தமிழோடு நிலைக்கப் பிறந்தவன் – பாகம் – 6/6

பாகம் 5

கம்பனின் காதலன்

1923-ஆம் ஆரம்பத்தில் திருநெல்வேலியில் தொடங்கப்பட்ட கம்பன் கழகம் மூத்ததா அல்லது அதற்கு முன்னரே பிற ஊர்களில் கம்பன் கழகங்கள் நிறுவப்பட்டதா என்ற விவரம் சரியாகத் தெரியவில்லை.

காரைக்குடி, திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சென்னை, திருப்பத்தூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, மதுரை, ராஜபாளையம், தேரெழுந்தூர், வேலூர், கோயம்புத்தூர், ராசிபுரம், சேலம், விழுப்புரம், புதுச்சேரி போன்ற பற்பல ஊர்களில் தற்போது கம்பன் கழகம் விழாக்களை கோலாகலமாக நடத்தி வருகின்றன. இதுதவிர இலங்கை, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து போன்ற அயல் நாடுகளிலும் கம்பன் கழகம் காலூன்றி வெற்றிநடை போட்டு வருகின்றது.

கம்பன் கழகம் புதிதாக ஓரிடத்தில் ஆரம்பிக்கப் பெற்றால் அவ்விடத்திற்குக் காரைக்குடிக் கம்பன் கழகத்திலிருந்து தாய்ச் சீர்வரிசை அனுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளனராம். ஆஹா! என்னே ஓர் அற்புதமான தமிழர் பண்பாடு!

கம்பன் கழகமானது, தமிழறிஞர்கள் தங்கள் ஆராய்ச்சிக் கருத்துக்களைப் பகிரும் அற்புதக் களமாகத் திகழ்கிறது. தாய்மொழியாம் தனித்தமிழின் சிறப்பை தரணியெங்கும் பரவும் வண்ணம் தன்னிகரில்லா தமிழ்த்தொண்டு புரிந்து வருகிறது.

நீதியரசர் மு.மு.இஸ்மாயில் போன்று கம்பனைக் காதலித்தவர்களில் தலையாய இடம் கவிஞர் சாரணபாஸ்கரனுக்கு உண்டு. 1960-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி பேராசிரியர் அ.சீனிவாசராகவனார் தலைமையில் காரைக்குடியில் கம்பன் விழா கவியரங்கம் நடைபெற்றது, சிலேடை நாயகர் கி.வா.ஜ., கம்பரடிப்பொடி சா.கணேசன் போன்ற இலக்கிய ஜாம்பவான்கள் கலந்துக் கொண்டனர். “கம்பனில் காணும் சமயக் கருத்துக்கள்” என்பது கவியரங்கத் தலைப்பு. சைவம், வைணவம், சமணம், பெளத்தம், கிறிஸ்துவம். இஸ்லாம், வேதாந்தம், சமரசம் என பல்வேறு கோணத்தில் கம்பனைக் கவிஞர்கள் ஆராய்ந்தனர். “கம்பன் கண்ட இஸ்லாம்” என்ற தலைப்பில் கவிஞர் சாரணபாஸ்கரன் கவிதை சாற்றினார். 

கம்பனை காதலித்த கன்னித்தமிழ் வேந்தர்கள்

கம்பனின் காதலனாக ஒரு சுகி சிவமோ அல்லது சிவக்குமாரோ இலக்கிய உலகில் பவனி வருவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. இஸ்லாமிய மார்க்க நெறியில் பிறந்து வளர்ந்த ஒரு முஸ்லிம் இந்து மதத்தின் காப்பியத்தை கசடறக் கற்று, அதில் புலமை பெற்று, அக்காப்பியத்தின் மேன்மையை பட்டி தொட்டிகள் எங்கும் பறை சாற்றியதில்தான் வியப்பு மேலிடுகின்றது.

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல,

வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்

பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,

உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை

என்று பாடிய பாட்டுக்கோர் புலவன் பாரதி, பைந்தமிழ்ச் சாரதி, கம்பனின் பெயரை ஏன் முதலாவதாக குறிப்பிட்டான் என்று எனக்கு சரியாகச் சொல்லத் தெரியவில்லை. வள்ளுவர் பெருந்தகையை விட உயர்ந்த புலவனாக கம்பனைக் கருதினானா அல்லது வெறும் எதுகை மோனைக்காக கம்பனை முதலிடத்தில் வைத்தானா என்பது கவிராஜனுக்கே வெளிச்சம்.

கம்பனைக் காதலித்தவர்கள் அந்த பாட்டுடைத்தலைவன் பதமறிந்தே கவிச்சக்கரவர்த்தியை முதல் வரிசையில் வைத்துப் போற்றிப் புகழ்ந்தான் என்று வாதிடுகிறார்கள்.

கம்பனின் காவியத்தில் உண்மை இருந்ததா என்பது வேண்டுமானால் விவாதத்திற்குரிய கருப்பொருளாக இருக்கலாம். ஆனால் அதில் பைந்தமிழ்ச் சுவை நிறைந்துள்ளது என்பதை “கம்பரசம்” எழுதிய அறிஞர் அண்ணாவால் கூட மறுக்க முடியாது.

கம்பன் கழகம் பரவலாகத் தோன்றுவதற்கு மறைமுக காரணமாக இருந்தவர்கள் கம்பராமாயண எதிர்ப்பாளர்கள்தான் என்பது வரலாறு கண்ட உண்மை. ஒரு விடயத்தின் மீது எப்பொழுது எதிர்ப்பு அதிகமாகிறதோ அப்போது அதன் மவுசும் கூடுவது கண்கூடு. கம்பராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் என்று சொன்னவர்கள் கொளுத்திவிட்டால் அப்புறம் படிக்க முடியாதே என்று அவசர அவரமாக கற்று அதன் கவிநடையில் காதல் கொண்டவர்கள் பலர்.

‘கம்பனைப் போற்றுவதென்பது கன்னித்தமிழைப் போற்றுவதாகும்’ என்று நீதியரசர் இஸ்மாயீல் அடிக்கடிச் சொல்வதுண்டு. பண்டிதர்கள் மத்தியில் இருந்த கம்பனின் காவியத்தை பாமரர்கள் மத்தியில் கொண்டுச் சென்ற பெருமை பெருமளவு நீதிபதி இஸ்மாயீல் அவர்களைச் சாரும்.

“கம்பராமாயணம் பற்றியே பேசுகிறீர்களே என்று என்னை குறைபட்டுக் கொள்பவர்கள் நிறைய பேருண்டு என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அவர்களை நான் கேட்டுக் கொள்வது இதுதான். நீங்கள் அதனை படித்திருக்கிறீர்களா? அதில் தமிழ் இருக்கிறது.. இலக்கியம் இருக்கிறது. அதை படித்து பாருங்கள்” என்று நீதிபதி இஸ்மாயீல் அவர்கள் நற்றமிழ்க்கூறும் நல்லுலகத்திற்கு நயம்பட வேண்டுகோள் விடுக்கிறார்.

கம்பராமாயணத்தின்பால் மிகுந்த வேட்கை கொண்டு அதில் பல்பெருகிக்கிடக்கும் இலக்கியச் சுவைகளூக்குள் மூழ்கிக் கிடந்தவர் கவிஞர் சாரணபாஸ்கரன் என்றால் அது மிகையாகாது.

கிட்டத்தட்ட 50 வருட காலங்களுக்கு மேலாக கம்பராமாயணத்திற்கு உரிமம் வழங்கும் அதிகாரியாக, கம்பனுக்காக வாதாடும் வழக்கறிஞராக, அவனது காவியத்திற்கு நிபுணராக, அக்காப்பியத்தின் கலைக்களஞ்சியமாக, நடமாடும் அகராதியாக, அருஞ்சொற்பொருள் வல்லுனராக, அந்நூலுக்கு சந்தேகம் தீர்க்கும் விற்பன்னராகத் திகழ்ந்தவர் நீதிபதி இஸ்மாயீல் அவர்கள்.

இந்த ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமே இவருக்கு அளிக்கப்பட்ட “இலக்கியமான நீதிபதி” என்ற அடைமொழியில் வேறு யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை.

“இலக்கணமான நீதிபதி” என்று பழ.பழநியப்பன் குறிப்பிடவில்லை. ஏன் என்று கவனித்தீர்களா? இலக்கணம் மாறலாம். இலக்கியம் மாறுவதில்லை. நீதியரசர் ஓர் அமர இலக்கியம். ஓர் இலக்கியத்திற்கே இலக்கணமாகத் திகழ்ந்தவர் அவர்.

காரைக்குடியில் நடக்கும் கம்பன் விழாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து கலந்து கொண்டுள்ளார் நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்கள். அரையுக காலம் ஒருத்தர் ஒரு குறிப்பிட்டத் துறையில், அவரை ஓரங்கட்ட முடியாத அளவுக்கு, முதன்மை நிலையில் இருந்து முத்திரை பதித்தார் என்றால், அவருக்கு இலக்கியத்தில் எந்த அளவுக்கு ஆளுமை சக்தி இருக்க வேண்டும் என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கம்பனின் காதலர்களில் நீதியரசர் மு.மு.இஸ்மாயிலுக்கு அடுத்த நிலையில் கவிஞர் திலகம் சாரணபாஸ்கரனை குறிப்பிடலாம். சாரணபாஸ்கரனின் “யூசுப் ஜுலைகா” காவியத்தின் மூன்றாம் பதிப்பிற்கு அணிந்துரை வழங்கியது அப்போதைய சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவி வகித்த மாண்புமிகு மு. மு. இஸ்மாயீல் அவர்கள்தான் 

கம்பனின் கவித்திறமையை தமிழ்க்கூறும் நல்லுலகில் தம்பட்டம் அடித்தவர்களின் பெயர்களை எழுத்தில் வடிக்க முனைந்தால் பட்டியல் நீண்டுக் கொண்டே செல்லும்.

சதாவதானி செய்குத் தம்பி பாவலர், கம்ப ராமாயண சாகிபு பா.தாவுத் ஷா, கம்பன் அடிப்பொடி சா.கணேசன், நீதிபதி இஸ்மாயீல் முதற்கொண்டு அ.ச.ஞானசம்பந்தன், நீதிபதி எஸ்.மகராசன், தொ.மு.சி.ரகுநாதன், தெ.பொ.மீனாட்சிசுந்தரம், வெ.சாமிநாத சர்மா, திருச்சி ராதாகிருஷ்ணன், சத்தியமூர்த்தி, அறிவொளி, தெ.ஞானசுந்தரம், கா. நயினார் முகமது, புலவர் அருணகிரி, தனிநாயக அடிகள், சே.ச., ராமலிங்கம், வையாபுரிப் பிள்ளை, எஸ்.ஆர்.கே, ரா.பி.சேதுப்பிள்ளை, ரசிகமணி டி.கே.சி, ரா.இராகவையங்கார், விஞ்ஞானி கே.எஸ். கிருஷ்ணன், பெ.நா.அப்புஸ்வாமி, பி.ஸ்ரீ.ஆச்சார்யா, தோழர் ஜீவா, தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான், க.கு.கோதண்டராமக் கவுண்டர், ஏ.சி.பால்நாடார், எஸ். இராமகிருஷ்ணன், கி.வா.ஜகன்னாதன், ஆல்பர்ட் பிராங்க்ளின், மு.வரதராசனார், அ.சீனிவாசராகவன், மு.இராகவ அய்யங்கார், கவிஞர் கண்ணதாசன், ஏ.என்.சிவராமன், கிருபானந்த வாரியார், கம்பராசன், கவி கா.மு.ஷெரீப், யாழ்பாணத்து அறிஞர் ம.மு.உவேஸ், கலைமாமணி அப்துல் காதர், மு.மேத்தா,  இன்குலாப்  “மதுக்கூர் கம்பன்” டி.ஏ.கே.முகம்மது யாகூப் மரைக்காயர், சி.எம்.அழகர்சாமி, பழ.பழனியப்பன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஜெகவீரபாண்டியன், வே.மி.சம்மனசு, வ.சுப.மா., வள்ளல் அழகப்பர், எஸ். வையாபுரிப்பிள்ளை, இரா.சொ., அ.சீ.இரா., கவிக்கோ அப்துல் ரகுமான், முனைவர் பர்வீன் சுல்தானா கவிஞர் வாலி, சுதா சேஷய்யன்  என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வுச் செய்து முனைவர் பட்டம் பெற்ற என் நண்பன் நாகூர் ரூமியையும் இப்பட்டியலில் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.                                  

“கம்பராமாயணம், மதங்கள் கடந்த, தமிழர் கொண்டாட வேண்டிய செவ்வியல் இலக்கியத்தின் வடிவம்” என்று நீதிபதி இஸ்மாயீல் அடிக்கடி உரைப்பார்.

கம்பராமாயணத்தை ஒரு இந்து மத காப்பியம் என முத்திரையிட்டு அதனை பிற மதத்தினரோ, நாத்திகர்களோ ஒதுக்கித் தள்ளுவது முறையாகாது. கம்பனின் காவியம் ஒரு கற்பனைச் சுரங்கம். சந்தங்களின் சமுத்திரம். உவமைகளின் ஊற்று, கதா பாத்திரங்களை நாடகத் தன்மையுடன் உலவவிடும் கவித்துவம் நிறைந்த தனித்துவக் காவியம்.

கம்பன் கண்ட இஸ்லாம்

கலையரங்கின் தலையரங்காம் கவியரங்கின்

…..அருந்தலைவ, கவிவா ணர்காள்!

விலைமிகுந்த கலையனைத்தும் வியந்தேற்றும்

…..கம்பன்புகழ் விளக்கும் சான்றோய்!

உலகனைத்தும் நிலைபடுத்தி உயிரனைத்தும்

…..நெறிபடுத்தி உவந்து காக்கும்

தலைவனுக்கே தலைவணங்கும் கம்பன்கண்ட

…..சமயநெறி இஸ்லாம் தானே!

ஆக்குதற்கு ஒருதெய்வம், காக்குதற்கு

…..மறுதெய்வம், அநீதி தோன்றில்

நீக்குதற்கு ஒருதெய்வம், என்றுபல

…..தெய்வங்கள் நிறுவிப் பேதம்

ஊக்குவித்த மாந்தரிடை இகபரத்தை

…..இனிதாள்வோன் ஒருவன் என்றே

நோக்குவித்த இஸ்லாத்தின் அறநோக்கைக்

…..கம்பனிலே நோக்கக் கூடும்!

கோவேந்தர் கொலுவினிலே கோலேந்தும் தமிழரசி

சாவேந்தச் செய்யாமல் தழைக்கவைத்த கம்பனையே

சைவத்தை சார்ந்தவனாய், வைணவத்தைச் சேர்ந்தவனாய்,

சமணத்தில் திளைத்தவனாய்ச் சாற்றினரே முக்கவிஞர்!

நிலையற்ற வாழ்வென்று நிகழ்த்துகின்ற பெளத்தத்தை

நிலைபெற்ற வாழ்வுற்ற நிகரற்ற ராமகதை

காட்டுதற்கே இங்குவந்த ‘கலைமகளின் காதலன்’சொல்

கேட்டுவந்தீர், பகைக்கிரங்கும் கிருஸ்து வத்தைத்

தீட்டியதாய் கம்பனது திறனாய்ந்தார் ஒருகவிஞர்!

பாட்டினிலே உங்கள்மனம் ஆட்டிவைத்தார் என்மூத்தோர்!

விளக்கம்:

(கலைமகளின் காதலன்’: கி.வா.ஜ வைக் குறிப்பது)

இத்தனைக்கும் இறுதியென – இத்தரைக்கே இறுதியெனும்

கத்தனருள் இஸ்லாத்தைக் கம்பனிலே காட்டுதற்கு

உத்தமனாம் ‘கணேச’னெனை ஓடிவரச் செய்துவிட்டான்,

சத்தியத்தை நாட்டுதற்குத் ‘தலைவன்துணை’ எனக்குண்டே!

விளக்கம்:

(‘கணேசன்’ – கம்பனடிப்பொடி சா.கணேசனைக் குறிப்பது

‘தலைவன்துணை’ – அரங்கத் தலைவர் சீனிவாச ராகவனாரை மட்டுமன்றி, இறைவனையும் குறிப்பது)

இறைதவத்து முனிவருக்கும் இமையவர்க்கும்

…..அரக்கர்தரும் இன்னல் நீக்க

மறையொழுகித் தரையாளும் தசரதனின்

…..அருந்தவத்து மகனைக் கேட்கும்

நிறைதவத்து கோசிகனின் வேள்வியினை

…..காத்துநெறி நிலைக்கச் செய்தே

கறைதுடைத்த ராமகதை காட்டுகின்ற

…..இஸ்லாத்தின் கருத்தைக் கேளீர்

ஆளுகின்ற வாய்ப்படைந்த காரணத்தால்

…..கடவுளுக்கும் அஞ்சேன் என்று

சூளுரைத்துத் தோளுயர்த்தும் அரக்ககுண

…..அரசியலார் சூழும் நாளில்

வாளுயர்த்தி வேலுயர்த்தி இறைபகைவர்

….வரும்போது வணங்கி டாமல்

தோளுயர்த்திப் போராடச் சொன்னநபி

…..வழிமுறையைச் சொன்னான் கம்பன்!

தரைமுழுதும் ஆளவந்த சூரியனின்

…..குலராமன் தந்தை வாக்கால்

துறவுகண்ட பெருங்காதை சொல்லவந்த

…..கவிமன்னன் தொடுத்த பாவில்

இறைவனது ஆணையினால் தம்நாட்டைத்

…..துறந்துபிற நாட்டை ஏற்ற

குறைஷிகுலத் திருமணியாம் நபிமணியின்

…..நெறிமுறையைக் குறிக்கக் காண்போம்!

விளக்கம்:

(‘துறந்து பிற நாட்டை’ – நபிகள் பெருமான், பிறந்த நாட்டைத் துறந்து மதீனாவிக்கு ஹிஜ்ரத் செய்ததைக் குறிப்பது)

மாதவத்தின் அருட்பிழம்பாய் மாநிலத்தின்

…..பெருங்கொடையாய் மக்கா தோன்றிப்

பேதமற்ற சமுதாயம் பேணிடவே

…..மக்களினம் பிணைந்து வாழ

வாதமற்ற வாழ்வுநெறி வகுத்தளித்த

…..வள்ளல்நபி வாழ்வில் காணும்

ஈதலறம் போதமுறை கம்பனிலே

…..இணைந்திருக்க இனிதே காண்போம்!

பொய்மையற்ற மெய்யுலகை, வறுமையற்ற

…..வளஉலகை, போரொ ழித்துத்

துய்மைபெற்ற நட்புலகை, கைம்மயற்ற

…..பெண்ணுலகைத் தோற்று வித்தே;

தெய்வநெறி வாழ்வுடனே சேர்ந்தொளிரத்

…..தாழ்வுயர்வு சிதைக்கும் திட்டம்

செய்தளித்த எங்கள்நபி திருவழியை

…..கோசலத்தில் செய்தான் கம்பன்!

‘வறுமையிலை’ என்பதனால் ‘வண்மையிலை’

…..என்றுரைத்தான், வஞ்ச மிக்கச்

‘செறுநரிலை’ என்பதினால் ‘திண்மையிலை’

…..என்றுரைத்தான், தீமை சேர்க்கும்

‘ஒருபொய்யிலை’ என்பதனால் ‘உண்மையிலை’

…..என்றுரைத்தே உயர்ந்த கம்பன்,

சிறுமையிலாக் கோசலத்தை இஸ்லாத்தின்

…..செயல்முறையால் செழிக்க வைத்தான்!

கோதையரை அவர்விருப்பம் கோராமல்

…..கற்பழிக்கும் கொடுமை செய்து

பேதையராய் நசுக்கிவந்த ஆடவரின்

…..பேதமையைப் பெயர்த் தெறிந்து

மாதருக்கும் கல்வியிலும் சொத்தினிலும்

…..உரிமையென வகுத்த இஸ்லாம்

போதனையைக் கோசலத்தின் பூவையர்க்கும்

…..கவிமன்னன் புகுத்தல் கேளீர்!

(வேறு)

‘பெருந்தடங்கண் பிறைநுத லார்க்கெல்லாம்

பொருந்தும் செல்வமும் கல்வியும் பூத்த’தாம்

‘பொருந்தும் மகளிரை வதுவையில் பொருந்துவர்

இருந்தனர் கோசலம்’ என்கிறான் கம்பனே!

விளக்கம்:

(இஸ்லாத்தின் இலட்சியச் சின்னமாகிய இளம்பிறை போன்ற நெற்றியுடைய கோசலத்துப் பெண்கள், சொத்துரிமை, கல்வியுரிமை பெற்றிருந்ததோடு, அங்குள்ள ஆடவர்கள் சம்மதிக்கும் மாதரை, களவியல், காந்தர்வ முறையிலன்றி மனச்சடங்கின் மூலமே

மணப்பார்களாம். இதுதான் இஸ்லாமிய நெறிமுறை)

இத்தனை இருப்பினும் தசரதன் இல்லறம்

புத்திரர் இன்றியே பொலிவை இழந்தது!

இல்லறம் நடத்திநன் மக்களை ஈன்றிடில்

நல்லறம் என்பதை நம்பிய தசரதன்

பல்லறம் விலைத்தனன், பரம்பொருள் அருள்பெறச்

சொல்லற முனிவரால் வேள்வியைத் தொடங்கினன்!

‘தனுவன்றித் துணையிலான் தருமத்தின் கவசத்தான்!

மனுஎன்ற நீதியான்..’ மக்களைப் பெற்றனன்.

விளைந்திடாப் பாலையாய் விளங்கிய மனைவியர்!

விளைநில மாயினர், வீரரை ஈன்றனர்!

(வேறு)

‘மனைவியரை கனிகள்விளை நிலமே’ என்னும்

…..மாசற்ற இஸ்லாத்தின் குர்ஆன் வார்த்தை

தினையளவும் பொய்க்காது என்ப தற்கே

…..சீர்மன்னன் தசரதனே சான்று ஆவான்!

மனையறத்தில் நன்மக்கள் பெற்ற ளித்தல்

…..மாண்புமிகும் பணியாகும்-கடமை யாகும்

மனைவியரை வரண்டநில மாக்கி டாமல்

…..வளப்படுத்திச் சிசுக்கனிகள் பறித்தான் மன்னன்!

‘இறைவிருப்பம் எப்படியோ அப்படியே

…..கருவடையும்’ என்னும் இஸ்லாம்

மறைமொழியை மெய்ப்பிக்கும் உவமையென

…..அயோத்திநகர் மன்னன் வாழ்வை

வரைந்தளித்த கம்பன்புகழ் வாழ்த்துகின்ற

…..இந்நாளில் வளமே பெற்றுச்

சிறந்தொளிரும் மனைவியரை வரண்டநிலம்

…..ஆக்காமல் செழிக்கச் செய்தான்!

தந்தைபட்ட கடன்நீக்கி எஞ்சியதே

…..தனயன்பெறத் தகுந்த தாக்கி

எந்தநிலை வரும்போதும் வாக்குறுதி

…..காத்திடலே இஸ்லாமாகும்

இந்தநெறி ராமனிடம் – தசரதனின்

…..உறுதியிடம் இணைத்துக் காட்டும்

எந்தமிழின் கவிவேந்தன் கம்பனது

…..பெருந்தகைமை இயம்பப் போமோ?

மென்மைமிகு பூவையரின் கற்பினையும்

…..பொற்பினையும் வெகுவாய் போற்றும்

உண்மைமிகும் இஸ்லாத்தின் ‘திருக்குர்ஆன்’

…..உரைக்குமொழி யொன்றால் கம்பன்

‘பெண்கள்சதி மிகப்பெரிது’ என்பதற்குக்

…..கூனியையும் பேரா சைக்குக்

கண்ணிழந்த கைகேயியையும் இலக்கணமாய்ச்

…..செய்துநம்முன் காட்டி விட்டான்.

(வேறு)

“ஒன்றுனக்கு உந்தை, மைந்த

…..உரைப்பதோர் உரையுண் டென்”று

‘கொன்றுழல் கூற்றம்’ ஒத்த

…..கைகேயி கூறக் கேட்டே

என்னுடை தந்தை ஏவல்

…..இயம்பினீர் நீரே என்றால்

‘மண்ணிடை உய்ந்தேன்’ என்று

…..மகிழ்வொடு உரைத்தான் ராமன்.

பெற்றவர் விருப்பை ஏற்றல்

…..பிள்ளையின் கடமை என்னும்

நற்றவ இஸ்லாம் சாற்றும்

…..நன்னெறி ஏற்றான் ராமன்!

கொற்றமே தம்பி ஆளக்

…..குறித்தவள் பதினான் காண்டு

சுற்றமே பிரிந்து கானில்

…..துறவறம் நடத்தச் சொன்னாள்!

‘மன்னவன் பணியன் றாகில்

…..நும்பணி மறுப்ப னோ?என்

பின்னவன் பெற்ற செல்வம்

…..அடியனே பெற்ற தன்றோ?’

என்றிடும் ராமன் வாக்கில்

…..எங்களின் நபிகள் நாதர்

நன்றெனச் சொன்ன சொல்லை

…..நவின்றிட வைத்தான் கம்பன்!

(வேறு)

கவியரங்கின் நாயகரே, கம்பன்குலக்

…..கவிஞர்களே, கற்றுத் தேர்ந்து

புவிசிறக்கும் நாவலரே, புகழ்சிறக்கும்

…..பாவலரே, புலமை போற்ற

அவைநிறைந்த பொதுமக்காள், தமிழ்பயிலும்

…..அடியேனை அரங்கில் ஏற்றிச்

சுவைநிறைந்த காவியத்தில் கம்பன்கண்ட

…..இஸ்லாத்தை சொல்லச் சொன்னாய்!

மற்றவரின் எழுத்துக்களை பெயர்த்தெழுதித்

…..தம்மெழுத்தாய் மாற்றிச் சொல்வோர்,

மற்றவரின் கருத்துக்களைக் களவெடுத்து

…..தம்கருத்தாய் வழங்கி நிற்போர்,

குற்றம்புரி இழிவழியே கம்பனுடை

…..உடைமைகளைக் கொள்ளை கொண்டு

முற்றினிலும் இஸ்லாத்தின் உடைமையென

…..விற்பதற்கு முனைந்தே னில்லை!

வானூறும் மாரியென எங்கள்மறை

…..எங்கள்நபி வழங்கும் உண்மை

‘நானூறு ஆண்டினுக்கும்’ முன்னிந்த

…..நாட்டினரே ஏற்றார்! அஃதைத்

தேனூறும் தமிழ்க்கவியில் காப்பியத்தின்

கருப்பொருளில் திரட்டிச் சேர்த்தே

ஊனூற உணர்வூற கம்பனெடுத்

….தாண்டசில உரைத்தே னிங்கு!

விளக்கம்:

(‘நானூறு ஆண்டினுக்கும்’ – நம் நாட்டில் இஸ்லாம் பரவி நானூறு ஆண்டுகளுக்குப் பின்னரே கம்பன் வாழ்ந்திருக்கிறான். அவன் காலம்  12-ஆம் நூற்றாண்டென்றும், 9-ஆம் நூற்றாண்டென்றும் வரலாற்றாசிரியர் குறிப்பிடுகின்றனர்.)

புவியரசர் புகழரசர் வியந்தேற்றும்

…..இஸ்லாத்தின் பொதுக் கருத்து

கவியரசன் கம்பனையும் கவர்ந்ததனை

…..கலைஞரிடை விளக்கஞ் செய்தே

சுவையறிந்து நீவீரெலாம் இஸ்லாத்தின்

…..அறநெறியைப் பயிலச் சொல்லி

அவையிருந்து அகலுகின்றேன் அனைவருக்கும்

…..என்நன்றி அரங்கி னோரே!

கவிஞர் சாரண பாஸ்கரன் கம்பன் மேல் கொண்டிருந்த உயர்ந்த அபிமானத்தை எடுத்துக்காட்ட இதைவிட வேறொரு உதாரணம் வேண்டுமோ?

நிறைவேறாத ஆசை

1986-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25-ஆம் தேதி கவிஞர் திலகம் மறைந்தார். 1976-ஆம் ஆண்டு முதல் தன் வாழ்நாள் சாதனையாக இரண்டு நூல்களை எழுதி முடிக்க வேண்டும் என்ற வைராக்கியத்தில் கடுமையாக உழைத்தார். அவர் எழுதி முடிக்க நினைத்த காப்பியங்கள் இரண்டு. ஒன்று “நாயக காப்பியம்”. மற்றொன்று “சீதாயணம்”. முடிவுபெறாத நிலையிலிருந்த இந்த இரண்டு நூல்களையும் வெளிக்கொணர நாகூர் குலாம் காதிறு நாவலர் மகனார் ஆரிபு நாவலர் உட்பட பலரும் முயற்சி செய்தனர். ஏனோ அம்முயற்சி யாருக்கும் கைகொடுக்கவில்லை. எல்லோருடைய கைகளிலும் தவழ வேண்டிய அந்த அற்புத எழுத்துக்கள் யார் கைக்கும் கிடைக்காமலேயே காற்றோடு காற்றாக கரைந்துப் போய்விட்டன. தமிழ் கூறும் நல்லுலகில் தமிழிலக்கியங்கள் வாழும் கால வரையிலும் கவிஞர் திலகம் சாரணபாஸ்கரனாரின் புகழ் நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.

முற்றும்…
நாகூர் அப்துல் கையூம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *