ஒரு முன்பனி இரவு முழுமையாக
சூரியனைத் தன் படுக்கையின்
போர்வைக்குள்ளிருந்து மெல்ல விடுவித்திருந்த வேளையில்..!
ஒரு பேருந்து நிலையத்தின்
படிக்கட்டில் உட்கார்ந்திருந்த
நிலையில் அங்கு தான் பார்த்தேன்..!
எப்படிப் பார்த்தேன்..?
நேற்று பெய்த பெருமழையில் இன்று தேங்கி நின்ற மழை நீரில்..!
வழக்கமாக நான் பார்ப்பது
இரவின் நிலாவை..!
அன்றோ…!
அந்த நொடியில்
அவள் முகம்..!
ஓரிரு நொடிதான்..!
அந்த முகம், தேங்கிய
நீருக்குள் இருந்து
என் நெஞ்சத்தில்
சிறகுகளின்றி
இடம்
பெயர்ந்தது நின்றது..!
எதிரெதிரே வரும் இரண்டு
பேருந்தில் எந்தப் பேருந்தில்
இவள் ஏறப்போகிறாள்
என்று இதயம் ஏங்கிக் கொண்டிருந்தது
அந்த வேளை..!
அதே வேளை கிழக்கே போகும் பேருந்தும் வந்து நின்றது..!
நானோ மேற்கல்லவா போகவேண்டும்..!
மேற்கே போனாலென்ன
கிழக்கே போனாலென்ன..!
கடைசியில் சேறுமிடம் ஒன்றுதானே..!
நானும் கிழக்கு போகும் பேருந்தில்
ஏறிக்கொண்டேன்..!
அவளுக்கு ஜன்னலோர இருக்கையில் இடம் கிடைத்தது..!
எனக்கும் இடம் இருந்தது
இருந்தும் நான்
இருக்கவில்லை
எனக்கோ
அவள் இதயத்தில்
அல்லவா
இடம் பிடிக்க வேண்டும்..!
அவளருகே நின்று கொண்டேன்..!
அவள்
பேருந்தின் வேகத்தில்
ஜன்னலின் வழியே
வரும் இயற்கையை ரசித்துக்கொண்டிருந்தாள்..!
நானோ ஜன்னலுக்கு உள்ளே வரும்
காற்றில் அவள் கூந்தலோடு
விளையாடும் காற்றைச்
சபித்துக்கொண்டிருந்தேன்..!
வலையோசை கலகலவென
கவிதைகள் படிக்குது
குளுகுளுத் தென்றல்
காற்றும் வீசுது பாடல்
சத்யாவிலிருந்து லதாமங்கேஷ்கர்
எஸ் பி யின் குரல் பேருந்தில்
ராகமிட்டுக்கொண்டிருக்க
பேருந்தின் சிறிய ஒரு
குலுக்கலில் அவள் காதுகளின்
கிளிக்கூண்டின் தோடுகள்
ஆடி மோகனராகம் மீட்டிக்கொண்டிருந்தது..!
திருவள்ளுவர் பூங்கா
ஒரு டிக்கெட் என்றாள்..!
சரிதானே..! பறவைகளும்
காதலர்களும் அங்குதானே
போகவேண்டும்..!
எனக்கும் ஒரு திருவள்ளுவர்
பூங்கா என்றேன்..!
நடத்துனரின் முகத்தில்
வெப்பம் மிகைத்து நின்றது
என் இமைகளைத் திருப்பி
வெப்பத்தைத் தனித்துக்கொண்டேன்.
இறங்கினாள்..!
பின்னாலிருந்து பார்க்கிறேன்
தேவலோகத்தின்
தேவதை நடக்கிறது..!
இரண்டடி நடந்தாள்..!
திரும்பினாள்..!
அவள் முகத்தில் கோபம் இல்லை
புன்னகை பூத்தது..!
இங்கே வாருங்கள்
என்னை ஏன் பின் தொடர்கிறீர்கள்..!
பூக்களை ஏன்
வண்ணத்துப்பூச்சி
பின் தொடர்கிறது..?
இந்த இக்கட்டான கேள்விக்கு
இயற்கையல்லவா பதில்
சொல்ல வேண்டும்..!
என் மௌனத்தின் வயது
ஓரிரு நிமிடங்களே..! அதற்க்குள்
என் கைகளைப் பற்றி
என்னோடு வாருங்கள்
என்று அந்த பூங்காவை
நோக்கி நடந்தாள்..!
மின்னலும்
மின்சாரமும் தாக்கினால்
உடல் செயலற்றுப் போக
சற்று தாமதமாகலாம்
அவள் விரல் தீண்டலால்
என் மூளைக்குள்
போன மின்சாரத்தின்
ஆம்பியர் அளவு அதிகமானதால்
ஒரே நொடியில் செயலற்றுப்போனேன்..!
திருவள்ளுவர் பூங்கா..!
பறவைகளுக்குத் தாய் வீடு..!
குழந்தைகள்
இரவில் கனவில்
விளையாடும் இடம்..!
காதலன் தன்
காதலியின் முகத்தில்
உள்ள சிறு மச்சத்தை
விண் மீன்களோடு சேர்த்து
கவிபாடுமிடம்.!
என்றோ தொலைத்த
தன் காதலின் மிச்சத்தைத்
தேடி அலையும் பைத்தியக்காரனுக்குச்
சுவர்க்க பூமி..!
இளமையைத் தொலைத்த
பெரியவர்கள்
முதுமையில்
அசைபோடுமிடம்..!
இவர் தான் அவர்
என்றாள் என்னிடம்..!
மின்சாரத்தின் தாக்கம்
தெளிந்து நிமிர்ந்து பார்த்தேன்
கண் பார்வையற்ற
ஒரு மனிதன்
ஒரு வெள்ளைப் பலகையில்
கலர்கலராய் ஓவியத்தில்
கவிபாடிக்கொண்டிருந்தான்..!
வான்கோவின் வாரிசு போல
நேர்த்தியாக இருந்தது
அவனது ஓவியம்.
மலைகளும், கடலும்
பறக்கின்ற பறவைகளும்
நடுவிலே ஒரு தீவில்
ஒரு பெண் உருவம்
அவள் பாடகி இன்னாவின்
கோக்கோகோலா பாடலில்
உள்ள கவர்ச்சியும்
கிளர்ச்சியும், உணர்ச்சியும்
போல மேலிட்டது அந்தப்
பெண்
ஓவியத்தில்..!
எப்படி இது சாத்தியம்
என்றேன் அவளிடம்..!
நீங்கள் கண்களால்
உலகையும், என்னையும்
ரசித்தீர்கள்..! ஆனால்
அவரோ உள்ளத்தால்
உருகி ரசிக்கிறார்..!
கண் பொய் சொல்லும்
உள்ளம் மெய்யே சொல்லும்..!
அதனால்தான் உள்ளத்தின்
ஊற்று அவருக்கு
பெருக்கெடுத்து ஓவியமாகிறது.
அவர் இலட்சியத்தின் ஊர் போக
இலக்கின் வாசலில் பயணிக்கிறார்
அவர் இலக்கில் குறிதப்பாமல் இருக்க நான் அவரோடு
வாழ்வில் பயணிக்கிறேன்
என்றாள்..!
நீங்களும் கண்களால்
அல்லாமல் இதயத்தால்
இந்த உலகை அளந்து பாருங்கள்
அந்தப் பயணத்தில்
அந்த லட்சியத்தில்
இலக்கின் வாசலில்
உங்களுக்காக
ஒரு தேவதை காத்திருப்பாள்
என்றாள்..!
அன்று
எனக்குள் உறங்கிய
இலட்சியப்பறவை
கனவு உறக்கம் கலைந்து
சிறகு முளைத்துப் பறந்தது..!
கதையும்
கற்பனையும்
கவிதையும்
ரஹமத்துல்லா.