டீக்கடை சேகர்

சேகரண்ணன் டீ கடையின் விஷேசமே 30 வருடங்களுக்கும் மேலான வாடிக்கையாளர்கள்தான். இன்னொரு விசேசம் என்னைப்போல 5 வருட புதிய வாடிக்கையாளர்களுக்கு டீயின் சரியான விலை என்னவென்று இன்று வரையிலும் தெரியாது. டீ அருந்திவிட்டு 5 ரூபாய் குடுத்தால் சமயத்தில் ஒரு ரூபாய் சில்லறைகொடுப்பார்,சில நேரம் இரண்டு ரூபாய். ஒருசிலநாள் பத்து ரூபாயை வாங்கி கல்லாவில் போட்டுக்கொண்டு “சரியாப் போச்சு போடா” என்பார். கடுப்பான முருகண்ணன் ஒருநாள் “டேய் சேகரு, ஓங் கட டீ வெல ஒனக்குனாச்சும் தெரியுமாடா?” என்ற போது “அட வுடுப்பா அவன் பெரிய ராஜதந்திரி” என்றார் அஸ்லம்பாய்.

கடைவீதியில் பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள கடையென்பதால் பாய்மார்கள்,வணிகர்கள், சுமையிறக்கும் தோழர்களென கலவையான இடமது. அதிகாலை நாலரை மணிக்கெல்லாம் அடுப்பைப் பற்றவைத்தாரென்றால் நாளெல்லாம் எரிந்து கொண்டிருக்கும். எப்போதும் CD யில் பழைய, புதியபாடல்களென ஓடிக்கொண்டிருக்கும். வெள்ளிக்கிழமை காலையில் நாகூர் ஹனீபாவுக்கும் வாய்ப்பு தருவார். சில நேரம் அதிகாலையிலேயே ‘ஏகாந்த வீணை ‘பாடிக்கொண்டிருக்கும். அதிகாலைத் தொழுகைக்கு முன்பே டீ அருந்த வரும் ஒரு கும்பலில் உள்ள ஜமால்பாய் “காலையிலேயே ஏண்டா இந்தமாதிரி சைத்தான் பாட்ட போடற?” என்றால் “பொண்டாட்டி திட்டு தாங்க முடியாம காலைல எந்திருச்சு ஓடியாறர ஒனக்கு இந்தப்பாட்டு கசக்கதான் செய்யும் ” என்பார் சேகரண்ணன்.

அனைவரிடமும் சேகரண்ணனுக்கு எல்லைகள் கடந்த உறவிருந்தது. என்னிடம் ” டே டானு, ஒன் மகன் பெரியவன் சைக்கிள்ள ரொம்ப வேகம்டா. மெரட்டி வைய்யி என்பார். சக்திவேல் மனைவியின் கால் வலிக்கு பாலக்காட்டில் உள்ள ஹோமியோபதி மருத்துவ மனையின் விலாசத்தை வாங்கித்தந்து செலவுக்கு பணமும் கொடுத்தனுப்புவார். ஆசைகளற்ற மனிதர்.

எல்லாம் சரியாகப்போய்க் கொண்டிருந்தபோது திடீரென ஒருநாள் கடையில் பாரதமாதா படம் வைக்கப்பட்டது. அடுத்தநாள் அதற்கு கீழே புதிய தாமரைப்பூ வைக்கப்பட்டிருந்தது. அதற்கடுத்தநாள் சீசனே இல்லாமல் ‘கல்லும் முள்ளும்’ முழங்கத் தொடங்கியது. அதற்கடுத்த நாள் இதுநாள் வரையிலும் அப்பகுதியில் நாங்கள் பார்க்காத நான்கு புதிய முகங்கள் பெஞ்சில் அமர்ந்திருந்தன.

அவர்கள் யாராக இருக்குமென சொல்லத்தேவையில்லை.அதற்குப்பின் சேகரண்ணனின் நடவடிக்கையில் பெரும் மாற்றம் ஏற்படத்தொடங்கியது. காலையில் வந்தவுடன் பக்திப்பாடல்களை முழங்க விட்டு பாரதமாதா படத்திற்கு மணியடித்து பூஜை செய்தபின்னே அடுப்புபற்றவைப்பதை வழக்கமாக்கினார். அதற்கு முன்னரெல்லாம் “அப்பனே முருகா” என்று அடுப்பிற்கு ஒரு கும்பிடுபோடுவதோடு சரி. இப்போதெல்லாம் பூஜைதான். பூஜையென்றால் சாதாரணமாக இல்லை. கிட்டத்தட்ட 20 நிமிடமாவது நடக்கும் . பொறுத்துப்பொறுத்துப் பார்த்த ஜமால்பாய் ஒருநாள் “டேய், இதெல்லாம் வீட்லயே முடிச்சுட்டு வரக்கூடாதா, எவ்வளவு நேரந்தாண்டா காத்திருக்கறது?” எனச் சலித்துக்கொண்டபோது

” ஒன்ன யாருடா காத்திருக்கச் சொன்னது துலுக்கா” என்ற சேகரண்ணனின் மறுமொழியில் ஜமால்பாய் தலைகுனிந்து வெளியேற உடனிருந்த முருகண்ணனும் ” இதுக்கு நீ செருப்புலயே அடிச்சிருக்கலாண்டா சேகரு” என்று வேதனையைப் பகிர்ந்தவாறே அவருடன் வெளியேறினார்.

நாளடைவில் இதுபோன்ற செயல்கள் சேகரண்ணனின் இயல்பானது. ஒருமுறை நான் டீ குடித்துவிட்டு 5 ரூபாய் கொடுத்தபோது “இன்னும் ரெண்டுரூவா கொடு” என்றதோடல்லாமல் ” சில்லற கரெக்டா குடுப்பா” என கடுப்பானார். உரிமையாக பழகியவர்கள் புதிதாக நமக்குத்தரும் மரியாதையென்பது கொடுந்துயரம். அன்று அதை உணர்ந்தேன்.

அவரின் கடையைப்பொருத்த அளவில் மதபேதம் மட்டுமல்ல வர்க்க பேதத்திற்கு கூட இடமேயில்லை. ஒரு கூலித்தொழிலாளி தான் சுமையிறக்கும் கடையின் முதலாளிக்கு டீவாங்கித்தருவது இயல்பான ஒன்று. எல்லோரும் ஒரு கலவையாக வந்துபோகுமிடம் நாசமானதில் அனைவருக்குமே பேரிடியாக இருந்தது. நாளடைவில் கூட்டம் குறையத்துவங்கி
‘புதியவர்கள்’ ஓரிருவராகக் கூடத்துவங்கினார்கள்.

நான் வைராக்கியமானேன். இந்நாடகத்தின் முடிவு எப்படித்தான் இருக்கப்போகிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் வெறியில் இருந்தேன். அதெப்படி நட்புணர்வு நிறைந்த ஒருமனிதன் இந்தளவிற்கு வெறுப்பைச் சுமக்கவியலும் என நினைக்கும்தோறும் மறுகலானேன். என்ன ஆனாலும் சரி இந்தாளை விடுவதில்லை என உறுதிபூண்டு தினமும் கடைக்குச் செல்வதை கடமையாக்கினேன். என் அம்மாவிடம் இது குறித்து புலம்பியபோது “அடப்போடா ஆதியில வந்ததே பாதியில போகுது. இது இடையில வந்ததுதான, சரியாகிரும் விடு” என்றார். வழக்கம்போல மறுநாள் காலையில் சென்றபோது கடை மூடப்பட்டிருந்தது.

சேகரண்ணனின் டீக்கடை மூடப்பட்டிருக்கிறது என்பது வெறும் தகவல் அல்ல. அது பிரளயம். ஏனெனில் சேகரின் கடை மூடப்பட்டிருக்கிறது என்பது வாரத்திற்கு 10 நாள்கள் என்பதைப்போல வினோதமான செய்தி. டைபாய்டு வந்தபோது கூட ஒரு டீ மாஸ்டரை நியமித்து “பால், டீத்தூள், சக்கரை இது மூணுக்கும் அன்னன்னிக்கே பைசா செட்டில் பண்ணிரு. எனக்கு தினமும் நானூருவா கொடுத்திரு.மிச்சம் வர்றத நீ வச்சுக்க. அதிகமா எட கட்டாத.வர்றவங்கள்ட்ட கடுப்பா பேசாத ” என்ற நிபந்தனைகளோடு கடையை நடத்தியவர் சேகரண்ணன். அவரது மகளின் திருமணத்தின் போதும் இப்படித்தான். முருகண்ணன் சொல்லுவார் ” ஒருநா, ஒரு பொழுது கடயடைச்சு பார்த்ததில்ல”
அந்த கடைதான் இன்று மூடப்பட்டிருக்கிறது. டீக்குடிக்க வந்த அனைவரும் நம்ப முடியாமல் பூட்டியிருந்த கதவை புருவம் சுருக்கி பார்த்துத் திரும்பினர்.

மறுநாளும் கடை திறக்கவில்லை. இன்று அஸ்லம் பாய் விடுவதாயில்லை. “கூடாச் சகவாசம்.சொன்னா கேட்டானா? என்னாச்சுன்னு தெரியலயே” எனப்புலம்பியவரிடம் ” இப்படியே பேசிட்டிருந்தா வேலைக்காவாது. வீட்டுக்குப்போய் என்ன ஏதுன்னு பார்த்துட்டு வருவோம்” என்றார் சக்திவேல். கடைசியில் கூட்டமாக போக வேண்டாம் , முருகண்ணன், அஸ்லம்பாய், ரபீக், சக்திவேல், ஜமால்பாய் என ஐந்துபேர் போவதென முடிவானபோது ஜமால்பாய், ” டேய் முருகா, அவனுக்குத்தான் பாய்கள கண்டாலே ஆக மாட்டேங்குது.

பேசாம நீங்க மட்டும் ஒரு மூணு, நாலு பேரு போய் பார்த்துட்டு வாங்களேம்பா” ” என்றார்.கடுப்பான முருகண்ணன்
” அப்படி மட்டும் இன்னிக்கு எதாவது அவன் பேசட்டும், வக்காலி நானே அவன பொடனில போடறேன். நீ மூடிக்கிட்டு இப்ப பேசாம வா” என அதட்டியதில் மறுபேச்சின்றி ஜமால்பாயும் கிளம்பினார்.

எங்களுக்கு ‘திக்திக்’ என்றிருந்தது. என்னவோ ஏதோ என்ற பதற்றத்திலேயே இருந்தோம். போன ஒருமணிநேரத்திலேயே ஐவர் குழு திரும்பியது. சேகரண்ணன் வீட்டில்தான் இருந்ததாகவும், ஆனால் மனபாரத்தினால் எவரையும் சந்திப்பதிலிருந்து தவிர்த்து விட்டதாகவும் கூறப்பட்டது. மேலும் வீட்டிற்குள் நுழைந்தவுடன் அண்ணி ஜமால்பாயின் கையைப்பிடித்துக்கொண்டு கதறித்தீர்த்ததாகவும், யாரும் எதையும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டாமென்று வேண்டியதாகவும் சக்திவேல் கூறியபோது அனைவரும் கண்கலங்கிப்போனோம். எனக்கு உடனடியாக அவர்களைப் பார்க்க வேண்டும் போல் தோன்றிய உணர்வை கட்டுப்படுத்தினேன். இப்படியே ஒருவாரம் கடந்திருந்த நிலையில் ஒரு நன்னாளின் அதிகாலையில் சேகரண்ணன் மீண்டும் அடுப்பைப் பற்ற வைத்தார்.

பொங்கல், ரம்ஜான்,பக்ரீத், கிறிஸ்த்மஸ், தீபாவளி பண்டிகைகளனைத்தும் ஒரே நாளில் வந்தால் எப்படியிருக்கும். அப்படித்தான் அன்று இருந்தது கடை. பாரத்மாதா படம், தாமரை எதையும் காணவில்லை . CDயில
‘ ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ‘ பாடிக்கொண்டிருந்தது. ஒரேயொரு மாற்றம். ஒரு சிலேட்டில்
‘மன்னிக்கவும்’ என்றெழுதி தொங்கவிட்டிருந்தார். எவரையும் நேருக்கு நேராக பார்ப்பதை தவிர்ப்பதாகத் தோன்றியதெனக்கு. டீக்குடித்து விட்டு 5 ரூபாய் நாணயத்தைக் கொடுத்தேன். குனிந்த தலை நிமிராமல் ஒரு ரூபாய் மீதம் கொடுத்தார். மேற்கொண்டு என்ன பேசுவது எனத் தோன்றாமல் திரும்பினேன். அவரது விழிகள் எனது முதுகைத் துளைப்பதை மானசீகமாக உணர்ந்து திரும்பினேன். சொல்லிவைத்ததைப்போல பார்த்துக்கொண்டிருந்தார். அவ்வளவுதான் .. கலங்கிப்போனேன் இருப்பினும் கட்டுப்படுத்திக் கொண்டு தழுதழுப்பாய் ” ஏண்னே?” என நிறுத்தினேன். ஏதோ சொல்ல வந்தவர் பெருமூச்சொறிந்து
” வுட்றா, எல்லாம் சில காலம்” என்றார்.

என்னவோ நடந்து தொலைத்திருக்கட்டும். ஆயிரம் கதைகள் உலவுகின்றன. எது குறித்தும் இம்மியளவும் எனக்கு கவலையில்லை. மாண்ட மகன் மீண்ட தாயின் மனநிலையிலிருக்கிறேன். இன்னும் இப்பரந்த தேசத்தில் மீள வேண்டிய சேகர்கள் எத்தனை பேரோ என்றெண்ணும் போது ஈரக்குலை நடுங்குகிறது.

எழுத்தாளர்
Farook Meeran

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *