தீன் தமிழ்க் கவிஞன் ஆபிதீன் – பாகம் 1/4

நாகூர் புலவர் ஆபிதீனைப் பற்றி ஏராளமானோர் ஏராளமாக எழுதியிருக்கிறார்கள். நானும் என் வலைப்பதிவில் அவரைப் பற்றிய தகவல்கள் நிறைய பதிவேற்றி இருக்கிறேன். அமுதசுரபியாய் அள்ள அள்ள குறையாது வெளிவரும் அவர் திறமையும் பெருமையும். நற்றமிழ்க் கவிஞர்களை நினைவுகூர்ந்து எழுதுவது எழுதுபவருக்கும் பெருமை தேடித்தரும்.

இக்கட்டுரைக்கு “தீன் தமிழ்க் கவிஞன்” என ஏன் தலைப்பிட்டேன் என்பதற்கு காரணங்கள் உண்டு. தீன் இசைப் பாடல்களால் புகழ்ப்பெற்றவர் அவர். தீந்தமிழ் கவிதைகள் இயற்றி சாதனைகள் புரிந்தவர். இயல் இசை நாடகம் ஆகிய தீன் தமிழ் (தீன் என்றால் இந்தியில் மூன்று அல்லவா?) முத்தமிழிலும் சிறந்து விளங்கியவர்.

வறுமையை வென்ற கவிஞர்கள் மிகவும் குறைவு. வறுமை தின்ற கவிஞர்கள்தான் அதிகம். ஆனால் பெரும்பாலான கவிஞர்கள் வறுமையிலும் செம்மையாக திகழ்ந்திருக்கிறார்கள் என்ற செய்தி நம்மை இம்மையில் உண்மையில் பெருமைபட வைக்கிறது.

வாடிக்கையாக இவர்கள் வறுமையில் உழன்றாலும் வேடிக்கை மனிதர்போல் இவர்கள் வாழ்வில் ஒருபோதும் வீழ்ந்தாரில்லை. மேலைநாட்டுக் கவிஞர்கள் கோல்ட்ஸ்மித், கீட்ஸ் முதற்கொண்டு தமிழ்க் கவிஞர்கள் மகாகவி பாரதி, புலவர் ஆபிதீன் வரை இக்கூற்றுக்கு இரையானவர்கள்தான். உச்சி மீது வானமே இடிந்து தலையில் வீழ்ந்தாலும் இவர்கள் சன்மானத்தைக் காட்டிலும் தன்மானமே பெரிதென்று கருதியவர்கள்.

புலவர் ஆபிதீன் மறைந்தபோது 1966ஆம் ஆண்டு அக்டோபர் மாத ‘முஸ்லிம் முரசு’ இதழ் “சமுதாயக் கவிஞர் மறைவு” என்று தலைப்பிட்டு அவருக்கு இரங்கல் கட்டுரை வடித்தது. ‘இரங்கல் கட்டுரை வார்த்தது’ என்று கூறுவதை ‘இரங்கல் கட்டுரை வடித்தது’ என்று சொல்வதுதானே சாலப்பொருத்தம்? அதில் கீழ்க்கண்ட வரிகள் இடம் பெற்றிருந்தன.

“வறுமை என்னிடம் தோற்றது என்று பெருங்கவிஞர்களுக்கே உரிய பாணியில் அவர் எள்ளி நகையாடும் அளவுக்கு வறுமை அதன் கைவரிசையைக் காட்டியது. நோயும் அதற்குத் துணை நின்று பார்த்தது. அத்தகையதொரு லட்சியக் கவிஞரின் மரணத்தினால் இன்று தமிழ் முஸ்லிம் சமுதாயம் ஏழ்மைப்பட்டுள்ளது”. ‘ஏழையாகவே இருந்துவிட்டு சமுதாயத்தை ஏழையாக்கி போய்விட்டார்’ என்ற கண்ணீர் அஞ்சலி நம் மனதில் அகலாது படிந்துள்ளது.

புலவர் ஆபிதீன் ‘மண்ணடி’க்கு போகுமுன் சென்னை மண்ணடியில் நடந்த நிகழ்வு இது:

கசங்கிய சட்டையும், அழுக்கு வேட்டியும், கையில் கர்சீப்பும் வைத்துக் கொண்டு ஒரு மனிதர் நடைபாதையில் துணிவிரித்து. காய்கறிகளைக் கொட்டிவைத்து, கூவிக்கூவி விற்றுக் கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக அவ்வழியே சென்ற எழுத்தாளரும் நூலாசிரியருமான வழக்கறிஞர் ஆர்.பி.எம்.கனி இந்தக் காட்சியைக் கண்டு அதிர்ந்து போனார். அருகில் சென்று அந்த முகத்தை கூர்ந்து கவனித்தார். அவர்தானா இவர் என்று ஒருமுறை உறுதிப்படுத்திக் கொண்டார். துணிவிரித்து கூவிக் கொண்டிருந்தவர் வேறு யாருமல்ல புலவர் ஆபிதீன் அவர்களேதான். கொடுக்கும் கரங்கள் கைவிரித்து விட்டதால். யாரிடமும் பல்லிளித்து நிற்காமல், துணிவிரித்து இந்த தலைவிரிக் கோலம்; தெரு வியாபாரி என்ற இந்த புது அவதாரம்,

பஞ்சத்தில் வாடியபோதும் பிறருக்கு உதவிய நெஞ்சம் ஆபிதீன் நெஞ்சம். அந்த அஞ்சா நெஞ்சனுக்கா இந்த அவல நிலை என ஆர்.பி.எம்.கனி ஆடிப்போனதில் என்ன ஆச்சரியம்?

ஒருசமயம் தனக்கு விழாமேடையில் அணிவித்த பட்டாடையை வழியில் மேலாடையின்றி அவதிப்பட்ட ஓர் ஏழைக்கு போர்த்தி மகிழ்ந்தான் ஆசையிலா மீசைக் கவிஞன் பாரதி.

ஒரு விழாவில் தன் படைப்புக்காக கிடைத்த பரிசுத்தொகை முழுவதையும் வழியில் சாகும் தருவாயில் கிடந்த ஒரு பெண்மணியின் கணவனின் நோயைக் குணப்படுத்துவதற்காக அப்படியே அள்ளித் தந்துவிட்டு வந்தான் கவிஞன் கோல்ட்ஸ்மித்.

ஆபிதீன் காக்கா உயிரோடு இருந்த காலத்தில், அவர் நலிவுற்றிருந்த நேரத்தில் அவருக்கு பொருளுதவி செய்ய யாருமே முன்வரவில்லை. கம்பருக்கு ஒரு சடையப்ப வள்ளல் போல, உமறுப்புலவருக்கு ஒரு சீதக்காதிபோல இவருக்கு யாரும் வாய்க்கவில்லை.

அதிக பட்சம் அவரைப் பாட்டெழுதச் சொல்லி நாகூர் மனாராஅடியில் இருக்கும் டீக்கடையில் தேத்தண்ணியும், பீடிக்கட்டும் அவருக்கு வாங்கிக் கொடுப்பார்கள். அவரும் பசி போக்க குசியாகி எழுதித் தள்ளுவார். கிட்டப்பாவாக மாறி மெட்டமைத்து பாடியும் காட்டுவார். இன்னும் கவனிப்பு கொஞ்சம் வேகமாக இருந்தால் அவருக்கு கொத்துப் புரோட்டா வாங்கிக் கொடுப்பார்கள். அவரும் மனங்குளிர்ந்து சந்தப் பாடல்கள் எழுதி, தன் சொந்த பாணியில், சொற்சிலம்பம் வித்தை காட்டுவார். அடுத்த பொழுதில், கொடுத்த தலைப்பில், கவிதை தொடுத்து, எழுத்தை எடுத்தாளும், மிடுக்கான கவியல்லவா அவர்?

இவருக்கு பிடித்தது
ராகத்தில் தோடி
எப்போதும் பீடி!

கவிஞர் இஜட் ஜபருல்லா இவரைப் பற்றி நகைச்சுவை உணர்வுடன் நச்சென்று பகிர்ந்த கவிதை வரிகள் நினைவில் அலை பாய்ந்தன.

இவரின்
சந்தப் பாடல்கள்
சாகாவரம் பெற்றது!
இவர் –
சொந்தப் பாட்டுதான்
சோகத்தில் முடிந்தது!

இவரின்
வார்த்தைகள்
வளமாய் செழித்தன !
வாழ்க்கைதான்
வறுமையில் அழிந்தது!

இவர் பாடல்கள்
எல்லா ராகங்களிலும்
இனித்தது!
இவர் வாழ்க்கையில்
‘முகாரி’ மட்டுமே
ஒலித்தது!

ஆகா.. என்னவொரு எதார்த்தமான வரிகள். ‘கொடிது கொடிது வறுமை கொடிது’ என்று ஒளவையார் பாடியது முற்றிலும் உண்மை. வறுமையில்தான் பாடலே பிறக்கும் என்ற காரணத்தினாலோ என்னவோ காலம் கவிஞரை கடைசி வரை வறுமையிலேயே வாட வைத்து அழகு பார்த்தது. அருந்தமிழும் அதை ஆமோதித்து தனக்குத்தானே கவிக்குவியலை மகுடம் சூட்டிக்கொண்டது.

புலவர் ஆபிதீனின் படைப்புகள் பாதுகாத்து வைக்கப்பட்டு இருக்கிறனவா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. அவர் ஞாபகார்த்தமாக நாகூர்க்காரர்களாகிய நாங்கள் ஒரே ஒரு காரியம் மட்டும் மறக்காமல் செய்து வைத்திருக்கிறோம். ஒரு நாற்சந்திக்கு “ஆபிதீன் சதுக்கம்” என்று பெயரிட்டு எங்கள் கடமையை நிறைவேற்றிக் கொண்டோம். இதுபோதாதா?

கவிஞர்களை இரண்டு வகையாகச் சித்தரிக்கலாம். ஒன்று எதார்த்தத்தைச் சொல்பவர்கள். இன்னொன்று கற்பனையை அழகுறச் சொல்பவர்கள். ஆபிதீன் ஓர் எதார்த்தக் கவிஞர். அனுபவமே அவரது கவிதையாக இருந்தது. அனுபவத்தை யாவும் அவர் கவிதையாக வடித்தார்.

“எது கவிதை?” என்பதை இனிமையுற கூறுகிறார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.

உள்ளத்துள்ளது கவிதை – இன்பம்
உருவெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை
தெரிந்துரைப்பது கவிதை

ஆபிதீனின் உள்ளத்திலிருந்து தெள்ளத் தெளிவாய் உருவெடுத்த எண்ணங்கள் யாவும் கவிதையாகவே வெளிவந்தன. காளமேகத்தைப் போல இவரும் ஒரு ஆசுகவி என்றால் அது மிகையாகாது. மற்றவர் சொல்லும் ஆசுகளை வைத்துக்கொண்டு உடனுக்குடன் கவிதை பாடும் ஒப்பிலா திறன் பெற்றிருந்தார்..

ஆபிதீனின் முழுப்பெயர் மு. ஜெய்னுல் ஆபிதீன். அந்நாளில் அச்சிடப்பட்டிருக்கும் நூல்களில் மு.ஜெ.ஆபிதீன் என்றுதான் காணப்படுகிறது. சரி விடுங்க. தீனிசை இயற்றிய இவர் பி.ஜெ.ஆபிதீனா அல்லது மு.ஜெ.ஆபிதீனா என்பது ஒரு பிரச்சினையே அல்ல. இந்த ஆள் ஒரு ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’ என்பது மட்டும் அக்மார்க் உண்மை.

புகழ்ப்பெற்ற கவிஞர்கள் பெரும்பாலும் ‘ஆல்ரவுண்டர்’களாகத்தான் இருப்பார்கள் போலும். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் 17 வகையான தொழில்கள் பார்த்தாராம். மாம்பழம், இட்லி, முறுக்கு, தேங்காய், மீன், நண்டு, கீற்று, உப்பு, தண்ணி வண்டி, மாடு வியாபாரம் என ஒரு தொழிலையும் மனுஷன் விட்டு வைக்கவில்லை.

ஆங்கிலத்தில் VERSATILE PERSONALITY என்பார்கள். அதுபோன்ற ஒரு பன்முகம் இந்த ஆபிதீன் காக்காவுக்கு உண்டு. ஆம் காக்கா என்றுதான் இவரை எல்லோரும் அன்போடும் மரியாதையோடும் அழைத்தார்கள்.

கவிஞர், பாடலாசிரியர், பாடகர், எழுத்தாளர், ஓவியர், நாடக ஆசிரியர், நாடக நடிகர், வணிகர், பத்திரிக்கையாளர் என அவர் எல்லாத் துறையிலும் கால் பதித்தார். ஏனோ எதிலும் அவர் பெரிதாக சம்பாதிக்க முடியவில்லை.

‘பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்’ என்ற பழமொழி இவருக்குப் பொருந்துமோ என்றுகூட நான் நினைத்தேன். அந்த பழமொழியும் சரியில்லையாம். ‘பலா’ என்பதுதான் ‘பல’ என்று ஆகிவிட்டதாம். தேக்கு மரத்திற்கு அடுத்தபடியாக உறுதியான மரம் பலா மரம். சிற்பங்கள் செய்ய இலகுவான மரம் பலா மரம். பலா மரத்தில் வேலை செய்த தச்சன் வேறு மரத்தில் வேலை செய்ய மாட்டான் என்ற பழமொழிதான் இப்படி ஆகிவிட்டதாம். “கால்” மறைந்து பலா = பல என்று ஆகி விட்டதாம். நண்பரொருவர் கால் மேல் கால் போட்டு இந்த விளக்கத்தைத் தந்தார்.

இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் மக்களின் பேராதரவு பெற்றது “கோபால் பல்பொடி” மாத்திரமல்ல. நாகூர் புலவர் ஆபிதீன் அவர்களின் எழுத்துக்கள் கூடத்தான். காரணம் இவர் வாழ்வாதரத்திற்கு வேண்டி கரணம் போடாத நாடுகளே இல்லை. சொன்னால் நம்ப மாட்டீர்கள். இலங்கை, பர்மா, மலாயா, சிங்கப்பூர் போன்ற அனைத்து நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டு, கவிதையில் மூழ்கி, வாழ்க்கையில் குற்றாலீஸ்வரன் போல் எதிர்நீச்சல் போட்டவர்.

இவ்வளவு நாடுகள் சுற்றியவர், எத்தனையோ பணிகளை மேற்கொண்டவர், பேரும் புகழும் சம்பாதித்தவர் என்ற போதிலும் பொருளாதார ரீதியில் முன்னேறி ஒரு நல்ல வசதியான வாழ்க்கையை எட்ட முடியவில்லையே என்ற வருத்தம் நமக்கு ஏற்படுகின்றது.

வெளிநாட்டில் மட்டுமல்ல மும்பை நகரில்கூட கால்பதித்து வணிகம் புரிந்து, நாடகம் அரங்கேற்றி, நாடகத்தில் நடித்து, கையைக் காலை ஊன்றி முன்னேற பாடுபட்டார். ஆனால் எந்தவொரு முயற்சியும் அவருக்கு கைகூடவில்லை.

நாகூரில் பிறந்து வளர்ந்த அவர் தொடக்கத்தில் பத்திரிக்கைகளில் எழுதி வந்தார். இதழாசிரியராகவும் பணியாற்றினார். ஓவியராகவும் சிறந்து விளங்கினார்.

புலவர் ஆபிதீனுடைய இசைப்பாடல்கள் சிம்மக் குரலோன் நாகூர் ஹனிபா வாயிலாக இசைத்தட்டில் பதிவேற்றப்பட்டு பட்டி தொட்டிகளெங்கும் ஒலித்தபோது புலவர் நாகூர் ஆபிதீன் என்ற பெயர் எல்லோருக்கும் பரிச்சயமாகவே இருந்தது. எல்லோரும் இப்பெயரை அறிந்து வைத்திருந்தார்கள். இவருடைய எழுத்தாற்றலில் மயங்கிக் கிடந்தார்கள்.

ஆபிதீனை நேரில் பார்த்தவர்கள் பழகியவர்கள் நாகூர்க்காரர்கள் மட்டுமே. ஆபிதீன் என்பவர் பிரபலமானவர், கெத்தான மனிதர், பந்தா பேர்வழி, காரில்தான் பயணம் செய்வார் என்றுதான் எல்லோரும் அவரை கற்பனை செய்து வைத்திருந்தார்கள். நேரில் இவரைப் பார்த்தவர்கள் “ப்பூ.. இவர்தானா அவர்?” என்று அலட்சியமாக பேசுவார்கள். காரணம் அவருடைய சாதாரண தோற்றம் அப்படி. இதை அவரே ஒரு பாடலில் வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார்.

காரில்தான் போவார் கண்டால் பேச
மாட்டார் என்று நினைப்பவர்களெல்லாம்
நேரில் என்னைக் கண்டுவிட்டால் ‘ப்பூ
இவர்தானா என்று போய்விடுவார்கள்

என்று உள்ளதை உள்ளபடி பாடியவர். கவிஞனுக்கு ஒளித்து மறைத்து பேசத்தெரியாது, கண்ணதாசனைப்போல. “நடைபாதை வணிகனென, நான் கூறி விற்றபொருள், நல்ல பொருள் இல்லை அதிகம்” என கண்ணதாசனே கூறியிருக்கின்றாரே?.

ஒருமுறை ரமலான் மாதத்தில் ஏதோ ஓர் ஊரில் புலவர் ஆபிதீன் ஒரு பள்ளிவாசலுக்குச் சென்று அடைக்கலம் புகுகிறார். நோன்பு நேரமாதலால் ‘இஃதிகாஃப்’ இருப்பதற்காக சிலபேர்கள் அங்கு தங்கியிருக்கிறார்கள். ஆபிதீனும் அன்றிரவு அங்கேயே தங்குகிறார்.

அவர் கண்களுக்கு பலவிதமான காட்சிகள் காணக்கிடைக்கிறது. அப்பள்ளியில் நோன்புக் கஞ்சிக்காக மண்ணாலான கஞ்சிக் கலயங்கள் அடுக்கி வைக்கப் பட்டிருக்கின்றன. ஒரு மூலையில் பாயும் தலையணையும் சுருட்டி வைக்கப்பட்டிருக்கின்றன.

அதுமட்டுமல்ல, பள்ளிக்கு தொழ வரும் சாக்கில் ஒருவர் அங்கு திருட்டுமுழி முழித்துக்கொண்டு நிற்கின்றார். பார்க்கும்போதே தெரிகிறது, அவர் தொழ வந்தவர் இல்லை என்று. வேடதாரியாய் காட்சி தருகிறார். அவருடைய நோட்டமெலாம் அங்கு பரந்து கிடக்கும் காலணிகள் மீதே இருக்கின்றது. அவர் செருப்பு திருட வந்தவர் என ஆபிதீனால் எளிதில் ஊகிக்க முடிகிறது.

பள்ளிக்கு தொழ வருபவர்களில் இளைஞர்கள் யாரும் தென்படவில்லை. எல்லோரும் முதியவர்கள். முதுமை அடைய அடையத்தான் மரணபயம் கவ்விக் கொள்கிறது போலும். அப்போதுதான் இறைவனின் நினைப்பு அதிகம் வருகிறது. பள்ளியின் மற்றொரு மூலையில் இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்படும் “சந்தூக்”பெட்டி சாத்தி வைக்கப்பட்டிருக்கும் காட்சியும் அவர் கண்களில் படுகிறது. அது அவர் மனதில் ஒருவித திகிலையும் ஏற்படுத்தி விடுகிறது. நாம் இறந்துப் போனால் நம்மையும் இந்த மரப்பெட்டிதானே சுமந்துக் கொண்டு போகும் என்ற எண்ணம் அவருக்குள் ஒருவித துயரையும் தருகிறது.

கண்முன் கண்ட காட்சியை கவிவாணர் ஆபிதீன் கவிதையாய் வடிக்கிறார். கண்முன்னே காணும் காட்சிகளோடு சேர்த்து, சமுதாய அவலங்களையும் சாடுபவன்தான் உண்மையான கவிஞன். அதற்கு ஆபிதீன் ஒரு அழகிய முன் மாதிரி.

கஞ்சியின் கலயம் நூறு
கவலையாய்ப் பாதுகாத்து
கட்டியே வைத்திருந்தார்
கடமையாம் நோன்புக்காக
பஞ்சுதான் சிதைந்துப் போன
பழையபல் தலைய ணைகள்
பத்திரமாகப் பாயில்
பதுக்கிய பண்பு பார்த்தேன்

வஞ்சகர் செருப்புத் திருட
வந்திருந்தார்க ளங்கே
வயதிலார் தொழுது நின்றார்
வாலிபர் யாரு மில்லை
துஞ்சினோர் செல்லும் பெட்டி
தூர ஓர் ஓலை ஓரம்
தூக்கியே சார்த்து வைத்த
துயர்தரும் காட்சி கண்டேன்

என்று அந்த ஆசுகவி அக்கணமே பாடுகிறான்.

தொடரும்
நாகூர் அப்துல் கையூம்

தொடரும்
நாகூர் அப்துல் கையூம்

இரண்டாம் பாகத்தை பார்க்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *