தமிழோடு நிலைக்கப் பிறந்தவன் – பாகம் – 5/6

பாகம் 4

அந்த நிலாவைத்தாம் நான் கையிலே புடிச்சேன் 

“முதல் மரியாதை” என்ற படத்தில் ஒரு பாடல் காட்சிக்கு வைரமுத்து எழுதிய பாடல் வரிகள் இன்னும் நம் மனதில் பசுமையாக பதிந்திருக்கின்றது. ஓடை நீரில் ஒளிரும் சந்திரனின் பிம்பத்தை கையில் அள்ளி எடுத்தவாறு நாயகி பாடுவாள்.

//அந்த நிலாவைத்தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக

எங்கே எங்கே கொஞ்சம் நான் பார்க்குறேன்

கண்ணை மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்//

இந்த வித்தியாசமான கற்பனை நம் மனதை கொள்ளை கொள்ளும். கவிஞர் வைரமுத்துவின் மனதில் இக்கற்பனை பிறப்பதற்கு எத்தனையோ ஆண்டுகட்கு முன்னர் கவிஞர் சாரணபாஸ்கரனின் மனதில் இந்த கற்பனையோட்டம் பிறந்து விட்டது. குழந்தைப் பருவத்திலிருக்கும் கவிஞர் தன் தாயிடம் வானில் ஒளிரும் சந்திரனை கையில் பிடித்து விளையாடக் கேட்கிறார். 

“அங்கிருக்கும் அதுவென்ன வான்விளக்கா ?”

—-எனக்கேட்டேன் அதற்கு அம்மா

“இங்கேயே நாம்செல்ல இயலாத

—-இடமுண்டே!” என்று சொன்னாள்

எங்கேயோ சென்றிருந்த என் தந்தை

—-எதிர்வந்தார், ஏக்கத் தொடு

“அங்கிருக்கும் திங்களினை வாங்கித்தர

—-வேண்டும்!” என அழுது கேட்டேன்

ஆடுகின்ற குதிரையுண்டு, பாடுகின்ற 

—குருவியுண்டு, அடுக்க டுக்காய்

ஓடுகின்ற ரயிலுமுண்டு, உருளுகின்ற

—பொம்மையுண்டு, உலவும் திங்கள்

நாடுவதும் என்மகனே; அன்னைமுகம்

—அதுதானே! நாட்கள் தோறும்

கூடுவதும் குறைவதுமாய் மாறுகின்ற 

—திங்களுமேன் குழந்தாய்!” என்றார்

அன்னைமுகம் யான்நோக்க, அவள்தந்தை

—முகம்நோக்க, அழுதேன் மீண்டும்,

என்னையிரு கரமேந்தி இறுகணைத்துத்

—தோளிலிட்டார் எனது தந்தை !

அன்னையொரு வட்டிலிலே நீர்நிரப்பி

—எனையழைத்து அதனுள் காட்டி

“உன்னுடைய திங்களிதில் வந்ததுபார்!”

—எனச்சொல்லி உவகை பூத்தாள்

ஆவலுடன் அதைப்பிடிக்கக் கைவிட்டேன்

—அதுசிதைந்து ஆடக் கண்டு

கூவலுற்றேன், தாய்தந்தை நகைத்திட்டார்

—மீண்டுமது கூடிச் சேர 

ஆவலொடு பார்த்திருந்தேன், அங்குவந்த 

—அண்ணனுக்கும் அதையே காட்டத்

தாவலுற்றேன், தந்தையரும் தாவியெனைப் 

—பிடித்திட்டார், தழுவிக் கொண்டேன்!

கவிஞர் திலகம் சாரண பாஸ்கரனுடைய கற்பனையைத்தான் அபேஸ் செய்து தன் பாடலில் கவிஞர் வைரமுத்து பயன்படுத்தினார் என்று நான் சொல்ல வரவில்லை. ஒரே மாதிரியான கற்பனைகள் கவிஞர்களின் மனதில் சிறகடிப்பது ஆச்சரியம் ஒன்றுமில்லை. “Great Minds think alike” என்பார்கள். கவிஞர் வைரமுத்துவுக்கு பிறந்த அதே கற்பனை கவிஞர் திலகத்திற்கு 1958-ஆம் வருடமே பிறந்து விட்டது என்பதுதான் நிதர்சனமான உண்மை. 

தாலாட்டு

தமிழிலக்கியத்தில் தாலாட்டுப் பாடல் பாடாத கவிஞர்களே கிடையாது என அறுதியிட்டு உறுதியாகக் கூறலாம், கவியரசர் கண்ணதாசனின் தாலாட்டுப் பாடலுக்கும் கவிஞர் திலகம் சாரணபாஸ்கரனாரின் தாலாட்டுப் பாடல்களுக்கு உள்ள வேறுபாட்டை இங்கு காண்பிக்க விரும்புகிறேன் 

“அவனை எழுப்பாதீர்

அப்படியே தூங்கட்டும்

ஆழ்ந்த துயிலினிலே

அமைதியினைக் காணட்டும் 

அன்புக் குழந்தையவன்

அரையாண்டுச் செல்வனவன்

இந்த வயதினிலே

இப்போது தூங்குவதே

சுகமான தூக்கம், அவன்

சுகமாகத் தூங்கட்டும் !

கண்ணை விழித்திந்தக்

காசினியைப் பார்க்குங்கால்

என்ன துயர்வருமோ

எங்கெங்கே அடிவிழுமோ

காதல் வருமோ

காதலுக்குத் தடைவருமோ

மோதல் வருமோ

முறைகெடுவார் துணைவருமோ?

நன்றியிலா நண்பர்கள்தாம்

நாற்புறமும் சூழ்வாரோ 

நலமிழந்த பெண்ணொருத்தி

நாயகியாய் வருவாளோ

செய்யத் தொழில்வருமோ 

திண்டாட்டந்தான் வருமோ

வெய்யில் அழைத்துவரும்

வியர்வையிலே நீராடி

“ஐயா பசி” என்

றலைகின்ற நிலைவருமோ?

என்ன வருமென்று

இப்போது யாரறிவார்

அவனை எழுப்பாதீர்

அப்படியே தூங்கட்டும் !

கோடிக் கதிபனெனக்

குறையாது வந்தாலும்

நாட்டுத் தலைவனென 

நல்வாழ்வு பெற்றாலும்

கேட்ட பொருளெல்லாம்

கிடைத்தாலும், அவன் வீட்டு

மாட்டுக்கும் கூட

மரியாதை கிடைத்தாலும்

பஞ்சணைகள் இருந்தாலும்

பால்பழங்கள் உண்டாலும்

சொத்துள்ள காரணத்தால்

தூக்கம் பிடிக்காது!

அவனை எழுப்பாதீர்

அப்படியே தூங்கட்டும்!

இது கண்ணதாசன் தன் பேரக்குழந்தைக்கு பாடிய தாலாட்டுப் பாடல். “அவனை எழுப்பாதீர் அப்படியே தூங்கட்டும்” என்று தானெழுதிய பாடல்தான் அறமாக பலித்து விட்டதோ என அப்பாலகன் அற்ப வயதில் மரணித்தபோது கதறியழுது வேறொரும் பாடலும் இயற்றினார்.

கவிஞர் திலகம் சாரணபாஸ்கரனுக்கு 40-வது வயதில் ஒரு குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு முகம்மது இக்பால் என பெயரிட்டு மகிழ்ந்தார். கவிஞர்கள் தங்கள் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் நேர்மறை எண்ணங்களாக (POSITIVE THOUGHTS) இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்கள், “எண்ணத்தின் அளவே செயல்” என்ற சான்றோர் வாக்குண்டு. கவிஞர் சாரணபாஸ்கரனுடைய கவிதை வரிகளில் “தூங்கிவிழி” என்ற சொற்களையே நாம் காண முடிகிறது. எதிர்மறை எண்ணங்களை அவர் தன் பாடலில் தவிர்ப்பதை (NEGATIVE THOUGHTS)  நம்மால் நன்கு உணர முடிகிறது.. இதோ நம் கவிஞரின் தாலாட்டுப் பாடல்.

ஆராரோ ஆரீரரோ

ஆருயிரே என்மகனே !

சீராகக் கண்வளர்ந்து 

சீக்கிரமே தூங்கிவிழி !

பாரோர் புகழ்ந்துரைக்கப் 

பாட்டியரும் பூட்டியரும்

சீராட்டித் தாலாட்டச்

சிரிப்பவனே தூங்கிவிழி !

ஊரார் உறவினரும்

உற்றவரும் பெற்றவரும்

பாராட்ட வந்துதித்த

பனிமலரே தூங்கிவிழி !

நேராரும் இல்லையென்று 

நீள்நிலமே போற்றிடவே

காரார் முகிலெனவே

கவிபொழியத் தூங்கிவிழி !

தள்ளாடிக் காலூன்றித்

ததிங்கினத்தோம் தாளமிட்டுச் 

சொல்லாட வந்தவனே

சோர்வகற்றத் தூங்கிவிழி !

இல்லறத்தின் நற்பரிசாய்

எண்ணைந்து வயதினிலே 

நல்லறத்தை காக்கவந்த 

நன்மகனே தூங்கிவிழி !

ஏமாற்றும் எத்தனாகி 

ஏமாறும் பித்தனாகி

பூமிச்சுமை யாகாமல்

பொலிவு பெறத் தூங்கிவிழி !

பெற்றவரைப் பிறந்தவரைப்

பெரியவரை வறியவரை

கற்றவரைப் போற்றவந்த

கண்மணியே தூங்கிவிழி !

சோம்பல் தலையகற்றிச்

சூழ்பகையை வெற்றிகொள்ள

ஆம்பல் மலராக 

ஆருயிரே தூங்கிவிழி !

போலிகளும் கூலிகளும்

பொதுவாழ்வில் புகுதாமல்

வேலியாகக் காவல்செய்யும்

வீரனாகத் தூங்கிவிழி !

பொய்யுரைத்து பொன்குவித்துப்

புகழ்வரித்து வாழாமல்

மெய்யுரைத்து வையகத்தே

மேன்மைபெறத் தூங்கிவிழி

தாலாட்டுப் பாடலை வெறும் தாலாட்டாகப் பாடாமல் எல்லோருக்கும் பொருந்தும் வகையில் வளரும் சமுதாயத்திற்கு கூறும் அறிவுரையாக நாம் ஏற்றுக்கொள்ளும் வகையில் உள்ளது இத்தாலாட்டுப் பாடல். .

அதிகாரம் தந்தால்

“முதல்வன்” என்றொரு பெயரில் திரைப்படமொன்று வெளியானது. ஒரு மனிதனுக்கு ஒரு நாள் முதல்வர் பதவி கிடைக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தால் அவன் என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பதே அந்த திரைப்படத்தின் கதைக்கரு. 

தமிழ்நாட்டை ஆளுகின்ற வாய்ப்பு தகுதி படைத்தோருக்கும் கிடைத்தது,  அதேபோன்று நேற்று பூத்த மழையில் இன்று பூத்த காளான்கள் சிலருக்கும் அந்த அதிருஷ்டம் வாய்த்தது. அப்படியொரு குருட்டு அதிருஷ்டம் தங்களுக்கு ஒருநாள் வாய்க்கும் என அவர்கள் கனவில்  கூட நினைத்திருக்க மாட்டார்கள். 

சாரணபாஸ்கரன் அவர்கள் 1953-ஆம் ஆண்டு எழுதிய அக்கவிதையின் தலைப்பு என்ன தெரியுமா? “அதிகாரம் தந்தால்” என்பதே அத்தலைப்பு. 

“என்னருமை தாயகத்தின் தலையெ ழுத்தை

—எழுதென்று என்னிடத்தே ஒப்ப டைத்தால் 

நன்றென்று ஒப்பிடுவேன், கடமை ஏற்பேன் 

—நவயுகத்தின் ஒளிமுகமாய் நாட்டை ஆக்கி 

என்றென்றும் உலகத்தார் மதிப்பை ஏற்கும் 

—எழில்மிக்க பூங்காவாய் இலங்க வைப்பேன் 

இன்றல்ல வென்றாலும் என்றைக்கேனும் 

—எனதெண்ணம் உருவாகக் காண்ப துண்மை ! 

என்று அப்பாடலைத் தொடங்குகிறார். மேலும்

இல்லாரை உயர்த்திடவும் திட்டம் செய்வேன்   

—இருப்போரை இந்நாட்டின் செல்வ மென்பேன்!

கல்லாரைத் திரட்டிடுவேன் கற்றோர் கல்வி

—கற்பித்தல் கட்டாயக் கடமை என்பேன் 

எல்லோரும் இந்நாட்டு மன்னரென்ற 

—எண்ணத்தை மாற்றிடுவேன் உழைக்கச் செய்வேன்

பல்லோரும் இணைந்ததுவே தேசமென்பேன்

—பரவுகின்ற வேற்றுமையை வெட்டிச் சாய்ப்பேன் !

அன்று தனக்கு அதிகாரம் கிடைந்தால் தான் செய்ய நினைக்கும் அத்தனை சாதனைகளையும் ஒவ்வொன்றாக பட்டியலிடுகிறார். “எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்பது எல்லோரும் சரிக்குச் சமம் என்ற பெருமை கொண்டது என்று நாம் நினைத்திருந்தோம். ஆனால் கவிஞர் திலகத்தின் சிந்தனை முற்றிலும் வேறு விதமாக இருக்கின்றது. “எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்ற நினைப்பு ஒருவனுக்கு வந்து விட்டால் அவன் சேம்பேறியாகி விடுவான்; உழைக்க மாட்டான். அதற்கு மாறாக இந்தியக் குடிமகன்கள் ஒவ்வொருவரையும் உழைக்கச் செய்வேன். உழைப்பால் மட்டுமே ஜப்பான் நாட்டைப் போன்று ஒரு நாடு அபரித வளர்ச்சி பெற முடியும் என்ற ஆக்கபூர்வமான சிந்தனைக் கொண்டவராக நம் கவிஞர் இருந்திருக்கிறார். 

தமிழ்ப் பற்று 

அதுமட்டுமல்ல கவிஞர் திலகம் அவர்களுக்கு தமிழில் மேலிருந்த பற்றுதலை வார்த்தைகளில் அடக்க இயலாது. எனக்கு முதலில் அதிகாரம் தந்து பாருங்கள். பிறகு தெரியும் என்று சூளுரைக்கின்றார். 

புதிய தேசியக் கல்விக் கொள்கையின்படி நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கை கட்டாயமாக செயல்படுத்த  மத்திய அரசு தொடர்ந்து எடுத்துவரும் முயற்சிகள் நாமெல்லோரும் அறிந்ததே. தமிழுக்கு வெறும் ரூ.22 கோடி ஒதுக்கி,  சமஸ்கிருதத்திற்கு ரூ.643 கோடியை ஒதுக்கிய மத்திய அரசின் சூழ்ச்சியை அறியாத அளவுக்கு நாமொன்றும் முட்டாள்கள் அல்ல. 

நம் கவிஞர் திலகம் பிறமொழிகளுக்கு என்றைக்கும் எதிரி அல்ல. அதேசமயம் தமிழ் மொழிக்கு யாரேனும் தீங்கிழைத்தால் அதனை அவர்  பொறுத்துக் கொண்டிருப்பவரும் அல்ல. 

தாய்மொழியை இழிவுச் செய்யச் சகிக்க மாட்டேன் 

—தனியுரிமை பாராட்டி ஒடுக்க மாட்டேன்

தாய்மொழியின் பற்றுதலால் பிறமொ ழிகள்

—தகைமையினை மறுப்போரை மதிக்க மாட்டேன்

சேய்விழியில் நீரொழுகப் பிறர்மு கத்தில் 

—சிறுநகையே எழுப்புதற்கும் முயல மாட்டேன் !

வாய்மொழியில் நம்பிக்கை கொண்டால், நாட்டின்

—வாழ்வுக்கு அதிகாரம் எனக்குத் தாரீர் !

தமிழ் மொழியின் மீது அவருக்கிருந்த பற்றுதல் நம்மை மெய்ச்சிலிர்க்க வைக்கின்றது.    

சமூகச் சிந்தனை 

கவிஞர் சாரணபாஸ்கரன் சமுதாயச் சிந்தனை கொண்டவர். அல்லாமா இக்பால் சதா தன் சமுதாயத்து இளைஞர்களின் போக்கைக் கண்டு எப்படி கவலைப்பட்டாரோ அதேபோன்று தன் ஒவ்வொரு பாடலிலும் தன் மனக்குமுறலை வெளிப்படுத்தியவர். 

தாவுத்ஷா அவர்களை ஆசிரியராகக் கொண்டு 12.10.1947-ஆம் ஆண்டு வெளிவந்த தாருல் இஸ்லாம் இதழில் கவிஞர் சாரணபாஸ்கரன் எழுதிய பாடலிது: 

துன்மார்க்க இருள் படர்ந்த

—தொல்லுல கெல்லாம் உய்ய

நன்மார்க்க ஒளியைப் பாய்ச்சி 

—நஞ்சினை அமுத மாக்கிப் 

பன்மார்க்கப் புகழை ஏற்கும் 

—பரிபூர்ண நிலையில் நிற்கும்

சன்மார்க்க இஸ்லாம் தந்த 

—சகோதரா சற்றே கேளாய் !

மடமையை உடைத்த வம்ச 

—வழியினில் வந்த நீயுன்

கடமையை உணருங் காலம்

—கருத்தினைத் திருத்துங் காலம் 

திடமுட னின்றே என்று 

—சிந்தையில் பதிய வைத்து

உடனெழுந் துன்ச மூகத்

—தியிர்நிலை காக்க வாராய் !

குறையுள அதிகாரத் தார் 

—கொடுத்திடும் சட்டம் பேணித்

தரையினில் வாழு முன்றன்

—சமுதாயம் சார்ந்த வர்கள்

மறையுரை இறையின் சட்டம்

—மதித்திடா துழலக் கண்டும்

பறையறை கின்றாய்  ‘முஸ்லிம்

—பரிசுத்த வான்க’ ளென்று !

பேச்சிலே பெருமை காட்டல்

—பித்தரின் செய்கை என்ற

ஏச்சினைத் தந்த இஸ்லாம்

—இனத்தினில் பிறந்தோ ரின்று 

பேச்சிலே வாழு கின்ற 

—பேதைமை அறிந்து முன்றன்  

மூச்சிலே கனல் விடாது

—முஸ்லிமென் றிசைப்ப தேனோ?

கலையினை உலகிற் கீந்து 

—கர்த்தனை அன்றி யார்க்கும் 

தலையினைச் சாய்க்கோம் என்ற 

—தன்மானம் காக்கும் வீர 

நிலையினை புகட்டு மிஸ்லாம் 

—நெறியினை முஸ்லி மென்போர் 

குலைத்திடக் கண்டும் வீணே

—குந்திடல் குற்ற மன்றோ?

சாரண பாஸ்கரனின் கவிதைகளை ஆராய்ந்துப் பார்க்கையில் தன் சமுதாயத்தை உயர்நிலைக்கு வரவேண்டும் என்ற ஆதங்கம் அவரது வரிகளில் உணர்சிப் பிழம்பாய் வெளிப்படுகிறது. அவரது இறைஞ்சுதலை இதயக்குமுறலாக ஆங்காங்கே எடுத்து வைக்கின்றார். இறைவனையன்றி யாருக்கும் அஞ்சாத மனத்திடத்தை அவரது பாடல் வரிகளில் நாம் காண்கின்றோம். 

தோளெடுக்கும் பெற்றோரை இழந்தபோதும்

—துணைகொடுக்கும் சுற்றத்தார் பிரிந்தபோதும் 

வாளெடுக்கும் கொடும்பகைவர் சூழ்ந்தபோதும்

—வறியவரில் வறியவராய் வாழ்ந்தபோதும்

ஆளொடுக்கும் பசிப்பிணியே அடைந்தபோதும்

—அல்லாஹ்வே நின்னாணை மறவாத் தூதர்

தாளெடுக்கும் சமுதாயம் தாழ்ந்தி டாமல்

—தலைநிமிர்ந்து வாழ்ந்திடவே தயைசெய்வாயே !

பாருலக மாந்தரிலே ஏற்றத் தாழ்வைப்

—படைக்கின்ற சிறுமதியை உடைத்தெ றிந்தே

ஈருலக வாழ்வுக்கும் உரியோ னான 

—இணையற்ற நின்பெயரை இகத்தில்நாட்டச் 

சீருடலைச் சிதைக்கின்ற எதிர்ப்பும்ஏற்ற 

—திருநபியின் அரும்வழியில் திரண்டு நிற்போர்

ஆறுதலைப் பெறுவதற்கு அலைதல் நன்றோ

—அல்லாஹ்வே நின்னருளைச் சொரிந்து காப்பாய் !

அல்லாமா இக்பால் எழுதிய உணர்ச்சிமிகு வரிகளை இங்கு நான் நினைத்துப் பார்க்கின்றேன்.. 

//நாம் வாள் நிழலிலே வளர்ந்தோம்

வாள் நிழலிலேயே வாலிபமடைந்தோம்

இரு முனையும் கூர்மையான

இளம் பிறையே எங்கள் சமூகச் சின்னம்//

என்று பாடி இளைஞர்களுக்கு உரமேற்றினார். 

//எந்த இனத்தில் இளைஞர்களின் இதயம்

எஃகைப் போல உறுதியாக இருக்கிறதோ,

அந்த இனத்துக்கு வாள் தேவையில்லை//

என்று அழகாக எடுத்துரைப்பார் அவர்.

//இரவின் பயங்கர இருளிலே

களைப்படைந்த என் ஒட்டகப் படையை

வழி நடத்திச் செல்வேன்;

என் மூச்சு தீச்சுடரைக் கொளுத்தும்;

என் பெருமூச்சு தீப்பொறியைக் கக்கும்//

என்று இஸ்லாமிய இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைக் நயமாகக் கூறி தேற்றியவர் அவர்.

“வாளெடுக்கும் கொடும்பகைவர் சூழ்ந்தபோதும்” தலைநிமிர்ந்து வாழக்கூடிய மனோதிடத்தை இறைவனிடன் இறைஞ்சும் கவிஞர் சாரணபாஸ்கரின் மனநிலையும் இதே உறுதியுடன்தான் இருக்கின்றது. ஆதங்கம், வீரம், தன்மானம், இறைபக்தி, கோபம், நாட்டுப்பற்று எல்லாவற்றையும் ஒரு சேர வெளிப்படுத்துகிறார் அவர்.  

//ஈட்டியின் முனையில் நிறுத்தியபோதும்

ஈமான் இழக்க மாட்டோம்

காட்டிக் கொடுத்திடும் கயவர்கள் தம்மை

கனவிலும் விடமாட்டோம்

எல்லாம் இயன்ற ஏகனுக் கல்லால்

எவருக்கும் அஞ்சமாட்டோம்

நல்ல நம் நாட்டு நன்றியை மறந்து

நழுவியே ஓடமாட்டோம்//

என்று பாடிய நாகூர் புலவர் ஆபிதீன் பாடல்களில் காணும் அதே உணர்வை, அல்லாமா இக்பால் வெளிப்படுத்தும் அதே ஆதங்கத்தை கவிஞர் திலகம் சாரணபாஸ்கரனார் எழுத்துக்களிலும் நாம் கண்டு வியக்கிறோம் 

தொடரும்…
நாகூர் அப்துல் கையூம்

பாகம் 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *