தமிழோடு நிலைக்கப் பிறந்தவன் – பாகம் – 4/6

பாகம் 3

கவிஞனுக்கென்ற இலக்கணம்

கவிஞன் என்பவன் வானத்திலிருந்து திடீரென்று வந்துக் குதிப்பவனல்ல. கவிஞன் என்பவன் சமுதாயத்தோடு வளர்பவன். சமுதாயத்தின் பிரதிநிதியாய் சமுதாயத்திற்காக குரல் கொடுப்பவன். கவிஞனுக்கு அன்றாடச் செய்திகள் அத்துப்படியாக இருக்க வேண்டும். விஞ்ஞான வளர்ச்சி, நாட்டு நடப்பு, அரசியல் மாற்றம், அன்றாட நிகழ்வு அனைத்தும் அவன் அறிந்தவனாக இருக்க வேண்டும். வெறும் கவியாற்றல் இருந்தால் மட்டும் போதாது. இதுதான் கவிஞனுக்கான தகுதி. 

பாரதியைக் காட்டிலும் கவிஞர் திலகம் சாரணபாஸ்கரனின் எண்ணங்கள் பாரதிதாசனின் சிந்தனைகளோடு ஒத்துப் போயின. எனவேதான் அவரை “கூத்தாநல்லூர் பாரதிதாசன்” என போற்றிப் புகழாரம் சூட்டி உளம் மகிழ்ந்தனர்.. 

“நமக்குத் தொழில் கவிதை” என்றான் பாரதி. “கவிதை என்பது ஒரு தொழிலல்ல; அது ஒருவனின் ஆத்மராகம்” என்ற புகழ்ப்பெற்ற சோவியத் கவிஞர் மிகாயில் சுவெத்லாவின் பொன்மொழியை நமக்கு நினைவுறுத்துகிறார் நம் கவிஞர் திலகம். 

“கவிதை பிறக்கிறதேயன்றி; அதை யாரும் பெறுவதில்லை” என்ற தாந்தேயின் கூற்றை நமக்கு போதிக்கிறார், “கவிஞன் எப்போதுமே இரட்டை வேடம் போட முடியாது. அவன் தன் படைப்புகளில் ஒருவனாகவும்,  வாழ்க்கையில் வேறு மனிதனாகவும் வாழ முடியாது. அவனது படைப்பையும் வாழ்வையும் வெவ்வேறாகப் பிரிக்கவே முடியாது” என்ற ரஷ்யக் கவிஞர் ராபர்ட் ராஷ்தெஸ்த் வென்ஸ்கி பகர்ந்த வார்த்தைகளை நமக்கு அறிவுறுத்துகிறார் நம் கவிஞர்.  மேலும் “ஒருவன் ஒரே சமயத்தில் மகனாகவும்,  கணவனாகவும், தந்தையாகவும், பாட்டனாகவும் வாழ முடியும். ஆனால் கவிஞன் எப்போதுமே கவிஞன்தான் என்ற உண்மையை நமக்கு உரக்கச் சொல்கிறார்.

கவிஞனுக்கான இலக்கணத்தை எப்படி அவர் வருணித்தாரோ அதேபோன்று வாழ்ந்தும் காண்பித்தார் கவிஞர் திலகம். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் மோசமானக் கலையை அவர் ஒருக்காலும் கற்று வைத்திருக்கவில்லை. எதார்த்தமான பேச்சு, எதார்த்தமான நடப்பு இதுதான் அவரது எதார்த்தமான வாழ்க்கையாக இருந்தது. 

உலக அறிஞர்களின் கூற்றினை யாவும் அறிந்து வைத்திருக்கும் கவிஞர் சாரணபாஸ்கரன் மெத்தப் படித்தவர் என்பதை நம்மால் புரிந்துக் கொள்ள முடிகிறது, வெறும் ஏட்டுக் கல்வியைக் காட்டில் உலக அறிவு ஒருவனை அறிவு ஜீவியாக்கி விடுகிறது, இதற்கு “கூத்தாநல்லூர் பாரதிதாசன்” பொருத்தமான  எடுத்துக்காட்டு,

அரசியலும் ஆசுகவியும் 

“கொடுத்த பொருளில்; தொடுத்த இன்பத்தில்; அடுத்த பொழுதில் பாடுவது ஆசுகவி” என ஆசுகவிக்கு விளக்கம் தருவார்கள் ஆன்றோர்கள்.  ‘ஆசுகவி வீசு புகழ்க் காளமேகம்’ என காளமேகப் புலவருக்கு ஒரு பெருமை உண்டு. அதேபோன்று கண்ணிமைக்கும் நேரத்தில் எந்தவொரு தலைப்பிலும் பாடல் புனையும் பேராற்றல் படைத்தவர்  கவிஞர் திலகம் சாரண பாஸ்கரனார் என்றால் அது மிகையாகாது. 

“அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் அரசியல்” என்றார் சாமுவேல் ஜான்சன். அவர் யாரை மனதில் வைத்துச் சொன்னார் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் ‘வெளுத்ததெல்லாம் பால்’ என நினைக்கும் வெள்ளந்தி மனசு கொண்ட அப்பாவி கவிஞர்களுக்கு அரசியல் அணுவளவும் ஒத்து வராது என்பது மட்டும் நாம் அனுபவத்தில் கண்ட அசத்தலான உண்மை. கவிஞர்களுக்கும், அரசியலுக்கும் சரிப்பட்டு வராது; அது ஏழாம் பொருத்தம் என்பது எழுதப்படாத சட்டம் போலும். பாவேந்தர் பாரதிதாசன், கண்ணதாசன், சாரணபாஸ்கரன் இவர்கள் அனைவரது வாழ்க்கையையும் நாம் எடுத்துக்காட்டாகச் சொல்ல முடியும். 

தந்தை பெரியாரின் அதிதீவிர தொண்டராகத் திகழ்ந்து, திராவிட இயக்கத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன்  விளங்கிய புதுவைக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் 1954-ஆம் ஆண்டு புதுச்சேரியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இவரது அரசியல் வாழ்க்கை அதிக நாள் நீடிக்கவில்லை, சட்ட மன்றத் தேர்தலில் 1960 – ல் தோல்வியைத் தழுவினார்.

கவிஞர் கண்ணதாசன் திமுகவிலிருந்து தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.  திமுகவிலிருந்து ஈ.வி.கே.சம்பத்துக்கு ஆதரவாக வெளியேறி கலைஞர் மற்றும் எம்.ஜி.ஆர். உட்பட அனைவரையும் கடுமையாக விமர்சித்தார். தமிழ் தேசியக் கட்சி, காங்கிரஸ் என மாறி மாறி அரசியல் பயணத்தைத் தொடர்ந்தாலும் அவரால் அரசியல் வானில் நட்சத்திரமாக ஒளிர இயவில்லை. அரசியல் என்ற பெயரில் தான் சேர்த்துவைத்த செல்வத்தை இழந்ததுதான் மிச்சம். பிற்காலத்தில் எம்.ஜி.ஆரால் ‘அரசவைக் கவிஞர்’ எனும் பதவி அவருக்கு வழங்கப்பட்டது மட்டும்தான் அவர் அரசியலால் அடைந்த இலாபம் எனலாம். 

கவிராஜன் பாரதியே திருவல்லிக்கேணி தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் கூட தோல்வியைத்தான் தழுவியிருப்பான் என்பது என் கணிப்பு. 

1962-ஆம் ஆண்டு தமிழகத்தில் தேர்தல் சூடு பிடிக்கத்தொடங்கியது. தி.மு.க மற்றும் முஸ்லீம் லீக் இவையிரண்டும் கூட்டுச் சேர்ந்து களமிறங்கின.  காயிதேமில்லத் மற்றும் அறிஞர் அண்ணா  இரு பெருந்தலைவர்களும்  தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். முஸ்லீம் லீக் சார்பாக தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் பிரபலமாகத் திகழ்ந்த அறிவுஜீவிகள் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டனர். நம் கவிஞர் திலகம் சாரணபாஸ்கரனார் நாகை சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். அரசியல் எல்லோரும் கைவந்த கலை அல்ல என்ற மறக்க முடியாத படிப்பினையை அது அவருக்கு கற்றுக் கொடுத்தது. 

பிரமுகராக பினாங்கு நகரில்

பினாங்கில் தமிழ் இலக்கியத்துறையில் கவிஞர் திலகம் சாரணபாஸ்கரனுக்கென ஒரு நீங்காத இடம் எப்போதுமே உண்டு. பினாங்கில் தமிழ்ப் பத்திரிகை உலகில் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள்  ஹமீது களஞ்சியம் மற்றும் கவிஞர் திலகம் சாரண பாஸ்கரன் அவர்கள். அவரது எழுத்துக்களை வாசிப்பதற்கென்றே ஒரு ரசிகர் கூட்டம் அக்காலத்தில் அவருக்கென்று உருவானது. உணர்ச்சிமிக்க கவிதை வரிகளால் உள்ளத்தை உசுப்பிவிடும் உன்னதக்கலையை அவர் தனதாக்கி வைத்திருந்தார்.

பினாங்கு நகரின் பத்திரிக்கை வரலாறு ஒரு சகாப்தம். 1912-ஆண்டிலேயே “பினாங்கு ஞானாச்சாரியன்” என்ற பத்திரிக்கை முதலில் வாரமிருமுறையாகவும் பின்னர் நாளிதழாகவும் வெளிவந்தது.  .அதை வெளியிட்டவர் சம்சுகனி ராவுத்தர். 

1960-ல் வட மலாயா தமிழ் எழுத்தாளர் சங்கம் நிறுவப்பட்டபோது அதன் தலைவராக இருந்தவர் கே.கே.டி. முகமது இப்ராஹிம்  மற்றும் அதன் செயலாளராக கவிஞர் நக்கம்பாடி கரீம் பதவி வகித்தனர். அதன் பின் என் நண்பர் முகம்மது யூசுப்பின் தந்தையார் ஜே.எம்.ஹுசேன் சங்கத்தின் தலைவராகச் செயலாற்றினார்.  இவர் புகழ்ப்பெற்ற பத்திரிக்கையாசிரியர் ஜே.எம்.சாலி அவர்களுடைய மூத்த சகோதரர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. 

“மலாயா மித்திரன்” (1932), “தேச நேசன்” (1933), “மலாயா” (1954) ஆகிய தமிழ் நாளிதழ்களின் ஆசிரியர்கள் தமிழ் முஸ்லிம்கள்தான். 1950-ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து வெளிவந்த “களஞ்சியம்” நாளிதழின் ஆசிரியராக சாரணபாஸ்கரன் பணியாற்றினார். நாளிதழ் என்ற அடிப்படையில் செய்திகளுக்கு முக்கியத்துவம் தந்து அது வெளியானது. இடைக்கிடையே சிறுகதைகள், கவிதைகள், ஆய்வுக் கட்டுரைகள், புதினங்கள் அதில்  வெளிவந்தன.  

மலேசியாவிலிருந்துக்கொண்டு சாதிப்பதை விட தமிழகம் திரும்பி வந்தால் நிறைய சாதிக்கலாம் என்ற எண்ணத்தில் கவிஞர் திலகம் தமிழகம் திரும்பி வந்தார். ஆனால் அவர் நினைத்ததுபோல் அரசியலில் பெரிதாக எதுவும் சாதிக்க முடியவில்லை. .அரசியலிலும் இலக்கியத் துறையிலும் தமிழகத்து பிரபலங்கள் அத்தனை பேர்களுடனும் அவர் நெருங்கியத் தொடர்பில் இருந்தார். திருச்சி வானொலி நிலையம், கவியரங்கங்கள், மீலாது விழாக்கள், அரசியல் கூட்டங்கள், பட்டி மன்றங்கள் என இலக்கிய மேடைகளில் வலம் வந்த வண்ணமிருந்தார். பெரிய அளவுக்கு அங்கீகாரம் அவருக்கு கிடைக்கவில்லை என்றேதான் சொல்ல வேண்டும். இடையிடையே மலேசியா, சிங்கப்பூருக்கு அவ்வப்போது போய்வந்த வண்ணமிருந்தார். 

கூத்தாநல்லூர்

“குட்டி சிங்கப்பூர்” எனப்படும் தஞ்சை மாவட்டத்து கூத்தாநல்லூரைச் சேர்ந்தவர்கள் மலேசியா, சிங்கப்பூர் நாட்டில் பெருஞ் செல்வந்தராக பெயர் பெற்று விளங்கினர்.. அவர்கள் அங்கு பொருளீட்டி தங்கள் சொந்த ஊரில் கட்டியிருந்த ஒவ்வொரு வீடும் கலைநயமிக்க பங்களாவாக திகழ்ந்தன. கவிஞரின் காலத்தில் மலேயா சென்றவர்கள் பலசரக்குக் கடை, பணம் பரிமாற்று வியாபாரம் (Mony Exchanger), மரக்கடை (Timber Merchant) எழுதுபொருள் வியாபாரம் (Stationery), புத்தக நிலையம் (Bookshop) என பலதரப்பட்ட வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்தனர். தற்காலத்தில் சமுதாயத் தலைவர்களாகவும், புகழ்ப்பெற்ற வழக்கறிஞர்களாகவும், மருத்துவர்களாகவும், பொறியியல் வல்லுனர்களாகவும் பல்கலைக்கழக பேராசிரியர்களாகவும் விளங்குகின்றனர்.

தற்போதைய கணக்குப்படி 300-க்கும் மேற்பட்ட கூத்தாநல்லூரை பூர்வீகமாகக் கொண்ட குடும்பங்கள் சுமார் 2,500 பேர்கள் சிங்கப்பூரில் மட்டும் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர்.

கவிஞர் சாரணபாஸ்கரனாரைப் பொறுத்தவரை வியாபாரம் செய்ய எத்தனையோ வாய்ப்புகள் வந்தபோதும், தமிழ் மீதுள்ள பற்றுதலால், தமிழ் மொழியை வளர்ப்பதில் மட்டுமே கண்ணும் கருத்துமாக  இருந்து  எழுத்துலகில் மட்டுமே தன் முழுகவனத்தையும்  செலுத்தி வந்தார். ‘பிழைக்கத் தெரியாத மனிதர்’ என்றெல்லாம் அவரை விமர்சித்தனர். 

கவிஞருக்கு புகழ்மாலை 

இஸ்லாமியக் கலைக் களஞ்சியத்தின் ஆசிரியர் எம்.ஆர்.எம். அப்துற் ரஹீம் அவர்கள் சாரணபாஸ்கரனுக்கு சூட்டியிருக்கும் புகழ்மாலை சுவை குன்றாத பாமாலை.

தேன் தமிழில் காப்பியங்கள் திறம்படவே செய்தளிக்கும்

வான்புகழ்சேர் பாஸ்கரர்க்கு உவமையார் அம்மானை

வான்புகழ்சேர் பாஸ்கரர்க்கு உவமையார் ஆமாயின் 

ஆன்றறிவின் அமுதகவி அகமதுவே அம்மானை

அஹ்மதுவும் பாஸ்கரரும் அவரேதாம் அம்மானை !

கவிஞர் திலகத்தின் நூல்கள் 

கவிஞர் திலகம் சாரணபாஸ்கரன் எழுதிய உரைநடை நூல்கள் 1, சிந்தனைச் செல்வம், 2.பாலயோகியின் பிரார்த்தனை, 3. காந்திஜியின் கடைசி வாரம், 4. சாகாத ஜின்னா ஆகியவை..

அவர் எழுதிய கவிதை நூல்கள் பின்வருமாறு: 1.மணியோசை, 2.சாபம், 3.சங்கநாதம், 4.இதயக்குமுறல், 5.மணிச்சரம், 6.நாடும் நாமும், 7.சாரண பாஸ்கரன் கவிதைகள் ஆகியவை, 

அவரது தலையாய காவியம் “யூசுப் சுலைகா” என்பது நாமெல்லோரும் அறிந்ததே. 4000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இறைத்தூதர் யூசுப் நபி அவர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்வு இது. விவிலியமும் திருக்குர்ஆனும் கூறும் கதை இது. இக்காப்பியம் 66 இயல்கள், 864 பாடல்களால் ஆனது. நிலைமண்டில ஆசிரியப்பா,  நேரிசை ஆசிரியப்பா அகிய பா வகைகளும், கலிவிருத்தம், ஆசிரிய விருத்தம் ஆகிய பாவினங்களும் கலந்துள்ளன. ஆசிரிய விருத்தத்தில் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களே அதிகமாக உள்ளன. பாரதியின் எளிமை, பாரதிதாசனின் வீரம், கம்பனின் கற்பனை, உமறுப் புலவரின் சொல்லாட்சி, குறளின் தோற்றம், குணங்குடியாரின் ஒலிநயம் கொண்ட காப்பியமிது என தமிழறிஞர்களால் பாராட்டப்பட்ட காவியம் இது.

அம்பிகாபதி அமராவதி, லைலா மஜ்னு, ரோமியோ ஜூலியட் இவைகளுக்கு இணையான காப்பியம்.

நானெனும் தனிமை கொண்டால்

—நஞ்செனக் கொல்லும் காதல்

தானெனும் எண்ணம் நீங்கித்

—தன்னலம் யாவும் போக்கில்

தேனெனச் சுவைக்கலாகும்

—தெரிந்தவர் உரைக்கக் கூடும்

இருவரின் இதயத் துள்ளும்

—எழுவதே உண்மைக் காதல்

ஒருவரின் உள்ளம் மட்டும்

—ஒப்பிடில் காதல் அன்றே

இருவரும் இணைந்தால் சொர்க்கம்

—இல்லையேல் நரக மாகும்

என்ற வரிகள் கவிஞரின் காதல் ரசம் சொட்டும் கற்பனைக்கு நற்சான்று. 

இவையன்றி நாளிதழ்களிலும் ஏனைய பத்திரிக்கைகளிலும் அவர் அவ்வப்போது எழுதிவந்த கவிதைகள் கணக்கிலடங்காது. 

சீட்டுக்கவியும் கவிஞனின் மனநிலையும்

கவிஞனுக்கும் சாதாரணதொரு மனிதனுக்கும் மனநிலையில் நிறையவே வித்தியாசமுண்டு, சாதாரண மனிதன் தனக்கு பொருளுதவி தேவைப்படும்போது பிறரிடம் கேட்கும் உதவியை ஒருபோதும் பகிரங்கப்படுத்த மாட்டான். அது கேட்பவனுக்கும் கொடுப்பவனுக்கும் இடையே நடக்கும் இரகசிய பரிவர்த்தனம். ஆனால் கவிஞனின் மனநிலையே வேறு. அவன் யாருக்கும் தலைவணங்கமாட்டான். தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பான்.  ஊர் என்ன சொல்லுமோ உலகம் என்ன தூற்றுமோ என்று யாருக்கும் பயப்படமாட்டான். 

சீட்டுக்கவியைப் பற்றி கவிஞரின் எண்ணவோட்டம் எப்படியிருக்கிறது என்பதை அவருடைய வார்த்தைகளிலேயே கேளுங்கள். “கவிஞனின் வாழ்வை, உணர்வை, மனோநிலையைக் காட்டும் கண்ணாடி போன்றது ‘சீட்டுக்கவி.  ஒரு கவிஞன் தன்னோடு தொடர்பு  உடையவர்களுக்கு எழுதும் கடிதமே கவியால் அமைந்து சீட்டுக்கவியாகிறது. இதை அவன் உயிரோடிருக்கும் காலத்தில் மற்றவர்கள் பார்க்க முடியாது. கவிஞனுக்கு பிந்திய காலத்தில்தான் இவை மற்றவர்களின் பார்வைக்குக் கிடைக்கும். இதில் இடம் பெற்றுள்ள எனது சீட்டுக்கவிகளை நானே தேடி எடுத்து இடம்பெறச் செய்துள்ளேன்” என்று தலைநிமிர்த்தி பெருமையுடன் சொல்லுகிறார்.  என்னவொரு வெகுளித்தனமான பேச்சு! கவிஞரின் இந்த ஒளிவு மறைவில்லா வெளிப்படைத்தன்மை அவர் மீது நமக்கிருக்கும் அன்பையும் மரியாதையையும் மேலும் அதிகரிக்கச் செய்கிறது. சரித்திரத்தில் இடம் பெற்றிருக்கும் கவிஞர்கள் பெரும்பாலும் குழந்தை மனம் படைத்த பத்தாம் பசலியாகவே இருந்திருக்கிறார்கள் என்பதை நம்மால் உணர முடிகிறது. 

இறைவனைத் தேடி

இறைவனையும் இயற்கையையும் பாடாத கவிஞன் உலகில் எவருமே  இல்லை எனலாம். இயற்கையின் அழகில் இறைவனின் சக்தியை உணர வைப்பதுதான் கவிஞனின் தலையாய பணி. “அழகின் சிரிப்பு” என்று இயற்கையை வருணிப்பார் பாவேந்தர் பாரதிதாசன்.

பூவின் மலர்ச்சியிலும், ஆற்றின் சலசலப்பிலும், மரங்களின் அசைவிலும், பறவைகள் எழுப்பும் ஒலிகளிலும், காற்றின் சுகந்தத்திலும் இறைவனைக் காண்பவன் கவிஞன். 

கவிஞன் என்பவன் நிசப்தங்களில் சப்தங்களையும், சப்தங்களில் நிசப்தங்களையும் இனம் காண வல்லவன். இயற்கையின் வனப்பை இழை இழையாக பிரித்தெடுக்கத் தெரிந்தவன். படைப்புகளில் படைத்தவனை பகுத்தறியத் தெரிந்தவனே படைப்பாளி எனும் கவிஞன்.

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய் நீக்கமற நிறைந்திருப்பவனை இயற்கையின் ஒவ்வொரு அழகிலும் நெஞ்சார உணர முடியும். 

“உலகம் பிறந்தது எனக்காக; ஓடும் நதிகளும் எனக்காக” என்று தொடங்கும் கவியரசு கண்ணதாசனின் பாடலில்

//காற்றில் மிதக்கும் ஒலிகளிலே

கடலில் மிதக்கும் அலைகளிலே

இறைவன் இருப்பதை நானறிவேன்

என்னை அவனே தானறிவான்// 

என்ற அற்புதமான வரிகள் நம் சிந்தனைக்கு உணவளிக்கும்.

இயற்கையை அணுவணுவாக இரசித்து அதன் அழகிலும், அசைவிலும் மனதைப் பறிகொடுத்து ஆனந்த தாண்டவமாட ஒரு கவிஞனால் மட்டும்தான் சாத்தியப்படும்.

“எங்கெங்கு காணினும் சக்தியடா” என்று பாரதி பாடுவான். காணும் காட்சிகளில் யாவும் இவன் பராசக்தியைக் காண்கிறான்.

“இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றாய் ஞானத்தங்கமே!” என்றார் கவி. கா.மு.ஷெரீப். “தூணிலும் இருப்பான்;  துரும்பிலும் இருப்பான்’ என்று போற்றும் இறைவனை, நம் பிடரி நரம்புக்கும் சமீபத்தில் இருக்கும் அந்த மூலவனை, இருக்கும் இடத்தைவிட்டு எங்கேயோ நாம் தேடி அலைகின்றோம் என்பதே இவர் சொல்லவரும் கருத்து. 

“ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்ற தாரக மந்திரத்தை ஏற்று தன் அரசியல் பயணத்தை தொடர்ந்தவர் அறிஞர் அண்ணா.

கவிஞர் வாலியும் இறைவனைத் தேடு தேடு எனத் தேடுகிறார். அவரது ஆராய்ச்சியில் அவருக்கு கிடைத்த விடை இது தான் : 

“இதோ எந்தன் தெய்வம் முன்னாலே

நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே! ”

இதனைத் தொடர்ந்து மேலும் இறைவன் உறைந்திருக்கும் ஒவ்வொரு  இடங்களையும் ஒன்று விடாமல் அலசுகிறார். 

“அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான்

இசை பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்

குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்

தளிர்க் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் – அவன்

கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்”

நமது கவிஞர் திலகம் சாரணபாஸ்கரன் இறைவனின் ஸ்பரிசத்தை  எங்கெல்லாம் உணர்கிறார் என்பதைச் சற்று இங்கே கூர்ந்து கவனியுங்கள்.

“பொன்னிலே பொருளிலே புன்னகை புரிவோன்

விண்ணிலே மண்ணில் விந்தைகள் செய்வோன்

கண்ணிலே ஒளியாய்க் காரிருட் களைவோன்

தன்னிலே தானாய்த் தனித்தியங் கிடுவோன்

என்னிலே உணர்வை எழுப்பிடும் இறையோன்”

இயற்கையின் சிரிப்பில் இறைவனைக் கண்டு இன்புறும் நம் கவிஞரின் வரிகள் நமக்கு இறைவனின் மேன்மைகளை தெளிவுற எடுத்தியம்புகிறது.

தொலைநோக்கு பார்வை 

“சந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா? 

அடி ஆம்ஸ்ட்ராங்கா?

சத்தியமாய் தொட்டது யார் 

நான்தானே ! அடி நான்தானே !

கனவு தேவதையே !

நிலவு நீதானே – உன் 

நிழலும் நான்தானே!” 

இது “ரட்சகன்” படத்தில் கவிஞர் வைரமுத்து புனைந்த பாடல் வரிகள். இந்த வரிகளில் பெரிதாக விஞ்ஞானப் பார்வை இருப்பதாக நான் கருதவில்லை. கற்பனை மிகுந்த காதல் வரிகளைத்தான் நம்மால் இனம் காண முடிகின்றது.   

அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் அப்போலோ விண்கலம் மூலம் சந்திரனில் முதன் முதலாக காலடி எடுத்த வைத்தது 1969-ஆம் ஆண்டு என்பதனை நாமறிவோம்.. ஆனால் கவியரசு கண்ணதாசன் 1964-ஆம் ஆண்டு “பச்சை விளக்கு” என்ற படத்தில்  ஒரு பாடல் எழுதினார். அவருடைய தொலைநோக்குப் பார்வைக்கு இப்பாடல் நல்லதொரு எடுத்துக்காட்டு,  

“கேள்வி பிறந்தது அன்று 

நல்ல பதில் கிடைத்தது இன்று”

இதுதான் பாடலின் தொடக்க வரிகள்

“வானத்தில் ஏறி சந்திர மண்டல

வாசலைத் தொடலாமா?”

அதனைத் தொடர்ந்து வரும் வரிகள் இவை:

“என்றொரு காலம் ஏங்கியதுண்டு

இன்று கிடைத்தது பதில் ஒன்று” 

ஆனால் நம்முடைய கவிஞர் திலகம் சாரணபாஸ்கரன் அவர்களோ தொலைநோக்குப் பார்வையில் கண்ணதாசனையே தூக்கிச் சாப்பிட்டு விட்டார்.  அமெரிக்க வீரர்கள் சந்திரனில் வெற்றிக்கொடி நாட்டுவதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பாகவே “சந்திரனில் மனிதன்” என்ற தலைப்பில் கவிதை எழுதி வாசகர்களை வியப்பில் ஆழ்த்தியவர் அவர். 

“வானுயர்ந்த பெருமலையும் அலைகடலும்

—சுழல்காற்றும் வெற்றி கொண்டு

தோணுகின்ற கோளமெலாம் ஆள்பவனே

—மனிதன்!” எனத் துணிந்து சொன்னேன்.

இப்படி சொல்லிவிட்டு தனது சந்திர மண்டல பயணத்தைத் தொடர்கிறார்.

அண்ணனொடு தந்தையரும் அன்னையரும் 

—பரிகசித்தார்; ஆனால் ஓர்நாள் 

மின்னலெனப் பாய்கின்ற பொறியமைத்து

—உலகெல்லாம் மிரளும் வண்ணம்

விண்ணிடையே புகுந்திட்டேன், மேகத்தைப் 

—பிளந்திட்டேன், வெளிகள் தோறும் 

கண்ணிடையே காணுகின்ற கோளமெல்லாம் 

—என்னறிவால் கணிக்க லானேன்!

மண்ணீர்ப்பு ஆற்றலினை வென்றிட்டேன்

—காற்றழுத்தம் மலைக்கச் செய்ய

விண்ணீர்ப்பு ஆற்றலெனைப் பற்றிடவே

—பால்வெளியில் மிதந்துச் சென்றேன்

தன்னீர்ப்பு ஆற்றலினால் சந்திரனே

—எனையிழுக்கத் தாவிப் பாய்ந்தேன் 

என்னறிவு ஆற்றலெலாம் இழந்திடவே

—தீக்கோளம் எதிரே கண்டேன்!

புவியீர்ப்பை மீறி பால்வெளியில் பிரவேசித்து சந்திரனில் காலெடுத்து வைக்கும் இக்கவிஞனின் கற்பனையானது அமெரிக்க வீரர்கள் சந்திரனில் காலடி எடுத்து வைப்பதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பே அவர் எழுதியது என்பதை நினைக்கையில் நமக்கு ஆச்சரியத்தை வரவழைக்கின்றது.  

தொடரும்…
நாகூர் அப்துல் கையூம்

பாகம் 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *