காவல் நிலையங்களையும் அடைத்துவிட்டு இந்த போலீஸ்காரர்களையெல்லாம் பேசாமல் வீட்டுக்கு அனுப்பி விடலாம்.

புலவர் ஆபிதீனின் இறுதி வாக்கியம் எந்த ஒரு நாத்திகனையும் ஆத்திகனாக்கி விடும், அவனை இறைவன்பால் சிந்திக்க வைத்துவிடும்.

நம் கண்கள் காணும் காட்சிகள் யாவும் உண்மையல்ல. அண்ணாந்து வானத்தைப் பார்க்கையில் ஒரு பெரிய கொட்டாங்கச்சியை பூமிமீது கவிழ்த்து வைத்ததுபோல் தெரிகின்றது. நிலவைப் பார்த்தால் அதற்குள் ஏதோ பிரகாசமான பல்பு எரிவது போலிருக்கின்றது. வெட்டவெளியில் நடந்துக்கொண்டே நிலவைப் பார்க்கையில் அதுவும் நம்மை பின்தொடர்ந்து வருவதுபோல் இருக்கின்றது. பாதையில் தூரத்தே தெரியும் நீரின் அருகில் சென்று பார்த்தால் அங்கு ஒண்ணுமே இல்லை. அது கானல் நீராம். நீல நிரத்தில் தெரியும் கடல்நீரை கையில் மொண்டு பார்த்தால் அதில் நீலநிறமே இருப்பதில்லை.

நாம் கண்ணால் காணும் காட்சிகள் யாவும் ஒரு நாள் அழியக் கூடியது. இந்த மரம், மலை, நதி, வாய்க்கால், மேகம், பூமி, மனிதன், பறவை, மிருகம் எல்லாமே அழியக்கூடிய வஸ்துக்கள். ஒரு சுனாமி, சூறைக்காற்று, வெள்ளப்பெருக்கு அல்லது பூகம்பம் போதாதா?

ஆனால் நம் கண்ணுக்கே புலப்படாத இறைவன் இருக்கின்றானே, அவனுக்கு அழிவென்பதே கிடையாது. அதனால்தான் அவனை Omniscient, Omnipotent, Omnipresent என்று துதிக்கிறோம். ஆதியும் அவன்தான், அந்தமும் அவன்தான். முதலும் அவனே முடிவும் அவனே.

அதனால்தான் அவன் யார் கண்ணிலும் அகப்படுவதில்லை. “Heard Melodies Are Sweet But Those Unheard Are Sweeter Still” என்று கூறுவான் ஆங்கிலக் கவிஞன் ஜான் கீட்ஸ்.

நம்முடைய ஞானக்கண்களை திறந்து வைத்த திருப்தியில் நமக்கு புலவர் ஆபிதீன் மீது ஏற்பட்ட அத்தனை கோபமும் நொடியில் காற்றோடு காற்றாக காணமல் கரைந்து போய்விடுகின்றது.

தொடரும்
நாகூர் அப்துல் கையூம்

2 thoughts on “தீன் தமிழ்க் கவிஞன் ஆபிதீன் – பாகம் 2/4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *