தொடர்பு எல்லைக்கு அப்பால்

யானை பிளிறலோடு மலைப்பாம்பு ஊர்ந்து வருவது போல வந்து நின்றது, இரயில். வளைந்து நெளிந்து நீண்டிருந்த அதன், தலையும் வாலும் அகப்படவில்லை. வரிசையாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நீல நிறப்பெட்டிக்குள், ஏறியிறங்க கூட்டம் முந்தியடித்தது. ”டொய்ன்… டொய்ன்… பயணிகளின் கனிவான கவனத்திற்கு… வண்டி எண் ஒன்று இரண்டு ஆறு ஏழு மூன்று… சென்னையில் இருந்து கோயம்புத்தூர் வரை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ், நடைபாதை எண் இரண்டில் இருந்து ஐந்து நிமிடத்தில் கிளம்பும்” என்று ஒலிப்பெருக்கியில் தமிழ், இந்தி, ஆங்கிலம் என மாறி மாறி இரைந்து கொண்டிருந்தது. 

கடற்கரை அலை போல வந்து செல்லும் மக்களால் இரைந்து கொண்டிருந்த இரயில் நிலையத்தில் எனது மனம், ஆழ்கடல் போல அமைதியாகக் கிடந்தது. நிதானமாக ஏறி எனக்கான இடத்தைத் தேடி அமர்ந்தேன்.  இரையை விழுங்கிய மலைப்பாம்பாய் இரயில் மெல்ல ஊர்ந்தது. சட்டென வேகமெடுத்து இருளுக்குள் தொலைந்தது. சிறிது நேரத்தில் இருக்கையில் இருந்து எழுந்து கதவுக்கருகே சென்று நின்றேன். குளிர்ந்த காற்று முகத்தை தொட்டுச் சென்றது. வெளியே எட்டிப்பார்த்தேன். ‘தடக், தடக்’ என்ற சத்தத்தோடு இரயில் பெட்டிகள் வளைந்தும், நீண்டும் வந்து கொண்டிருந்தது. இருப்புப் பாதையில் இணைந்து செல்லும் இரயிலும், தொடர்ந்து வரும் பெட்டிகளும் எவ்வளவு முறை பார்த்தாலும் சலிப்பூட்டாது போல.

 இரயில் எப்போதும் எனது பிரியத்துக்குரியது. பிரமிப்பைத் தருவது. பிடித்து வைத்ததை போல ஒரிடத்தில் அமர்ந்திருக்காமல், அவ்வப்போது சுதந்திரமாக நடக்கலாம். நாட்டில் குறுக்கும், நெடுக்குமாக பயணிக்கும் பலவிதமான மனிதர்களைப் பார்க்கலாம். இரயிலில் பயணிக்காத மனிதர்கள் இருந்தாலும், பார்க்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் என்றே நினைத்திருந்தேன். இப்போது நான் சென்று கொண்டிருக்கும் ஊரில் உள்ள ஒருவரும் இதுவரை இரயிலை பார்த்தது கூட இல்லையாம். அவ்வூரில் உள்ள குழந்தைகளின் பேராசை எதுவென்றால், இரயிலேறி சென்று கடலை பார்த்து வர வேண்டும் என்பது தானாம். 

இதேபோல் ஒரு நாள் இரவு இரயில் பயணத்தில் தான், இதழியல் படித்த கையோடு பிரபல வார இதழில் செய்தியாளர் பணிக்கான நேர்காணலுக்கு சென்னை சென்றேன். எதிர்பாராத விதமாக செய்தியாளர் வேலையும் கிடைத்தது. எனக்கு சொந்த ஊர் கோவை என்றாலும், சென்னையில் வேலை செய்வது பிடித்திருந்தது. ஊரும் பழகிவிட்டது. இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டது.  ஒரு நாளிதழை புரட்டிக் கொண்டிருந்த போது, அவனின் புகைப்படத்தை எதர்ச்சையாக பார்த்தேன். சிறு செய்தியோடு அந்த புகைப்படம் வந்திருந்தது. 

அந்நாளிதழில் புகைப்படக்கலைஞராக பணியாற்றும் அருண், என்னோடு கல்லூரியில் படித்தவன். நான் கேட்டுக் கொண்டதற்கேற்ப அவனின் புகைப்படத்தை மெயில் அனுப்பியிருந்தான். அவன் அப்பகுதியில் நடக்கும் முக்கியச் செய்திகளையும் புகைப்படங்களையும் அவ்வப்போது எனக்கு அனுப்புவது வழக்கம். அவ்வூரில் எங்கள் நிறுவனத்தில் செய்தியாளர் இல்லாததால் கூடுதல் பொறுப்பு எனக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. கையில் மதிப்பெண் சான்றிதழுடன் பரிதவித்து நிற்கும் அவனின் முகத்தை என்னால் எளிதாக கடந்து செல்ல முடியவில்லை. அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். 

18 வயதிற்கேற்ப ஒடிசலான உயரமான தேகம். சாந்தமான மாநிற முகம். அதில் மென்சோகம் கவிழ்ந்திருந்தது. சுருட்டை முடி, அரும்பு மீசை என்றிருந்தான். அவனின் கண்களில் பரிதவிப்பு மிகுந்திருந்தது. அருண் அனுப்பிய செய்தியைப் புரட்டினேன். நாளிதழ் செய்திக்கான உள்ளடக்கம் மட்டுமே அதில் இருந்தது. வார இதழுக்கு இது போதாது. நேரில் சென்று முழுமையாக அறிந்து எழுதினால் தான் நன்றாக இருக்குமென்பதால், ஈரோட்டிற்கு கிளம்பிவிட்டேன். இது தொடர்பாக பேசும் போது, அவ்வூர் மக்கள் இரயிலை பார்த்தது கூட கிடையாது என்பதை அருண் சொன்னான்.

ரயில் அதிகாலையில் ஈரோடு இரயில் நிலையத்தை அடைந்தது. அருண் எனக்காக காத்திருந்தான். நல விசாரிப்புகளுக்குப் பிறகு, அவனது அறைக்கு சென்றோம். அவசர அவசரமாக தயாராகி இரு சக்கர வாகனத்தில் இருவரும் சுண்டப்போடு கிளம்பினோம். ஏற்கனவே அருண் சுண்டப்போடு சென்று வந்திருந்தான் என்பதால், எந்த சிரமமும் இருக்கவில்லை.

ஈரோட்டில் இருந்து நூறு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது, கொங்காடை கிராமம். பர்கூர் மலைப் பகுதியில் போக்குவரத்து வசதியற்ற ஒரு கடைக்கோடி கிராமம். அண்மையில் தான் பேருந்தே, அவ்வூரை எட்டிப் பார்த்தது. அங்கிருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரம் ஒற்றையடிப் பாதையில் நடந்து சென்றால் தான், சுண்டபோடு கிராமத்தை அடைய முடியும். தொடர்சாலையற்ற மலைப்பாதையில் மேடு பள்ளங்களின் வனப்பில் உருண்டு புரண்டு ஊர்ந்து வனத்தின் நடுவே பயணிக்க வேண்டியிருந்தது. செல்லும் பாதையில் எப்போதோ தார்ச்சாலை போட்டிருந்த அடையாளத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. போதாக்குறைக்கு அந்தப் பாதையில் காட்டு விலங்குகள் எப்போது வேண்டுமானாலும் எதிர்படும். இப்படியான சாகசப் பயணத்தை கடந்து அவ்வூரை அடைந்தோம்.

பச்சை வண்ணத்தை தொலைத்து விட்டு வெளிறிப் போயிருந்தது வனம். முடிவில்லாது சொட்டும் கண்ணீர்த் துளிகளென, மரங்கள் இலைகளை உதிர்த்தபடி இருந்தன. அவை அளவற்ற துயரத்தைச் சுமந்தபடி வெறுமையாய் நின்றிருந்தன. வழியில் ஓரிரு மான் கூட்டங்கள், ஒற்றை காட்டெருமை, அங்குமிங்கும் ஓடும் காட்டுப் பன்றிகள் தவிர்த்து மிருக வாசனையற்று வறண்டிருந்தது. வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. சருகுகள் மேலெழும்பியபடி நகர்ந்த வறண்ட காற்று, முகத்தின் மீது பட்டுச் சென்றது. மாதனின் வீட்டின் முன்பு அருண் வண்டியை நிறுத்தினான். மாதன் வீட்டின் முன்பு ஒரு வயதான ஆள், வெற்றுடலும் வேஷ்டியும் என இருந்தார். அது மாதனின் அப்பா என்பதைப் பார்த்த மாத்திரத்தில் அறிய முடிந்தது. ரேடியோவில் ஏதோவொரு பாடல் கரகரப்பாக ஒலித்துக் கொண்டிருந்தது. 

”மாதன் வீடு இதுதானே?”

“ஆமாங்க… சார் யாருனு தெரியலையே?”

“நான் கவின், ரிப்போர்ட்டர், இது அருண்”

”நீங்க வருவீங்கனு மாதன் சொல்லியிருந்தான். வாங்க, வாங்க…”

திண்ணையில் அமர்ந்தோம். வீட்டின் பின்புறம் இருந்து மாடுகள் ”மா…. மா…” என்று கத்துவது கேட்டது. மாதனின் அப்பா குடிக்க தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். குடித்தபடி, ”மாதன் இல்லையா?” எனக்கேட்டேன்.“பட்டியில இருக்கான். இருங்க கூப்பிடுறேன்” என்றவாறே மாதனை அழைக்கச் சென்றார். மாதன் மாடுகளுக்கு தீவணம் வைத்து விட்டு வந்தான். அதற்குள் பிளாக் டீ வந்திருந்தது. குடித்து முடித்த பின்னர், மாதனுடனான நீண்ட உரையாடலுக்குத் தயாரானேன். பேசியபடியே ஊரைச் சுற்றி நடந்தோம். அருண் வேண்டிய இடங்களில் எல்லாம் புகைப்படங்களை எடுத்துக்கொண்டான்.

”மாதன் உங்களப் பத்திச் சொல்லுங்க”

”நாங்க ஊராளி டிரைப்ஸ். எனக்கு ரெண்டு அண்ணன், ஒரு தம்பி அப்புறம் ஒரு தங்கச்சினு கூட பொறந்தவங்க நாலு பேர். அப்பாவுக்கு முக்கால் ஏக்கர் நெலம் இருக்குது. வானம் பாத்த பூமி. அதுவும் கடன்ல தா இருக்கு.  மொதல்ல அப்பாவுக்கு உதவியா மாடு மேய்ச்சிட்டு இருந்தேன்”

குறுக்கிட்டு “எப்போ ஸ்கூலுக்கு போனீங்க” எனக்கேட்டேன். 

“பத்து வயசா இருக்குறப்பா, நாலாம் கிளாசுல சேர்த்து விட்டாங்க…”

“அப்போ மொத மூணு வகுப்பு?”

”அதெல்லா படிக்கல சார். நானெல்லா பள்ளிக்கூடம் போனதே பெரிய விஷயம்…”பேசிக்கொண்டே நடந்து சென்ற போது, “அதோ பாருங்க அதுதா நா படிச்ச பள்ளிக்கூடம்” என்று மாதன் தன் கையை நீட்டிக் காட்டினான்.

ஒரு சிறிய அறை போல இருந்த கட்டிடத்தைக் காட்டினான். அதனை பள்ளியென மாதன் சொன்னான். சகல வசதிகளோடு இருந்த பள்ளிகளைப் பார்த்துப் பழகிய எனக்கு, அது ஏதோ மோட்டார் அறை போல தோன்றியது. சுவர்கள் வெள்ளை சுண்ணாம்பு பூசப்பட்டிருந்தது. கூரையாக சிமெண்ட் சீட் இருந்தது. குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளி என சிறு போர்ட் இருப்பது தெரிந்தது.

அப்போது ஏதிரே வந்தவரை சடையன் என மாதன் அறிமுகப்படுத்தி வைத்தான். ஒற்றை கோமணத்தில் தன்னை உடுத்திக்கொண்டு, எலும்புகள் துருத்தி தசை இறுகிய கருத்த தேகத்தோடு வந்து நின்றார். கல்விக்கூடம் கட்டுவதற்கான பத்து செண்ட் இடத்தை எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி தந்ததோடு, தன் மிச்ச நெலத்தையும் குழந்தைகள் சாப்பாட்டுக்கு காய்கறி விளைவிக்க கொடுத்தவர் என்று மாதன் சொன்னான்.”அய்யா… நமக்கு முன்னாடி இருந்தவங்க போய்டாங்கோ, ஒண்டிக்கட்டையான நாமலும் நாளீக்கு போயிடுவோம். ஆனா இந்தப் பள்ளிக்கூடம் எங்கயும் போவாதுங்க. எங்க புள்ளைகல இது காப்பாத்தும்” என சடையன் சொன்னார்.

கனத்த குரலோடு சடையனின் கைகளைப் பற்றிக்கொண்டு, ”அய்யா… நீங்க செஞ்சது சாதாரண விசயமில்ல. பிள்ளைக நல்லா இருப்பாங்க” என்றேன்.

சடையன் தனது வீட்டை காட்டினார். வீடு மொத்தமே பத்துக்கு பத்தடி தானிருக்கும். சதை பிளந்து தொங்கும் எலும்புகளாய் மண் சுவர் பெயர்ந்து, மூங்கில் தடுப்புகள் வெளிப்பட்டன.  சுவரின் ஓட்டைகளும் மேற்கூரை ஓடுகள் உடைந்த ஓட்டைகளும் சாக்குப் பைகளால் அடைக்கப்பட்டு, தகர கதவு போடப்பட்டிருந்தது. அதில் இரண்டு பகுதியாக பிரித்து சமையலறையாகவும் , ஒரு பகுதியை தான் படுத்தெழ போதுமான அறையாகவும் அமைத்திருந்தார். அந்த சிறு குடிலுக்குள் ஒரு பெரிய கரையான் புற்று உருவாகியிருந்தது. ”இந்த புற்றை ஏன் களைக்கவில்லை” எனக் கேட்டதற்கு, ”அய்யோ… அதுக்குள்ள உயிரு இருக்குங்க சாமி, அத களைக்கிறது பாவங்க. அது பாட்டுக்கு அது இருக்கு, எம் பாட்டுக்கு நானிருக்கேன்” என வியப்பளித்தார். சடையனிடம் இருந்து விடைபெற்றுக் கிளம்பினோம். “இங்க எப்புடி ஸ்கூல் வந்துச்சு?” எனக் கேட்டேன்.

“அதொரு பெரிய கதெ சார். மாடு மேய்ச்சிட்டு இருந்த என்னை முருகன் சார் தா வந்து பள்ளிக்கூடத்துல சேத்துவிட்டாரு. அப்போ இந்த பள்ளிக்கூடம் எல்லா இல்ல. கீழ இருக்குற பள்ளிக்கூடத்துக்கு மினி ஆட்டோவுல போயிட்டு வரணும். என்னோட சேர்ந்து பன்னெண்டு பேர் பள்ளிக்கூடத்துக்கு போனோம். போயிட்டு வர்றது கஷ்டமா தா இருந்துச்சு. திடீர்னு ஒரு நாளு மினி ஆட்டோ மலைப்பாதையில இருந்து கவிழ்ந்து விழுந்திடுச்சு. நிறைய பேருக்கு காயம். எனக்கு கையில, தலையில காயமாச்சு.” “அச்சச்சோ… அப்புறம் என்னாச்சு?”

“அப்புறம் எங்க பள்ளிக்கூடம் போறது?, முருகன் சார் தா  இங்க பள்ளிக்கூடம் தொடங்கலாம்னு சொன்னாரு. அதுமட்டுமில்லாம அவரே தா இப்ப வரீக்கும் பாடமெடுத்திட்டும் இருக்காரு. முருகன் சார் இல்லீனா இங்க யாரும் படிச்சு இருக்க முடியாது. திங்கட்கிழம வந்தார்னா, வெள்ளிக்கிழம தா ஊருக்கு போவாரு”“ப்பா… பெரிய விஷயம். அவர பார்க்க முடியுமா?”

முருகனை பார்க்க மாதன் அழைத்துச் சென்றான். வகுப்பறை உற்சாகமாக இருந்தது. மாணவர்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தனர். எங்களை பார்த்ததும் எதையோ படிக்கச்சொல்லி விட்டு, வகுப்பறையில் இருந்து வெளியே வந்தார். நேர்த்தியற்ற உடையோடு இருந்த அவர், தன்னை முருகன் என்று அறிமுகப்படுத்தினார். அதிகபட்சமாக முப்பத்தி அஞ்சு வயதிருக்கும். நானும் என்னைப் பற்றி சொன்னேன். அந்த உடை என் கண்ணை உறுத்திக் கொண்டேயிருந்தது. அதை கவனித்தவராக முருகன் சொன்னார்.

“இந்த கிராமத்து மனுசங்க தன்மையோடு இருக்குறவங்கள தா, குழந்தைக ஏத்துப்பாங்க. அதனால தா இப்புடி…”

”சாரிண்ணா…”

“பரவால சார், இதுல என்னயிருக்கு?” என்ற முருகன், தனது கதையைச் சொன்னார்.”எனக்கு சொந்த ஊரு கோபி. நா காலேஜ் படிக்குற சமயத்தில நெறைய சோசியல் சர்வீஸ் பண்ணிட்டு இருந்தேன். அப்படி ஒருக்கா இங்க வந்து பார்த்தப்போ, ஒரு கொழந்த கூட ஸ்கூலுக்கு போகல. இவீங்களுக்கு ஸ்கூல்னா என்னனெ தெரியாது. பெத்தவங்களோட போய் காட்டு வேல, மாடு மேய்க்கிறதுனு இருந்தாங்க.

பொண்ணுகளுக்கு சின்ன வயசுலயே கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க. சுத்தி இருக்குற ஊருகளிலும் இப்புடி தா. அங்க ஒன்னா ஸ்கூல் இருக்காது. ஸ்கூல் இருந்தா டீச்சர் இருக்க மாட்டாங்க. இதையெல்லா மாத்த ஏதோ பண்ணலானு இதெல்லாம் பண்ணிட்டு இருக்கேன்.”

“சூப்பர்ண்ணா… ஆனா குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளியில ரெண்டு வருசம் தானே படிக்க முடியும்?”

“ஆமா சார்… ரூல்ஸ் படி ரெண்டு வருசம் தா இங்க படிக்க முடியும். அப்புறம் முறைசார் பள்ளியில சேர்த்து விடணும். ஆனா அதுக்கு இங்க வழியில்ல. சின்ன பசங்க எப்புடி எட்டு பத்து கிலோமீட்டர் காட்டுப்பாதையில நடந்து போயிட்டு வர முடியும்? கூட ரெண்டு, மூணு வருசம் சேத்தி எடுக்க வேண்டியிருக்கும். அவீங்கள படிக்க வைக்கறது தா முக்கியம்”

”ஒரே அறையில எப்புடி கிளாஸ் எடுக்குறீங்க?, பாக்க ஸ்கூல் மாதிரியே இல்லீயே?””வேற என்ன சார் பண்ண முடியும்?… காலையில தொடங்கி மாலையில முடியுற சமவெளி ஸ்கூல் மாதிரி இது இருக்காது. காலையில வந்தா பசங்க கூடியிருக்க மாட்டாங்க. அவீங்க வீடுகளுக்கே போயி, கூப்பிட்டு வரணும். ஒரு பையன் பள்ளிக்கு பக்கத்துல இருந்தா, இன்னொருத்தன் மூணு கிலோமீட்டர் தொலைவில இருப்பான். எல்லோரையும் ஒண்ணு சேர்த்த அப்புறம் தான், வகுப்பு எடுக்க முடியும். அப்புடி வந்தவுடனே பாடங்களை நடத்தத் தொடங்கிடவும் முடியாது. சாப்டாங்களா… வீட்டுல இயல்பான சூழல்நிலை இருக்கா… நல்லா இருக்காங்களானு எல்லாம் முதல்ல தெருஞ்சுகனும். அவீங்களுக்கு ஏத்த மாதிரி சொல்லித்தரணும்””இந்த ஊருல யாரும் இரயில பாத்ததே இல்லனு கேள்விப்பட்டேனே. உண்மையா ண்ணா?”

“ஆமா சார்… ரயில் நமக்கு சாதாரண விஷயம். ஆனா இவீங்களுக்கு அதிசயம். அப்புடிதா எல்லாமே. சமவெளி பசங்களுக்கு கிடைக்குற எந்த வாய்ப்பும் வசதியும் இந்த மலக்காட்டுல கெடக்குற பசங்களுக்கு கிடைக்காது… இங்க இருக்கறவீங்க மேல வரது தானே பெரிய விசயம். ஓட்டை விழுந்த அரைக்கால் டவுசரு, சட்டையு போட்டுட்டு, பாவமா மாடு மேய்ச்சிட்டு இருந்த மாதன் அன்னிக்கு ஒரு குழந்தை தொழிலாளி. இன்னிக்கு கால்நடை மருத்துவ தரவரிசை பட்டியல்ல பழங்குடி பிரிவுல மாநிலத்துல முதல் மாணவன்… வேலைக்குச் சேருரப்போ சம்பளமாக ஆயிரத்து ஐநூறு ரூபாய் தான் கிடைச்சது. இப்போ ஏழு ஆயிரம் ரூபாய் வருது… கஷ்டநஷ்டம் இருந்தாலும் முதன்முறையா கல்வி பயில்கிற  குழந்தைகளுக்கு உதவுறேன்றத விட வேறென்ன பெருமையும் நிம்மதியும் கிடச்சிடப் போகுது?…” முருகனை பார்த்தேன். பின்னால் இருந்த மலைமுகடுகளை விட உயரமாக தெரிந்தார்.

அடுத்து மாதன் தான் படித்த கதையைச் சொன்னான். குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளிக்குப் பிறகு குன்றி ஆர்.சி. பள்ளியில் பத்தாம் வகுப்பும், கோபியில் பனிரெண்டாம் வகுப்பும் படித்தான். காலையில் சீக்கிரமே கிளம்பி பள்ளிக்கு செல்ல வேண்டும். திறந்த ஜீப்பிலோ அல்லது நடந்தோ செல்ல வேண்டும். மழைக்காலத்தில் செல்வது பெரும்பாடு. பள்ளி சேரும் போது பயணித்த களைப்பும் சோர்வும் சேர்ந்துவிடும். காட்டுவாசி என சில மாணவர்களின் கிண்டல் கேலியை சகித்துக் கொள்ள வேண்டும். ஒரிரு ஆசிரியரிடமும் ஏளனப் பார்வை இருக்கும். முருகன் அளித்த ஊக்கமும் வழிக்காட்டலும் படிப்பை தொடர வைத்தது. பொதுத்தேர்வில் அறநூற்றுக்கு, ஐநூற்று இருபத்து நான்கு மதிப்பெண் எடுத்தான். பழங்குடிகள் பிரிவில் மாதன் தான் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன். ’இத்தனை பிள்ளைகள்ல ஒருத்தன் படிச்சாலும் ஒசந்த படிப்பா படிக்கப்போறானு’ கல்லூரியில் படிக்கப்போகும் முதல் மாணவன் என்று கிராமமே கொண்டாடியது என்பதை விளக்கமாக கூறினான்.”

எங்க ஊருல காலேஸ் போற முதல் ஆளு நானா தா இருக்கும்னு நினைச்சேன். அப்படியாவது கஷ்டப்பட்டு படிச்சு வந்துட்டா, என்ன பாத்து மத்தவங்களும் படிப்பாங்க. ஆனா என்னோட சந்தோஷம் ரொம்ப நாள் நீடிக்கல” என்ற போது அவனின் குரலில் வருத்தம் மிகுந்திருந்தது.

தொடர்ந்து “கால்நடை டாக்டர் ஆகணும்கிறது தா என் ஆசை. அது கிடைக்கலான, ஆக்ரி படிக்கலாம்னு இருந்தேன்.  ரெண்டுலயும் விண்ணப்பிச்சு இருந்தேன். ரெண்டுலயும் டிரைபல்ஸ் பிரிவுல மொத கட் ஆப் நா தா. ஆனா வேளாண்மை செயல்பாடுகள் வொகேசனல் குருப் படிச்சவங்களுக்கு அஞ்சு சதவீதம் தான் இட ஒதுக்கீடு. அதுல பழங்குடிகளுக்கு ஒரு சதம். இதுல ஒரு ஆளு கூட சேர முடியாது. சயின்ஸ் குரூப் எடுத்து படிச்சவீங்க மாரி, வொகேஷனல் குரூப் படிச்சவங்கனால எல்லா படிப்புளையும் சேர முடியாது. ஒன்னு இல்லானா இன்னொன்னு கெடைக்கும்னு நெனைச்சேன். ஆனா ரெண்டுமே இல்லீங்கிறது கஷ்டமா இருக்கு. இப்புடி ஒரு சிக்கல் இருக்குறதே இப்ப தா தெரியும்” என்றான். 

மாதனை பார்த்தேன். அவன் கண்களின் ஓரம் கண்ணீர் துளிகள் திரண்டு, எப்போது வேண்டுமானாலும் கொட்டி விட தயாராக இருந்தது. 

”நான் படிச்சு மேல வந்துட்டா, தம்பி தங்கச்சிகளையும் முன்னேத்திடலாம்னு நினைச்சேன். இந்த ஊருலேயே யாரும் பத்தாவதுக்கு மேல படிக்கல. படிச்சு மேல வரணும்னு கஷ்டப்பட்ட எனக்கும் சீட் இல்லனு சொல்லுறாங்க. அதுக்கு ஏதேதோ காரணம் சொல்றாங்க. எனக்கு எதுவுமே புரியலை. எவ்வளவுதான் கஷ்டப்பட்டுப் படிச்சு மார்க் எடுத்தாலும், நாங்கெல்லாம் மேல வர முடியாதா? படிச்சாலும் படிக்கலைன்னாலும் மாடுதான் மேய்க்கணுமா?…” எனக்கேட்ட மாதனின் குரலில் தவிப்பு மிகுந்திருந்தது. 

”கவலைப்படாத. உன் கஷ்டம் வீண் போகாது. நம்பிக்கையோட இரு, கண்டிப்பா சீட் கிடைக்கும்” என நம்பிக்கை வார்த்தைகளை சொன்னேன். கனத்த மனத்தோடு விடைபெற்று ஊர் திரும்பினோம்.ஓரிரு நாளில் மாதன் குறித்தான செய்தி நான் பணியாற்றிய வார இதழில் விரிவாக வந்திருந்தது. பலரின் கவனத்தையும் ஈர்த்தது. அதற்கு பின்னர் மற்ற நாளிதழ்களும் செய்தி தொலைக்காட்சிகளும் மாதன் செய்திக்கு முக்கியத்துவம் அளித்தன. அவனுக்கு ஆதரவாக பலரும் கருத்துப்பதிவிட்டனர். ஒரு வார காலம் சென்றிருக்கும். முருகன் என்னை அழைத்து தோழர்கள் உதவியால் வழக்கறிஞர்கள் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும், முதலமைச்சரை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும், அதற்காக நாளை சென்னை வரவிருப்பதாகவும் தெரிவித்தார்.

சென்னை இரயில் நிலையம் பரபரப்பாக இருந்தது. முருகன் சொன்ன நேரத்திற்கு இரயில் நிலையத்தில் நின்றிருந்தேன். முருகனும் மாதனும் வந்தனர். மாதனின் தோளில் கைபோட்டபடி,

”உங்க ஊருல இருந்து இரயில்ல போன மொத ஆளு நீ தா. ஒரு வழியா உன் ஆசை நிறைவேறிடுச்சு போல?”

”அத விட படிக்கணும்னு தா ஆசை” என்றான். அவனின் முகம் மேலும் வாடியிருந்தது. 

”உனோட அந்த ஆசையும் கண்டிப்பா நிறைவேறும்” என்று நம்பிக்கையளித்தேன்.

தலைமைச் செயலகத்திற்கு சென்று முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அமைச்சர்களையும் சந்தித்தனர். உயர் நீதிமன்றமும் மாதனுக்கு இடம் ஒதுக்க பரிந்துரை செய்து உத்தரவிட்டது. அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகள் மாதனுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருந்தன. கல்லூரியில் இடம் கிடைத்துவிடுமென நானும் நம்பினேன். நம்பிக்கையோடு ஈரோடு சென்றனர்.

பரபரப்பு செய்திகளுக்கு பின்னால் பரபரப்பாக ஓடிக்கொண்டுருப்பது தானே செய்தியாளர்களின் பணி. அடுத்தடுத்த வேலைகளுக்குள் மூழ்க, மாதனை மறந்தே போனேன். ஒருநாள் அருணோடு பேசிக்கொண்டிருக்கும் போது, மாதனுக்கு கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என சொன்னான். என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கேட்க கேட்க கண்ணீர் வடிந்தது. எனக்கே இப்படி இருக்கிறது என்றால், அவன் என்னாகி இருப்பான்?. நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. 

மறுநாளே ஈரோடு கிளம்பினேன். மாதனைத் தேடி அருணோடு சுண்டபோடு சென்றேன். அவன் வீட்டில் இல்லை. அவனது அப்பாவிடம் கேட்ட போது, மாடுகளை ஓட்டிக் கொண்டு காட்டிற்குள் சென்றிருப்பதாக சொன்னார். முருகனைத் தேடி பள்ளிக்குச் சென்றோம். ”ஒரு மாணவனுக்கு இடம் கிடைக்கவில்லை என்பதற்காக எங்களால் எதுவும் செய்ய முடியாது” என அனைவரும் கை விரித்து விட்டதை கவலையோடு சொன்னார்.

”அவன் ஒரு மாணவனா?, அது ஒருவனின் கனவா?, நிச்சயம் இல்லை. சடையனின் தியாகம், முருகனின் உழைப்பு, மாதனின் ஆசை, ஊரின் கனவு, பல தலைமுறையின் ஏக்கம்” என மனதில் தோன்றியது. கோபம் கோபமாக வந்தது. என்ன செய்துவிட முடியும், கண்ணீர் வடிப்பதை தவிர… கண்ணீர் வடிந்தது.

மேகம் கருத்து வந்தது. முருகனோடு பேசியதில் இருந்து புரிந்து கொண்டது இது தான். அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகள் கல்லூரி படிப்பு மீது மாதனுக்கு சிறுகச் சிறுக நம்பிக்கை வளர்ந்து கொண்டிருந்தது. நீதிமன்ற உத்தரவை மலை போல் நம்பினான். இறுதியில் மலையில் இருந்து தூக்கியெறியப்பட்ட கண்ணாடி போல, அவனது நம்பிக்கை உடைந்து நொறுங்கியது. ”டாக்டர் ஆகப்போறேன்னு சொன்னப்பா எல்லா சிரிச்சாங்க. காட்டுப்பயலுக்கு ஆசையா பாத்தியானு… அப்பவே படிக்கறத விட்டிருக்கணும். இதுக்கா நா படிச்சேன்?, இதுக்கு பேசாம மாடு மேய்ச்சிட்டே இருந்திருக்கலாமே?… நா எல்லா படிக்க வரதே பெருசு, அதுல ஆர்வமா படிக்க ஆரம்பிக்கையில வாய்ப்பு மறுக்கப்பட்டா எங்க போறது?…”  என முருகனைக் கட்டிக்கொண்டு மாதன் அழுது தீர்த்திருக்கிறான். 

தனியார் கல்லூரியில் வேறு ஏதேனும் பாடப்பிரிவில் சேர்த்து விடுகிறேன் என முருகன் சொன்னார். அதைக்கேட்டு சட்டென விலகி வீட்டிற்குள் ஓடி, கதவை சாத்திக்கொண்டான். தட்டி தட்டிப் பார்த்தும் கதவைத் திறக்கவில்லை. முருகனும், மாதனின் அப்பாவும் பதறிப்போனார்கள். சற்று நேரத்தில் கதவைத் திறந்து சலனமின்றி மாதன் கண்களைத் துடைத்தபடி வெளியே வந்தான். மாட்டுப்பட்டியில் கட்டியிருந்த மாடுகளை அவிழ்த்து, காட்டிற்குள் மேய்ச்சலுக்கு ஒட்டிச் சென்றான். மற்றவர்களின் பேச்சுக்குரல் எதுவும் அவனது காதில் விழுந்ததாய் தெரியவில்லை. அதன் பிறகு அவனை என்னாலையே பார்க்க முடிவதில்லை என வருத்ததோடு முருகன் சொன்னார்.

மழையில் நனைந்தபடி ஊர் திரும்பினேன். அவன் மனதில் நம்பிக்கை விதைத்து ஏமாற்றியதில் எனக்கும் பங்குண்டு என்ற குற்றவுணர்வு மனதை வதைத்தது. அவ்வுணர்வு என் பல இரவு தூக்கத்தைப் பறித்தது. அழுது கண்ணீர் விட்டும், மனம் தேறவில்லை. ஒருமுறையேனும் அவனைப் பார்த்து மன்னிப்பு கேட்டிட வேண்டும். அதற்காக நானும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்து விட்டேன். 

இந்த சமூகத்தின் தொடர்பு எல்லைக்கு அப்பால் தொலைந்த அவனை, எவ்வளவு முயன்றும் மீண்டும் பார்க்க முடியவில்லை.

பிரசாந்த்.வே
prasanth.news18@gmail.com

3 thoughts on “தொடர்பு எல்லைக்கு அப்பால்

  1. சின்னஞ்சிறிய கிராமமங்களில் எப்படி கல்வி சாத்தியம் என்று நினைப்பவர்களுக்கு முருகன் சார் ஒரு முன் உதாரணம். அருமை.

  2. உணர்வுகளை தட்டியெழுப்பி இருக்கிறது அத்மார்த்த வரிகள் உள்ளடக்கிய எதார்த்த நிகழ்வுகளை கொண்ட இந்த பெரு’உண்மை’ (சிறு’கதை’அல்ல).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *