பாகம் 4 – 23/07/2020 அன்று வெளியிடபடும்.
எழுத்தாண்டவர்
”சென்னை மெமோரியல் மண்டபத்தில் அன்றொரு நாள் பா.தாவூத் ஷா அவர்களுக்கும் பாபநாசம் சிவன் அவர்களுக்கும் தமிழ் எழுத்தாளர் சங்கம் கேடயமும் பொன்னாடையும் வழங்கிப் போற்றிய நிகழ்ச்சியில் நம் கவிஞர் திலகம் சாரண பாஸ்கரனார் அவர்கள் இப்போது தான் முதலாக ஒரு தமிழ் எழுத்தாளரைப் பாராட்டுகிறீர்கள் என்றாராம்.
பத்தாண்டுகளாக பல்வேறு எழுத்தாளர்களுக்குப் பாராட்டு தெரிவித்து வந்த அவ்விழாக் குழுவினருக்கு கவிஞரின் கூற்று பெருவியப்பாக இருந்தது. கவிஞர் விளக்கினார்:
“எழுத்தை ஆளுகின்றவன் தானே எழுத்தாளன்? இதுவரையில் உங்களால் பரிசும் பாராட்டும் பெற்றவர்கள் எழுத்தால் ஆளப்பட்டவர்கள். இவர் ஒருவரேதான் எழுத்தை ஆண்டவர்”என்று பேசி அரங்கத்தை அதிர வைத்தார்.
இன்னொரு நிகழ்வையும் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். தாருல் இஸ்லாம் மாத இதழின் ஆசிரியர் தாவூத் ஷா மாபெரும் தமிழறிஞர். தமிழ்ப் புலமையில் அவருக்கு நிகராக வெகுச்சிலரே அக்காலத்தில் ஆங்கிலத்திலும் நிபுணர். அரபியிலும் வல்லவர். தாருல் இஸ்லாத்தில் ஒரு விளம்பரம் எப்பொழுதும் காணப்படும்
அந்த இதழில் ஒரு எழுத்துப் பிழையை யாராவது சுட்டிக் காட்டினால் சன்மானம் உண்டு என்ற விளம்பரம்தான் அது. அனைவருமே கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிப் பிழைகளைத் தேடுவார்கள். எவர் கண்ணிலும் பிழைகள் தென்படவில்லை.
கவிஞர் திலகம் சாரண பாஸ்கரனார், தாருல் இஸ்லாத்தில் ஒரு எழுத்துப் பிழையைக் கண்டுபிடித்து தாவூத் ஷாவிற்குத் தெரியப் படுத்தினார். விளம்பரத்தில் குறிப்பிட்டபடி சன்மானம் வந்து சேர்ந்தது. அதாவது தாவூத் ஷா சாரண பாஸ்கரனாரிடம் தோற்று விட்டார் என்று கூடச் சொல்ல்லாம்
இசைப் பாடல்கள்
===============
சாரணபாஸ்கரனார் எழுதிய இசைப்பாடல்களில் இரண்டு பாடல்கள் நம் மனதில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
ஒன்று நாகூர் எம்.எம். இசைமணி யூசுப் அவர்கள் பெருமானாரைப் பற்றி பாடிய
மண்ணகத்தின் இழிவு மாற்றி
விண்ணகத்தின் உயர்வு சாற்றி
பொன்னகத்தில் அண்ணல் நபி வந்தார்; – அவர்
தன்னகத்தில் சாந்தியின்பம் தந்தார்
என்ற மென்மையான பாடல்.
மற்றொன்று சிம்மக்குரலோன் இசைமுரசு நாகூர் E.M.ஹனிபா அவர்கள் பாடிய பாடல். தி.மு,க. மேடைகளில் அதிமாக ஒலிபரப்பப்படும்.
:
கல்லக்குடி கொண்ட
கருணாநிதி வாழ்கவே! – மக்கள்
உள்ளம் குடி கொண்ட
உண்மைத் தலைவர் வாழ்கவே!
என்று தொடங்கு கட்சிப்பாடல்தான் அது. இந்த இரண்டு பாடல்களும் கவிஞர் சாரண பாஸ்கரனார் எழுதிய பாடல்கள்.
காயிதே மில்லத் மீது அன்பு
—————————————————
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயீல் சாகிப் அவர்கள் மீது அளப்பரிய அன்பு வைத்திருந்தார் கவிஞர் திலகம் சாரணபாஸ்கர். “நாடும் நாமும்” என்ற தலைப்பில் சமுதாயக் கவிதைகள் அடங்கிய தொகுப்பை தென்றல் மன்றம் பதிப்பித்திருந்தது. 17.9.1960 – ல் வெளியிடப்பட்ட அந்த நூலை காயிதே மில்லத் அவர்களுக்கு அர்ப்பணித்து அவரைப் புகழ்ந்து எழுதிய வரிகள் இவை.
இரவு பகல் பாரது உழைத்துழைத்தே
இணையற்ற சாதனையில் வெற்றிகண்டே
உறவுமுறை பாராது உண்மை பார்க்கும்
ஒப்பற்ற காயிதே மில்லத் வாழ்க !
தாஜ்மகாலும் கவிஞரும்
———————————————-
தாஜ்மகாலை பாடாத கவிஞன் இருக்கவே முடியாது. யார்தான் அதை பாடவில்லை.?
“இதுதான் காதலுக்காக சிந்தப்பட்ட உயரமான கண்ணீர்த்துளி” என்று மிக அழகாகச் சொல்லுவார் கவிஞர் வைரமுத்து. “கண்மணியை உள்ளே புதைத்துவிட்டு வெள்ளை விழி மட்டும் வெளியே தெரிகிறது” என்று அவர் பாடியபோது அவருடைய கற்பனை வளத்தில் நாமும் மூழ்கிப் போகிறோம்.
கவிஞர் சாரண பாஸ்கரனும் தாஜ்மகாலைப் புகழ்ந்து அழகாக கவிதை வடித்திருக்கிறார். தாஜ்மகாலை அவர் காணச் செல்கிறார். தனியாக அல்ல; தன் துணைவியாருடன். அந்த பளிங்கு கட்டிடத்தை நெருங்கியவுடன் அவரது இல்லத்தரசி மகிழ்ந்துப்போய் “நற்கனவு இன்றைக்கே பலித்தது” என்று கணவரிடம் பூரிப்பாய்ச் சொல்கிறார். இவரும் அதை நேரில் கண்டு மூச்சடைத்து, பேச்சடைத்து நிற்கிறார்.
இல்லத்தரசி உயர்ந்து நிற்கும் மினாராவைக் காட்டி ஏதோ சொல்கிறார். பிறகு இருவரும் யமுனை நதிக்கரையின் அழகை அணுஅணுவாய் இரசிக்கிறர்கள். நாமும் அவரது அனுபவத்திலும், சொல்லாடலிலும் மூழ்கிப் போகிறோம்.
“கவிஞன் தன்னுடைய அனுபவத்தை கவிதையை சித்தரித்திருக்கிறான். இதிலென்ன பெரிய ஆச்சரியம்?” என்று நீங்கள் என்னைக் கேட்பது நன்றாகப் புரிகிறது,
ஆம். ஆச்சரியம் இருக்கத்தான் செய்கிறது.
முதல் ஆச்சரியம் கவிஞர் சாரண பாஸ்கரன் ஆக்ரா சென்றதும் இல்லை, தாஜ்மகாலைக் கண்ணால் கண்டதும் இல்லை.
இரண்டாவது ஆச்சரியம் அவர் இக்கவிதையை 1958-ஆம் ஆண்டு மணிச்சரத்தில் எழுதியபோது அவருக்கு மனைவியே இல்லை.
அதைப்பற்றி பிற்காலத்தில் அவரிடம் கேட்டபோது அவர் உரைத்த பதில்:
“அந்த மஹல் நிறைவாழ்வு வாழ்ந்தஒரு தம்பதியரின் (மும்தாஜ்-ஷாஜகான்) நினைவுச் சின்னம். அதைக்காணச் செல்வோரும் தம்பதி சமேதராகவே செல்லவேண்டும் என்பதற்காகவே அதை எழுதுவதற்காக ஒரு மனைவியையும் துணைக்கு அழைத்துக் கொள்ள வேண்டிய அவசியமேற்பட்டது” என்றார்.
“தொழில் தர்மம்” “Job Satisfaction” என்றெல்லாம் கூறுகிறார்களே..? அது இதுதானோ..?
காஷ்மீர்.. பியுட்டிஃபுல் காஷ்மீர், காஷ்மீர் வொண்டர்ஃபுல் காஷ்மீர் என்று பாடிய கவிஞர் வாலி கூட காஷ்மீரை எட்டிப் பார்க்காதவர்தான் என்பதையும் இங்கே குறிப்பிடத்தான் வேண்டும்.,
மார்க்கப்பற்று
————————–
“சூரத்துல் பாத்திஹா” எனப்படும் தித்திக்கும் திருமறையின் திறப்பு வசனத்திற்கு இறையருட் கவிமணி கா. அப்துல் கபூர், கவியரசு கண்ணதாசன் உட்பட எத்தனையோ கவிஞர்கள் அவரவர் பாணியில், கருத்து மாறாத அளவில். கவிதை வடிவம் அளித்துள்ளார்கள்.
கவிஞர் சாரணபாஸ்கரன் அவர்களின் கன்னித்தமிழாக்கம் இது :
பேரருளும் பேரன்பும் மிக்க அல்லாஹ்
…..பெருமை மிகும் பெயரதனால் துவக்கம் செய்வோம்
பூரணமாம் புகழினுக்கே உரிமை யாளன்
…..படைப்பினங்கள் அத்தனையும் படைத்துக் காப்போன்
பேரருளும் பேரன்பும் மிக்க நாயன்
…..பார்முடிவின் தீர்ப்புநாள் அதிப னாகும்
பேரரசே! உன்னையே வணங்கி உன்றன்
…..பேரருளை வேண்டி நின்றோம் நின்னருள் பெரற்றோரின்
நேர்வழியில் செலுத்திடுக! நீமுனிந்தோர்
நெறிபிறழ்ந்தோர் செல்லும்வழி தன்னிலன்றே
சாரண பாஸ்கரனாரின் தமிழ்ப் பற்றும், நாட்டுப் பற்றும், சமுதாயப் பற்றும்,மார்க்கப்பற்றும் இன்பத்தமிழ் உள்ளவரை என்றென்றும் அவர் புகழ் பறை சாற்றிக் கொண்டிருக்கும் என்பதில் சற்றும் சந்தேகமில்லை.
சாரணபாஸ்கரன் – காலக் குறிப்புகள்
1923 – ஏப்ரல் மாதம் 26-ல் தஞ்சாவூர் ஜில்லா கூத்தாநல்லூரில் பிறந்தார்.
1936 – இவரது “ஜினானா ஜெயந்தி கீதம்” என்ற முதல் படைப்பு அச்சுப் பிரசுரமாக வெளிவந்தது.
1937 – டி.எம்.எம். அஹ்மத் எனும் இயற்பெயர் கொண்ட இவருக்கு “சாரணபாஸ்கரன்” என்ற புனைப்பெயரை ந.மு.வேங்கடசாமி நாட்டார் வழங்கினார்.
1945 – காரைக்காலிருந்து வெளிவந்த “பால்யன்” வாரப் பத்திரிக்கையில் துணை ஆசிரியராக பணியாற்றினார்.
1946 – இவரது முதல் கவிதைத் தொகுப்பு “மணியோசை” என்ற பெயரில் வெளிவந்தது.
1947 – முதல் 1951 வரை – ‘சாபம்’, சங்க நாதம்’, கவிதை தொகுப்புகள் வெளிவந்தது.
(மலாயா) பினாங்கில் ‘தேசநேசன்’ தினசரி ஆசிரியராக பணியாற்றினார்.
1949 – ‘களஞ்சியம்’ தினசரி (மலேயா) வார இதழ் ஆசிரியராக பணியாற்றினார்.
1950 – ‘முஸ்லிம் முரசு’ பத்திரிக்கை நடத்திய சிறுகதைபோட்டியில் முதற் பரிசு பெற்றார்.
1951 – இதயக் குமுறல் கவிதைத் தொகுப்பு வெளிவந்தது.
1956 – ‘யூசுப் – ஜுலைகா’ எனும் புகழ் பெற்ற காப்பியத்தை எழுதி முடித்தார்.
திருச்சி வானொலி நிலையத்தார் லெ,ப.கரு. ராமநாதன் அவர்கள் தலைமையில் கூட்டிய கவியரங்கில் “வாழ்க்கை வளமுற – உணர்வு” என்ற தலைப்பில் கவிதை பாடினார்.
1957 – திருச்சியிலிருந்து வெளிவந்த ‘சன்மார்க்க சங்கு’ மாதமிருமுறை பத்திரிக்கை ஆசிரியராக பணியாற்றினார்.
1959 – ‘மணிச்சரம்’ கவிதை நூல் வெளியானது
1960 – ஜனவரி 14, பொங்கலை முன்னிட்டு திருச்சி வானொலி நிலையம் ஏற்பாடு செய்த கவியரங்கில் “நாடு நகரம்” என்ற தலைப்பில் கவிதை பாடினார்.
ஏப்ரல் 9, காரைக்குடி கம்பன் விழாவில் பேராசிரியர் அ. சீனிவாச ராகவனார் தலைமையில் “கம்பனில் காணும் சமயக் கருத்துக்கள்” என்ற தலைப்பில் நடந்த கவியரங்கில் “கம்பன் கண்ட இஸ்லாம்” என்ற கவிதையைப் பாடி பாராட்டினைப் பெற்றார்.
1961 – ‘நாடும் நாமும்’ கவிதை நூல் வெளிவந்தது
1963 – ஜனவரி 13, நம் நாட்டின் மீது சீனா எல்லை ஆக்கிரமிப்பு செய்ததை ஒட்டி ‘வீறு கொண்ட பாரதம்’ பற்றி சுவாமி சித்பவானந்தர் தலைமையில் திருச்சி வானொலி நிலையம் ஒலிபரப்பிய கவியரங்கில் “தியாகம்” என்ற தலைப்பில் பாடினார்.
1968 – ஜனவரி 8, சென்னையில் கூடிய இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டையொட்டி நடைபெற்ற கவியரங்கில் “வணிகன்” என்ற தலைப்பில் கவிதை பாடினார்
ஜனவரி 14, அன்றைய ஊராட்சித்துறை அமைச்சர் பாவலர் முத்துச்சாமி தலைமையில் நடந்த கவியரங்கம், திருச்சி வானொலி நிலையம் ஒலிபரப்பியது. “பால்” என்ற தலைப்பில் கவிஞர் பாடினார்.
1969 – சென்னையில் நடந்த தமிழ்நாடு முஸ்லீம் லீக் மாநாட்டின் உபதலைவராக இருந்தார்.
1971 – ஏப்ரல் 16, திருச்சி வானொலி நிலையம், நாடக விழாவை முன்னிட்டு “பிரிவை மாற்றிய பிரிவு” எனும் அவருடைய நாடகத்தை ஒலிபரப்பியது. அதில் ஈராக்கிய மன்னர் ஹாரூன் முதலான ஏழுபேர் நாடக பாத்திரங்கள்.
அக்டோபர் 13 “வரம்பு கடந்த வாழ்வில் – அன்பு” என்ற தலைப்பில் அவரது இலக்கிய சொற்பொழிவை திருச்சி வானொலி நிலையம் ஒலிபரப்பியது.
1972 – திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் நடைபெற்ற முதல் இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மாநாட்டில் இவரது தமிழ்ச் சேவையினை பாராட்டி புகாழாரம் சூட்டப்பட்டது. “வாழ்வியல்” என்ற தலைப்பில் கவிதை படித்தார்.
1977 – அவருடைய மொத்த கவிதைகளையும் உள்ளடக்கியத் தொகுப்பாக “சாரணபாஸ்கரனாரின் கவிதைகள்” வெளிவந்தது.
1986 – நவம்பர் 25-ல் கவிஞர் திலகம் மறைந்தார்.
தொடரும்…
– நாகூர் அப்துல் கையூம்