கிணற்றோடு ஓர் அனுபவம்

(மு.தமிமுன்அன்சாரி MLA, அவர்களின் கிணறுகள் குறித்த ஒரு அனுபவ பதிவு..)

நீர்த்தேக்கங்களில் முக்கியமானது கிணறு. அது தண்ணீர் ஓய்வெடுக்கும் குகை! வற்றாத நீர் வங்கி.

இப்போதும் எங்கள் ஊரில் வீட்டுக்கு ஒரு கிணறு இருக்கிறது .எனது பள்ளிக்கூட காலங்களில் அதில்தான் குளிப்பேன். கயிறு கட்டிய வாளியை இறக்கி, அதில் தண்ணீர் பிடித்து குளிப்பது ஒரு சுகம். இப்படி அரைமணிநேரம் குளிப்பது உண்டு.

அதுவும் மழைக்காலங்களில் அந்த குளியல் இதமாக இருக்கும். வெளியே குளிரான சூழல் இருக்கும்போது, கிணற்று நீர் “கத கத” வென சூடாக இருக்கும் .

வெயில் காலங்களில் கிணறு வற்றுவதை கவலையோடு பார்க்கும் நாங்கள், மழைக்காலங்களில் நிரம்பி வழியும்போது மகிழ்ச்சி அடைவோம். மழையின் அளவை கிணறு நிரம்புவதை வைத்து கணிப்போம்.

நான்கு கல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை கிணற்றை தூர் வாருவார்கள். அப் போது சிறு, சிறு மீன்கள் வெளியேறி துடிக்கும்போது அதை பிடித்து விளையாடுவது ஒரு பொழுதுபோக்கு.

அதுபோல் வீட்டு பெண்களின் தங்க நகைகள் தவறி விழுந்து விடும் போது, வீடு பரபரப்பாகி விடும் .அப்போதெல்லாம் நான் கிணற்றில் இறங்கி அதை மீட்டு வருவேன். அதில் ஒரு பெருமிதம்.

கிணறுகளில் மூன்று வகைகள் உண்டு. உறைகிணறு ,ஆண்கிணறு, பெண் கிணறு என உண்டு .

உறை கிணறு என்பது வீடுகளில், அளவில் சிறியதாக இருக்கும்.

பெண் கிணறு என்பது வீட்டின் கொல்லைப்புறம் இருக்கும். அதில்தான் குளிப்பது, துவைப்பது, பாத்திரம் கழுவுவது என வேலைகள் நடக்கும். இக்கிணறு 6 அல்லது 7 அடி சுற்றளவிலேயே இருக்கும் .

பெண்கள் சோகத்தில் தவிக்கும் போதும், வெடித்து அழும் போதும் கிணற்றடிதான் உறுதுணையாக இருக்கும். அவர்கள் ஆறுதல் தேடும் இடங்களாக அவை இருந்தன.

விவசாய கிணற்றை ஆண் கிணறு என்பார்கள். இது அகலமானதாகவும், ஆழமானதாகவும், இறங்கும் படிக்கட்டுகளை கொண்டதாகவும் இருக்கும்.

விவசாய நிலங்கள் , தோட்டங்களில்தான் இது காணப்படும். ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானத்தை தீர்மானிக்கக் கூடியதாகவும், விவசாயத்தின் நம்பிக்கையாகவும் இக் கிணறுகள்தான் இப்போதும் திகழ்கின்றன.

கிணறு தோண்டும் போது பரபரப்பாக இருக்கும். யார் கையும் படாத புது தண்ணீர் பீறிடும்போது அங்கு கூடி இருப்பவர்கள் அடையும் ஆனந்தத்திற்கு எல்லையே இருக்காது. அப்போது கை தட்டுவார்கள். குலவை இடுவார்கள். சிலர் பூக்களைத் தூவுவார்கள் .

இப்போது இயந்திரங்கள் மூலம் கிணறுகள் தோண்டப்பட்டாலும், அதன் நிறைவுப் பணியை பாரம்பரியமான கிணறு தோண்டும் தொழிலாளர்களே செய்து முடிக்கிறார்கள்.

கிணறுகளில் மோட்டார் மூலம் தண்ணீர் இறைக்கும்போது தண்ணீர் வற்றும். அடுத்த சில நிமிடங்களில் தண்ணீர் ஊறி வருவதை பார்க்கும் போது உற்சாகமாக இருக்கும். கிணற்றின் நன்கொடை அது.

விவசாய தோட்டங்கள் அல்லது நிலங்களுக்கு மத்தியில் இருக்கும் கிணறுகளில் பம்புசெட் மூலம் தண்ணீர் இறைத்து அந்த தொட்டியில் இறங்கி குளிப்பது ஒரு சுகம்.

படிக்கட்டு வழியே கிணற்றில் இறங்கி குளிப்பது ஒரு தனி சுகம்.

சில மாதங்களுக்கு முன்பு ஒருநாள் தஞ்சாவூர் அருகே ஒரு நண்பரின் தோட்டத்திற்குச் சென்றேன்.

அங்கே ஒரு பெரிய வட்டக்கிணறு படிக்கட்டுகளோடு இருந்தது. அடி மண் தெரியும்படி ,தெளிவான நிலையில் தண்ணீர் சிரித்துக் கொண்டிருந்தது.

அதில் இரண்டு மணி நேரம் நண்பர்களோடு உடலாற, மனதார இறங்கி குளித்தேன். அந்த புத்துணர்ச்சியே தனிதான்.

இதுபோன்ற குளியல் என் இளமை காலத்தில் தினமும் கிடைத்தது.

இன்றைய தலைமுறைக்கு இதுவெல்லாம் கிடைக்காதது வருத்தமே.

இன்று வாழ்வின் பரபரப்பில் 10 நிமிட “பாத்ரூம் குளியலில் ” வாழ்க்கை சுருங்கிவிட்டது.

விவசாயம் பொய்த்துப் போனதும், நெருக்கடிகள் சூழ்ந்த வாழ்க்கைமுறையும், நகரமயமாதலும் கிணற்றுடன் ஆன உறவை மனிதர்களிடம் இருந்து பிரித்து போட்டிருக்கிறது.

கிணறு என்பது குடிநீருக்காக மட்டுமல்ல, குளியலுக்காக மட்டுமல்ல, விவசாயம் மற்றும் தண்ணீர் பயன்பாட்டுக்காக மட்டுமல்ல…. அது ஒரு மழை நீர் சேகரிப்பு தொட்டி என்பதையும் மறந்துவிடக்கூடாது.

இப்போதும் எங்கள் வீட்டில் சிறிய வட்டக் கிணறு உள்ளது.

ஆனால், மோட்டார் மூலம் உறிஞ்சப்படும் தண்ணீரில் பாத்ரூமில்தான் குளிக்கிறோம்.
கிணற்றை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டே.!!

– மு.தமிமுன்அன்சாரி MLA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *