தமிழோடு நிலைக்கப் பிறந்தவன் – பாகம் – 2/6

பாகம் 1

இரயில் பயணத்தில்

ஒருமுறை கவிஞர் சாரண பாஸ்கரன் (T.M.M. அஹ்மத்) அவர்கள் சென்னை
செல்வதற்காக திருச்சி ஜங்ஷனில் காத்திருக்கிறார். முன்பதிவு செய்யப்படாத
மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டியில் பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை.
இரண்டு இரயில்கள் வருகின்றன. இரண்டிலும் நல்ல கூட்டம். கால் வைக்கக்
கூட இடமில்லை. அந்தளவு கூட்ட நெரிசல். நீண்ட நேரத்திற்குப் பிறகு,
மூன்றாவதாக ஒரு ரயில் வருகிறது. முண்டியடித்துக் கொண்டு கவிஞர் ஏறி
விடுகிறார். வேறு வழியில்லை
இதிலும் ஏகப்பட்ட நெரிசல். நின்று கொண்டே பயணிக்கிறார். குடும்பத்தோடு
பிரயாணம் செய்யும் ஒருவர் அவருடைய பரிதாப நிலையைக் கண்டு
இரக்கப்பட்டு தன் மடியில் படுத்திருந்த குழந்தையைத் தூக்கி தன் காலடியில்

பெஞ்சுக்கு கீழே படுத்த வைத்துவிட்டு அவருக்கு உட்காருவதற்கு இடம்
கொடுக்கிறார்.
அவருக்கும் கவிஞருக்கு இடையே உரையாடல் நடைபெறுகிறது. அந்த
உரையாடல் அவருக்குள்ளே ஒரு பெரும் மாற்றத்தை உண்டு பண்ணுகிறது.
இதோ அந்த உரையாடல்
பிரயாணி: உங்களின் சொந்த ஊர் எது?
கவிஞர்: தஞ்சை ஜில்லா
பிரயாணி: தஞ்சை ஜில்லாவே உங்களின் ஊரா?
கவிஞர் : அப்படிப் பார்க்கப்போனால், பாரத தேசமே என் ஊர்தான்
பிரயாணி: பாரதம் உங்களுக்கு மட்டுமா, நம் எல்லோருக்குமே சொந்த ஊர்தான் !
நான் கேட்டது நீங்கள் பிறந்த ஊரை- வாழும் ஊரை..?
கவிஞர்: தஞ்சை ஜில்லாவிலே ஒரு சிறு கிராமம்; பெயர் கூத்தாநல்லூர்.
பிரயாணி: மன்னார்குடிக்கும் திருவாரூருக்கு மிடையே உள்ள
கூத்தாநல்லூர்தானே?
கவிஞர்: ஆமாம். அதே ஊர்தான்.
பிரயாணி: அந்த ஊரிலே கொஞ்ச காலத்துக்கு முன்னால் சாரணபாஸ்கரன் என்று
ஒரு கவிஞர் இருந்தாரே, அவர் இப்போது இருக்கிறாரா, இறந்து விட்டாரா?
கவிஞரைப் பற்றி கவிஞரிடமே வீசப்பட்ட இந்த கேள்வியை அவர் சற்றும்
எதிர்பார்க்கவில்லை. திடுக்கிட்டுப் போகிறார். அந்த பிரயாணி இப்படியொரு
கேள்வியைக் கேட்டதற்கு நியாயமான காரணம் இருக்கத்தான் செய்கின்றது.
1942-ஆம் ஆண்டு தன் எழுத்துலகப் பணியைத் தொடங்கிய கவிஞர்,
“மணியோசை” (1946), “சாபம்”, “சங்கநாதம்”, “இதயக்குமுறல்” ((1947-1951), “யூசுப்
ஜுலைகா” (1956), “மணிச்சரம்” (1959), என பற்பல நூல்களை வெளியிட்டார்.
1961-ஆம் ஆண்டுக்குப் பிறகு அவருடைய எந்த நூலும் வெளிவரவில்லை. இந்த
ரயில் பிரயாண உரையாடல் நடைபெற்ற ஆண்டு 1977. அதாவது, கிட்டத்தட்ட
16 ஆண்டுகள் மெளனம்.

அந்த பிரயாணி கவிஞரைப் பார்த்து “கவிஞர் சாரண பாஸ்கரன் இறந்து
விட்டாரா?” அன்று அவரிடமே வினவியதில் எந்த ஓர் ஆச்சரியமும் இல்லை
என்றுதான் நான் சொல்லுவேன். ஏனெனில் பிரபலமாக இருக்கும் ஒரு கவிஞன்
எப்போதும் மக்கள் தொடர்பிலேயே இருக்க வேண்டும். இல்லையெனில்
காலச்சக்கரம் அவனை மறந்துவிடும்.
பிரயாணி : (மீண்டும் கேட்கிறார்) நான் கேட்டதற்கு பதிலில்லையே, அவர்
இருக்கிறாரா, இறந்து விட்டாரா?
கவிஞர்: (உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக்கொண்டு) அவர் இறக்கவில்லை,
இருந்துக்கொண்டுதானிருக்கிறார்.
பிரயாணி : அவர் நம்மோடு வாழ்ந்துக் கொண்டுதானிருக்கிறாரா? அதற்கான
அடையாளம் தெரியவில்லையே?
கவிஞர் : ம்…ம்ம்… (சற்று மெளனம்)
பிரயாணி : ஒரு கவிஞர் உயிரோடிருகின்றான் என்றால், அவன் கவிதைகள்
உலாவிக் கொண்டிருக்க வேண்டுமே ! அவர் கவிதைகளையே காண
முடியவில்லை. அவர் எழுதிய எந்த புத்தகமும் இந்த தலைமுறையினர் வாங்க
முடியவில்லை. எப்படி அவர் உயிரோடிருக்கிறார்?
கவிஞர்: காலமும் சூழ்நிலைகளும் அவரை முடக்கிவிட்டன. அதனாலேயே வாய்
பொத்தி ஊமையாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்.
பிரயாணி: கவிஞனாகப் பிறந்தவன் எப்படி ஊமையாக வாழ முடியும்? அவன்
இறந்து விட்டால்கூட நம்மோடு பேசிக் கொண்டிருக்கும் உயிர்க் கவிதைகளின்
சிருஷ்டி கர்த்தாவாயிற்றே??
கவிஞர்: அவரை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அவரது எந்தெந்த புத்தகங்களை
படித்திருக்கிறீர்கள்?
பிரயாணி: அவரது எல்லா புத்தகங்களையும் படித்திருக்கிறேன். அதில் ஏதும் என்
சந்ததிகளுக்குத்தான் இப்போது கிடைக்கவில்லை.
ரயில் பயணத்தில் ஏற்பட்ட இச்சந்திப்பின்போது ஏற்பட்ட உரையாடல் கவிஞரின்
உள்ளத்தில் ஒரு பெரும் பாதிப்பை உள்ளாக்குகிறது. சிந்திக்கிறார். தானெழுதிய

பழைய புத்தகங்களை மறுபதிப்பு செய்ய வேண்டிய அவசியத்தை உணர்கிறார்.
இல்லையென்றால் சமுதாயம் அவரை உதறித்தள்ளிவிடும் என்ற உண்மையைப்
புரிந்துக் கொள்கிறார்.
இதில் வேடிக்கை என்னவென்றால் அவர் எழுதிய புத்தகங்களின் பிரதி அவரிடம்
ஒன்றுகூட இல்லாமல் போனதுதான்.
அதற்குப் பிறகு தானெழுதிய புத்தகங்கள் யார் யாரிடம் இருக்கிறது என்று
மும்முரமாக தேடுதல் வேட்டையில் இறங்குகிறார் கவிஞர்.
பேராசிரியர் ஜி.சுப்பிரமணியம் பிள்ளை தன்னிடமிருந்த “சாபம்” நூலைத்
தருகிறார். பேராசிரியர் கே.எம்.காதர் முஹயிதீன் அவர்கள் தன் திருமணப்
பரிசாக பெற்றிருந்த “யூசுப் ஜுலைகா’ நூலைத் தருகிறார். “மணிச்சரம்” நூலை
ஆதம் A.நெய்னா முஹம்மதுவிடமிருந்து கிடைக்கிறது, “நாடும் நாமும்” என்ற
பெயரில் அவரெழுதிய நூலை M. செய்யது முஹம்மது (ஹஸன்) தன் மகள்
பாத்திமாவிடமிருந்து பெற்றுத் தருகிறார்.
“கவிஞர் திலகம் சாரண பாஸ்கரனாரின் கவிதைகள்” (1977) என்ற நூல் அதன்
பிறகு அக்கவிதைகள் எல்லாவற்றையும் தொகுத்து வெளியிடப்பட்டது. (இந்த
நூலை நான் பெறுவதற்கு நான் பட்ட பாடு எனக்குத் தெரியும், பூதமங்கலம் தாஜ்
அண்ணன் அவர்களுக்கும் அவரது துணைவியார் பஷீரா தாஜ் அவர்களுக்கும்
நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்)
அந்த ரயில் பயணத்தின் சந்திப்பின்போது இந்த உரையாடல் கவிஞருக்கும் அந்த
பிரயாணிக்குமிடைய நடைபெற்றிருக்காவிட்டால் இந்த நூல் இந்நேரம் என்
கையில் தவழ்ந்திருக்க வாய்ப்பில்லை.

சமுதாய உணர்வு

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயீல் சாகிப் அவர்கள்
மீது கவிஞர் அளப்பரிய அன்பு வைத்திருந்தார் கவிஞர் திலகம் சாரணபாஸ்கர்.
“நாடும் நாமும்” என்ற தலைப்பில் சமுதாயக் கவிதைகள் அடங்கிய தொகுப்பை
தென்றல் மன்றம் பதிப்பித்திருந்தது. 17.9.1960 – ல் வெளியிடப்பட்ட அந்த நூலை
காயிதே மில்லத் அவர்களுக்கு அர்ப்பணித்து அவரைப் புகழ்ந்து எழுதிய வரிகள்
இவை.
இரவு பகல் பாரது உழைத்துழைத்தே

இணையற்ற சாதனையில் வெற்றிகண்டே
உறவுமுறை பாராது உண்மை பார்க்கும்
ஒப்பற்ற காயிதே மில்லத் வாழ்க !

கவியரங்கம்

1957 – ஆம் ஆண்டில் திருச்சி வானொலி நிலையம் ‘வானொலி வார’ விசேஷ
நிகழ்ச்சியாக ஒரு சிறப்புக் கவியரங்கம் ஏற்பாடு செய்திருந்தது. “தமிழ் காட்டும்
நல்லுலகு” என்ற கருத்தை ஒட்டி பல்வேறு துணைத் தலைப்புகளில் புகழ்பெற்ற
மாபெரும் கவிஞர்கள் கவிமழை பொழிந்தனர்.
பேராசிரியர் அ.சிதம்பரநாதஞ் செட்டியார் தலைமை தாங்கினார். பாவேந்தர்
பாரதிதாசன், சுத்தானந்தபாரதி, அன்புப்பழநி, திருச்சிற்றம்பலக் கவிராயர்
முதலியோர் கலந்துக் கொண்ட கவியரங்கத்தில் கவிஞர் திலகம்
சாரணபாஸ்கரனும் கலந்துக் கொண்டு “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்”
என்ற தலைப்பில் கவிதை பாடினார்.
இக்கூட்டத்தில்தான் தலைமை தாங்கிய பாவேந்தர் பாரதிதாசனார் கவிஞர்
திலகத்தை பிற கவிஞர்களுக்கு அறிமுகப்படுத்தும் போது “இந்தக் கவிஞன்
தமிழரோடு நிலைத்திருக்கப் பிறந்தவன்” என்று புகழாரம் சூட்டி மகிழ்ந்தார்.
இதை அமைதியாக கேட்டிருந்த அக்கவியரங்கத் தலைவர் பேராசிரியர் சிதம்பர
நாதஞ் செட்டியார் “வசிஷ்ட முனிவரே மஹரிஷி என்னும் போது நாங்களென்ன
மறுக்கவா போகிறோம்?” என்று கூறி நம் கவிஞரை மேலும் பெருமை
படுத்தினாராம்.

சுதந்திர தாகம்

ஏறக்குறைய எல்லாக் கவிஞர்களும் ‘சுதந்திரம்’ பற்றி பாடி விட்டார்கள். பாடிய
கவிஞர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம் (கி.மு – கி.பி. என்று
சொல்வதைப்போல).
இந்தியச் சுதந்திரத்திற்கு முன் சுதந்திரம் வேண்டும் என்று பாடியவர்கள் முதல்
வகை. சுதந்திரம் கிடைத்த பின்பும் சுதந்திரம் வேண்டும் என்று பாடியவர்கள்
இரண்டாவது வகை.

“அவன் சுதந்திரம் என்னும்
பட்டு வேட்டியின்
கனவு கண்டபோது – அவன்
கட்டியிருந்த கோவணம்
களவாடப்பட்டது”
என்கிறார் கவிஞர் மு.மேத்தா. சுதந்திரம் வந்தும் சுபீட்சம் இல்லை என்ற
கருத்துதான் பரவலாக மேலோங்கி இருக்கின்றது. இப்படி ஆகுமென்று
தெரிந்தால் பேசாமல் சுதந்திரம் வாங்காமலேயே இருந்திருக்கலாமோ என்ற
எண்ணம் கூட சிலருக்கு வந்ததுண்டு. “என்று தணியும் இந்த சுதந்திர
தாகம்?”என்று பாரதி பாடிய பைந்தமிழ் வரிகள் இன்றைய சூழ்நிலைக்கும் கூட
பொருத்தமாக இருக்கிறது.
ஆனால் கண்ணதாசனின் கருத்தோட்டம் முற்றிலும் வேறு கோணத்தில்
இருந்தது. “சுதந்திரத்தைக் குற்றம் கூறி என்ன பயன்? பிரச்சினையே
நம்மிடத்தில்தான்” என்பது அவரது வாதம்.
“வீடெங்கும் திண்ணை கட்டி
வெறும்பேச்சு வெள்ளை வேட்டி
சோம்பலில் மனிதன் வாழ்ந்தால்
சுதந்திரம் என்ன செய்யும்?”
என்ற திரைப்படப் பாடல் மூலம் வீணர்களைச் சாடுகிறார் கவியரசர். சுதந்திரம்
கிடைத்தும் அதனை ஒழுங்காக பயன்படுத்த தெரியாதது நம் குற்றம்தான்
என்கிறார்.
புதுக்கவிதைக்கு வித்திட்ட காலங்களில் கவிக்கோ அப்துல் ரகுமானால்
கண்டெடுக்கப்பட்ட
“இரவில் வாங்கினோம்
இன்னும் விடியவே இல்லை”
என்ற வாக்கியம் எல்லோருக்கும் நினைவிருக்கும். புதுக்கவிதையின்
எழுச்சியின்போது இந்த இரண்டு வரிக்கவிதைதான் எடுத்துக்காட்டாக
எல்லோராலும் கையாளப்பட்டது.

“பகலில் ‘சுதந்திரம்’ வாங்கியிருந்தால் மட்டுமென்ன பாலும், தேனுமா வடியப்
போகிறது?” என்று யாராவது திருப்பி கேட்கக் கூடும்.
சுதந்திரம் கிடைத்தும் நமக்கு விடியல் ஏற்படவில்லையே என்ற இந்தியக்
குடிமக்கள் அனைவரது ஒட்டு மொத்த ஆதங்கத்தைதான் இந்த குட்டிக்கவிதை
பிம்பமாய் பிரதிபலித்தது.
“அன்று
வியாபாரம் செய்ய வந்தவர்கள்
அரசியல் நடத்தினார்கள்
இன்று
அரசியல் நடத்த வந்தவர்கள்
வியாபாரம் செய்கிறார்கள்”
என்ற கவிஞர் வைரமுத்துவின் வைரவரிகள் முற்றிலும் உண்மை. அனைத்து
தேர்தலிலும் குதிரைப்பேரம்தானே ‘ஜாம் – ஜாம்’ என்று நடந்துக் கொண்டு
இருக்கிறது. “Politics is the last refuge for scoundrels” என்று சாமுவல் ஜான்ஸன்
சொன்னது மெய்தானோ?
இந்த சுதந்திரம் கிடைப்பதற்காக துப்பாக்கி தோட்டாக்களை மார்பில்
ஏந்தியவர்கள் எத்தனைப்பேர்? தூக்குக் கயிற்றை முத்தமிட்டவர்கள் எத்தனைப்
பேர்? ‘ஜாலியன்வாலா பாக்’ கிணற்றுக்குள் உயிர்துறந்தவர்கள் எத்தனைப்பேர்?
வேதாரண்யத்தில் மகாத்மா காந்தியுடன் இணைந்து தடியடி ஏற்றவர்கள்
எத்தனைப் பேர்?
சுதந்திரம் கிடைப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே,
“ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்தச் சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று”
என்று கூவினான் மகாகவி. கிடைக்காத ஒன்றை கிடைத்து விட்டதாக
கூறுகிறானே, இவனுக்கு கிறுக்குப் பிடித்து விட்டதோ? என்று அவனை பலரும்
நையாண்டி செய்திருக்கக்கூடும்.
கவிஞனுக்கு தீர்க்கதரிசனம் என்பது ‘மூன்றாம் கண்’ போலும். வரப்போவதை
வந்ததாக நினைத்து ஆனந்தத் தாண்டவம் ஆட நம்பிக்கையுறுதியும்,

தொலைநோக்கும் கொண்ட ஒருவனால்தான் இது சாத்தியமாகும். பாரதியிடம்
அது மிகையாகவே இருந்தது.
“சுதந்திர கீதங்கள்
மதிப்பிழந்த நாட்டில்
தேசிய கீதங்கள்
தேவையே இல்லை”
என்று மிகச் சரியாகச் சொன்னார் மு,மேத்தா.
சுதந்திரம் அடைந்து ஆண்டுகள் அறுபதுக்குமேல் உருண்டோடி விட்டன.
வெள்ளிவிழா, பொன்விழா யாவும் கொண்டாடிவிட்டோம்.
“எங்களுக்கோ
வெள்ளியும் தங்கமும்
விழாக்களின் பெயர்களில்தான்
வருகின்றன”
இதுவும் மு,மேத்தாவின் வரிகள்தான். வறுமைக் கோட்டுக்குக்கீழ் அவதியுறும்
சராசரி இந்தியக் குடிமகனின் உள்ளத்து வெளிப்பாடாக இருக்கிறது இது . கவிஞர்
தேசப்பிதாவைப் விளித்து இவ்வாறு புலம்புகிறார்.
“அமுதசுரபியைத்தான்
நீ தந்துச் சென்றாய்
இப்போது
எங்கள் கைகளில் இருப்பதோ
பிச்சைப் பாத்திரம்”
என்ற கவிதை வரிகளில் ‘தேசத்தொண்டு’ எனும் போர்வையில் பொதுமக்களைச்
சூறையாடும் அரசியல்வாதிகளை பிடித்துச் சாடுகிறார்.
சுதந்திரம் கிடைத்த இரண்டு ஆண்டுகளுக்குப்பின் (1949), பாரதி கூத்தாடியதைப்
போன்று கவிஞர் திலகம் சாரணபாஸ்கரனும் ‘சுதந்திரமே வாழ்க’வெனும்
தலைப்பில் உணர்ச்சிவசப்பட்டு பாடுகிறார்.
“ஏவலராய், ஏதுமறி யாதவராய்க்
—கோழையராய், இரந்துண் போராய்ச்
சேவகராய்ச் சிரம்பணியும் அடிமையராய்ச்

—செயலிழந்த சிலைபோன் றோராய்க்
கேவலமாய் வாழ்ந்தஎமை யாவருடன்
—சமமாக்கிக் கீர்த்தி மிக்கக்
காவலராய் ஆக்குவித்த சுதந்திரமே
—வாழியநீ கடைசி மட்டும்!”
இப்படி ஆனந்தத் தாண்டவம் ஆடிய அவரது பேருவகை அதிக நாட்கள் நிலைத்து
நிற்கவில்லை. ‘அன்றும் இன்றும்’ என்ற தலைப்பில் (1953) எழுதிய கவிதையில்
அவர் தன் எண்ணத்தை மாற்றிக் கொள்கிறார்.
“சுதந்திர சூரியன் தோன்றிவிட்டால் – மக்கள்
—தொல்லை அகன்றிடும் என்றுரைத்தோம்
சுதந்திரம் வந்தது கண்டுகொண்டோம் – மக்கள்
—தொல்லை அகன்றிடக் காணவில்லை!
ஆளும் உரிமை அடைந்துவிட்டால் – மக்கள்
—அவலம் ஒழிந்திடும் என்றுரைத்தோம்
ஆளும் உரிமை அடைந்தவுடன் – நாமே
—ஆதிக்கம் செய்யத் துணிந்துவிட்டோம்!
மாற்றான் பிடிப்பை அறுத்துவிட்டால் – இங்கு
—மக்களின் ஆட்சி மலருமென்றோம்
மாற்றான் பிடிப்பு அகன்றபின்னே – ஏழை
—மக்களை நாமே மறைந்துவிட்டோம்!”
பெயரவில் சுதந்திரம் பெற்று, செயலளவில் சுதந்திரம் பெற முடியாத அவல
நிலையை கவிஞர் திலகம் அழகாக சித்தரித்துக் காட்டுகிறார்.
இரவு வேளையில் கழுத்து நிறைய நகையணிந்து நங்கையொருத்தி எப்போது
பயமில்லாமல் வீதியில் நடமாட முடிகிறதோ அப்பொழுதுதான் உண்மையான
சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம் என்றார் மகாத்மா காந்தி. இப்பொழுது
நகைகளை வீட்டில் பூட்டி வைத்து விட்டு வெளியில் தைரியமாக போய்
வரக்கூட உத்தரவாதம் இல்லை,
கவிஞர் ஈரோடு தமிழன்பன் என்றோ எழுதிய கவிதை வரிகளை இன்று நினத்துப்
பார்க்கிறேன்.

“இன்னொரு
சுதந்திரம் வேண்டும்
இரவில்
எதைக் கொடுத்தான்?
எதை வாங்கினோம்
எவர் வங்கினோம்
ஏதும் தெரியவில்லை.
ஒரு பகற் பொழுதில்
உச்சி வெயிலில்
ஒரு சுதந்திரம் வேண்டும்”
இன்னொரு சுதந்திரம் நமக்கு கிடைக்குமா?

தொடரும்…
நாகூர் அப்துல் கையூம்

பாகம் 3

4 thoughts on “தமிழோடு நிலைக்கப் பிறந்தவன் – பாகம் – 2/6

  1. தாம் எழுதிய நூட்களும் தம்மிடம் இல்லை, யாரென அடையாளமும் தெரியவில்லை. அப்போது சந்தித்த ஒருவர் இவர்தான் அவர் என அறிந்திருந்தால் எவ்வளவு சந்தோசத்தில் நிலைத்திருப்பார் என சிந்திக்க தோன்றுகிறது. தாம் இறந்த பின் தெரிய வேண்டியதை இறப்புக்கு முன் தெரிந்துக்கொண்டது சிறப்பு. என்றும் போற்றப்படடும் அவரது நூல் நம்மை ஊக்குவிக்கும்.

  2. ஒரு மாபெரும் கவிஞரின் வாழ்க்கையை படிக்கும்போது இன்னமும் நாம் சுதந்திரத்தை அடையவில்லை என்றே தோன்றுகிறது.
    முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்றதை தேடிபிடித்து அறியமுற்படவேண்டும் என்ற உணர்வும் மேலோங்குகிறது.நன்றி

  3. அருமை அண்ணன்.
    அழகாக தொகுத்து அருமையாக பதிவு செய்திருகின்றிர். அரூமை அண்ணன்.வல்ல ரஹ்மான் தாங்களுக்கு நீண்ட ஆயூளுக்கும் நிறைந்த வளத்திற்க்கும் வல்ல ரஹ்மானிடம் துஆ செய்கின்றோம். ஆமீன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *