தூரம்

“சாரி அண்ணா. பஸ் கிடைக்கல. அதான் லேட்.”

“வேளச்சேரில ரொம்ப டிராபிக் அண்ணா.”

“பஸ் ரொம்ப ஸ்லோவா வந்துச்சு அண்ணா.”

இவை எனது வகுப்பிற்கு தாமதமாக வரும் மாணவர்கள் கூறும் காரணங்களில் சில.

அம்சா, பராசக்தி. எனது முதல் மாணவிகள்.
இருவரும் போரூரில் இருந்து சிறுசேரியில் இருக்கும் எனது வீட்டுக்கு வரவேண்டும். போரூரில் இருந்து திருவான்மியூர். பின் திருவான்மியூரில் இருந்து சிறுசேரி. நடத்துனர் தயவு இருந்தால் டோல் கேட்டில் பேருந்து நிற்கும். அங்கிருந்து 400 மீட்டர் நடந்தால் என் வீடு. இதுவே சிறுசேரியில் இருந்து வரவேண்டும் என்றால் 2 கிலோ மீட்டர் நடக்க வேண்டும்.

படிக்கும் ஆர்வம் இருப்பதால் தான் அவர்கள் இவ்வளவு சிரமம் பட்டு வந்தார்கள். ஆனால் குறித்த நேரத்தில் மட்டும் அவர்களால் வரவே முடியவில்லை.

“சார் நீங்க மட்டும் கொஞ்சம் சிட்டிகுள்ள கிளாஸ் எடுக்கலாம்” என்பது தான் அவர்களின் பலமுறை விண்ணப்பமாக இருக்கும்.

அது என்னவோ தெரியவில்லை என்னிடம் கற்றுக்கொள்ள வரும் பெரும்பாலானவர்கள் நகரத்தின் மறுபுறத்தில் இருந்துதான் வருவார்கள்.

அந்த அண்ணா நகரில் இருந்து வந்த பிரவீன் பற்றி சொல்லவே வேண்டாம். காலை 10 மணிக்கு வகுப்பு என்றால் 12 மணிக்கு தான் வந்து சேர்வாள். ஒரு மணிக்கு நான் அடுத்த வகுப்பு எடுக்கத் திட்டமிட்டிருப்பேன்.

நாட்கள் நகர்ந்தன. மாணவர்கள் எண்ணிக்கையும் அதிகம் ஆனது. எனது வகுப்பை சற்று சிட்டி லிமிடக்குள் எடுத்து செல்ல திட்டமிட்டேன்.

வேளச்சேரி, பெருங்குடி அல்லது திருவான்மியூர் போன்ற பகுதில் இருந்தால் மாணவர்களின் பயண நேரம் குறைவாக இருக்கும், எனக்கும் முப்பது நிமிடத்தில் சென்று வரும்படி இருக்கும் என்று யோசித்தேன்.

பேருந்து நிலையத்தில் இருந்து நடக்கும் தொலைவில் சில வீடுகள் வாடகைக்கு இருந்தது. ஆனால் அவர்கள் எதிர்பார்க்கும் வாடகையும் டெபாசிட் தொகையும் கொடுக்கும் நிலையில் நான் இல்லை. வர்த்தக நோக்கத்தில் எனது இன்ஸ்டிடுடை எடுத்து சென்றிருந்தால் எனக்கு அந்த இயலுமை நிச்சயம் கிட்டிருக்கும். ஆனால் அது எனது குறிக்கோள் அல்ல.

நல்ல வேலையாக பெருங்குடியில் இருக்கும் உறவினர் ஒருவரின் வீடு காலியாக இருந்தது எனக்கு தெரியவந்தது. அவர் எதிர்பார்க்கும் வாடகையும் என் வரம்பில் இருந்தது. உடனே சம்மதம் சொன்னேன். ஒரு வைட் போர்டு மேலும் சில ஸ்டுடெண்ட்ஸ் சேர் வாங்கினேன்.

வீட்டுத்தரையில் இருந்து நான் எடுத்த வகுப்பிற்ற்கும் இந்த இடத்திற்கும் பெரிய மாற்றம் உள்ளதை கண்டேன். எனது விடுமுறை தின வகுப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதாய் உணர்ந்தேன்.

பழைய மாணவர்கள் என்னை தொடர்புக்கொண்டு வாழ்த்துக்களை வழங்கினர். கூடவே அவர்களின் ஆதங்கத்தையும் சேர்த்துக்கொண்டனர். “நாங்க படிக்கும்போது எவ்வளவு சிரமம் பட்டு சிறுசேரி வந்தோம். அப்பவே நீங்க பெருங்குடி வந்துருக்கலாம் அண்ணா” என்பதுதான் அவர்கள் ஆதங்கம்.

இனிவரும் மாணவர்கள் நேரம் தவறாமல் வருவார்கள் என்ற எனக்கு திண்ணமாக இருந்தது. ஆனால் மாணவர்கள் புதிதாக ஒரு காரணத்தை முன்வைத்தார்கள். “பெருங்குடி பேருந்து நிறுத்தத்தில் இருந்து வெகுதூரம் நடக்கவேண்டியிருக்கிறது” என்பது தான் அந்த புதுக் காரணம்.

உண்மையில் அது சற்று தூரம் தான். கிட்டத்தட்ட ஒன்றரை கிலோ மீட்டர் நடக்க வேண்டும்.இதை சமாளிக்க இரு வழிகளை நான் அவர்களுக்கு கூறினேன். ஒன்று அரசு மினி பஸ்ஸில் வரவேண்டும். இல்லையேல், நான்கு பேர் சேர்ந்து ஒரு ஆட்டோவில் வரவேண்டும்.

ஆனால் இதற்கும் அவர்களிடம் பதில் இருந்தது. மினிபஸ் அடிக்கடி இல்லை. அனைவரும் ஒரே நேரத்தில் வருவதில்லை. இப்படி புது புது காரணங்களை கண்டுபிடிப்பதில்தான் மும்முரம் காட்டினார்கள்.

சிட்டிக்குள் இருக்க வேண்டும். மெயின் ரோட்டில் இருக்க வேண்டும். அதுவும் பேருந்து அல்லது ரயில் நிலையத்தின் அருகாமையில் இருக்க வேண்டும். அப்போது தான் இந்த பிரச்சனை முடிவிற்கு வரும் என்று எண்ணிக்கொண்டேன்.

ஒரு சனிக்கிழமை காலை… எனக்கு தலை மிகவும் பாரமாக இருந்தது. முந்தய நாளில் வழக்கத்தை விட அதிக வேலை. நிச்சயம் அது தான் காரணமாக இருக்க வேண்டும். என்னால் அன்று வகுப்பு எடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு வரவில்லை.

அன்று நடக்க இருந்த மாணவர்களுக்கு எனது உடல்நல குறைவை வாட்ஸாபில் கூறி அன்றைய வகுப்பு வேண்டாம் என தெரியப்படுத்தினேன்.

அடுத்த வாரம் சனி கிழமை…

“அண்ணா ஒரே ஒரு request”, சிற்றரசன் என்னிடம் தனியாக பேச்சு கொடுத்தான்.

“சொல்லு தம்பி”, என்றேன்.

“கிளாஸ் இல்லனா ஒரு ஆறு மணி நேரத்திற்கு முன்னாடி சொல்ல முடியுமா?” அவன்.

“ஏன். என்ன காரணம்?”, நான்.

“நான் திருச்சில் இருந்து வர்றேன்.” சிற்றசன்.

என் நினைவில் உள்ளபடி, அவன் காலதாமதமாக வந்ததில்லை.

இங்கு தூரத்தின் அளவு அவர் அவர் அரவத்தை பொறுத்தே அமைகிறது…

Velmurgan Seenipandian
Director & Founder at Fabevy Technologies

One thought on “தூரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *