ஈரம்

“கலிமா சஹாதத்” என்ற கரகரத்த குரலில் கூட்டத்திலிருந்து மோதினாரின் குரல் வேகமாக ஒலித்தது. பள்ளியிலிருந்து ஜமாத்தார்கள், ஊரார், உறவினர்கள் என அனைவரும் சேர்ந்து ஜனாசா தொழுகை நிறைவேற்றி விட்டு நான்கு பேர் சந்தூக்கை முன்னால் தூக்கிக் கொண்டு செல்ல அந்த குறுகலான பாதையில் சந்தூக்கின் மீது பன்னீர் தெளித்த வாறு மோதினாரின் குரலும், நடையும் வேகமாக இருந்தது. கூட்டத்தில் பஷீரின் நடை மட்டும் தளர்ந்து போய் கண்கள் சிவப்புற்று கண்ணீர் பெருக்கோடு ஒரு நடைப் பிணம் போல தானும் கபரஸ்தான் நோக்கிக் கூட்டத்தோடு நடந்து கொண்டிருந்தான்..

பச்சை நிற சந்தூக்கில் வெள்ளாட போர்த்தப்பட்டு சந்தனம், பன்னீர், பூக்கள் எனப் போர்த்தப்பட்டிருந்த மேல் பகுதி திறக்கப்பட்டு நேற்று இரவே தயாராக்கப்பட்டிருந்த கபர் குழியில் பஷீரின் அம்மாவின் உடலை உறவினர்கள் இரண்டு பக்கமும் பிடித்து மெதுவாக உள்ளே இறக்கி முகத்தை மட்டும் லேசாகத் திறந்து வைத்தார்கள்.
கடைசியாக முகம் பாக்குறவங்க பாத்துக்கங்க.. எனக் கூட்டத்திலிருந்து ஒரு பெரியவரின் குரல் ஒலித்தது..
பஷீருக்கு இதயம் வெடித்து அழுகை பொங்கியது, தான் முதன் முதலில் இந்த உலகத்தைப் பார்த்துக் கண்விழித்துச் சிரித்துப் பார்த்த அந்த முதல் முகத்தை இனி அவன் பார்க்கப் போகப்போவதே இல்லை.வானத்தில் மேகங்கள் விலகிச்செல்வதை போல அவனின் கடைசிப்பார்வையிலிருந்து கொஞ்சக் கொஞ்சமாக அவன் தாய் முகம் வெள்ளை துணியால் மீண்டும் மறைக்கப்பட்டது.
குழிக்கு மேலே சிறிய சிறிய மூங்கில் வரிசையாக அடுக்கப்பட்டு அதன் மீது கீற்றுகள் போடப்பட்டு பள்ளியின் பணியாட்கள் அதைச் சற்று மண்மேடாக்கி மேலே தண்ணீர், பூக்கள் தெளித்து பக்கத்திலிருந்து பிடுங்கிய ஒரு செடியை நட்டு வைத்து அவர்கள் ஒதுங்கிக் கொள்ளக் கடைசியாக ஹஜ்ரத்தின் பிரார்த்தனையோடு எல்லோரும் அந்த இடத்திலிருந்து கிளம்பினார்கள்.

கபர் அடக்கம் செய்து விட்டு மூன்றடி தாண்டியதும் திரும்பிப் பார்க்கக் கூடாது என்று தான் சிறுவயதில் கேட்டபடி வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தான் பஷீர்,
ஆனால் அவன் இதயம் மட்டும் கொஞ்சம் பின்னோக்கி அவன் தாயோடு பேசிக்கொண்டிருந்தது..

டேய் பஷீறு.. எந்திரிடா மணி பத்தாயிடிச்சி காலையிலேயே போயி மார்க்கெட்ல மீனு வாங்கிட்டு வாடா..
இருமா.. ஒண்ட ஒரே தொல்லையா போச்சி!! நிம்மதியா தூங்கக் கூட முடியல..
தெருல மீன் காரங்க வருவாங்க அவங்கள்ட்ட வாங்கிக்க..
என்று சொல்லிக்கொண்டே போர்வையில் மீண்டும் சுருண்டு கொண்டான்..

டிரிங்..டிரிங் தொலைப்பேசி ஒலித்தது..!
ஹலோ யாரும்மா..
அஸ்ஸலாமு அலைக்கும் நான்தான் பேசுரேன்..!
நல்லா இருக்கிங்கலா..? நல்லா இருக்கேன், மறுமுனையில் பஷீரின் அத்தா துபாயிலிருந்து பேசிக்கொண்டிருந்தார்..
எங்க பயன் இருகானா..
இல்லங்க..! அவன் காலையிலேயே எழுப்பி விட்டு மீன் வாங்கிட்டு காய்கறி வாங்கிட்டு வாடாண்னு சொல்லி அனுப்பி இருக்கேன்..!
ஏதோ சில விசயம் சொல்லிவிட்டு
சரி உடம்பு பார்த்துக்கோ நான் அப்புறம் கால் பன்றேன் எனச் சொல்லி விட்டு தொலைப்பேசியைத் துண்டித்தார்.

டேய் எந்திரிடா தம்பி ரெண்டு தோசையாவது சுட்டு தரேன் வெறும் வயித்தோட தூங்கதடா ராத்திரி எங்கேயோ பசங்களோடு போய் புரோட்டா திண்ணுட்டு வந்து படுத்துகிற அதுலாம் டெய்லி
ஒடம்புக்கு ஒத்துக்காதுடா சொன்னா கேளு…
அம்மாவின் தொணதொணப்பில் ஒரு வழியாக எழுந்து அவள் சுட்டு வைத்த தோசையைச் சாப்பிட்டு டீ யேக் குடித்து விட்டு முக கண்ணாடியில் தலை சீவிக்கொண்டு கிளம்பிக்கொண்டிருந்தான்..

டேய் அத்தா போன் பண்னிச்சு உனக்குப் படிப்பு முடிஞ்சிச்சில்ல விசிட் விசா அனுப்றேன்னு சொல்லிச்சி அங்க போய் எதாவது வேலை சரிபன்றேன்னு சொல்லி இறுக்கு, ஒரு கல்யாணம் காச்சி பண்னணும் அத்தாக்கும் வயசாகிட்டே போதுடா..
போலாம் போலா அதுக்குள்ள என்னா..! இப்ப ஒங்கள்ட்ட கல்யாணம் யாரு கேட்டா..?
டேய் உனக்குன்னு பொண்டாட்டி புள்ளன்னு வந்தாத்தான் பொறுப்பு வரும்..! இல்லன்னா இப்படியே பத்துமணி வரைக்கும் தூங்கிட்டே கிடப்பே..!
சரிம்மா சரிம்மா காச கொடு மொதல்ல மீன வாங்கிட்டு வந்து தொலைக்கிறேன்..!
சொல்லிக்கொண்டே பணத்தை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு வாசலில் நின்ற பல்சர் பைக்கை ஸ்டார்ட் செய்து வேகமாகக் கிளம்பினான்..

தெருமுனையில் இவனுக்காகவே கந்திருந்தது போல டேய் மச்சி வாடா டீ சாப்டு ஒரு தம் போடலாம்..
டேய் இரிடா ஏற்கனவே அம்மா மீனு வாங்க லேட்டாயிடிச்சின்னு பொலம்பிட்டு நிக்குது வாங்கி கொடுத்துட்டு வந்துடுறேன் என நண்பன் ஹமீதிடம் சொல்லி விட்டுப் பறந்தான்…

அம்மாவின் கை பக்குவத்தின் மீன் ஆனம் எப்போதும் அவனுக்கு ஒரு தனி ருசி உண்டு மகனுக்காக லேசான உரப்பு புளியைப் போடாத கறியானம் மாதிரி காய்ச்சி, அப்படியை மீனை லேசான மசாலா போட்டுப் பொறித்து மேலே தேங்காய் சாறு ஊற்றி வைக்கும் போது கொஞ்சம் சோறு அதிகமாகவே உண்பான். டேய் அள்ளி உன்றா குருவி கொத்துர மாதிரி கொத்தாத சாப்ட்றா என முள் பார்த்து தட்டையின் ஓரத்தில் முட்டு முட்டாக வைத்துக்கொண்டிருக்கும். போதுமா.. நான் தின்னுகிறேன் சின்ன புள்ளையா நாணு..?

பஷீர் அம்மாவிடம் சீரிக் கொண்டிருக்க.. பக்கத்து வீட்டு ஆச்சி லத்திபா கொஞ்சம் ஆனம் கேட்டு வரவும் சரியாக இருந்தது..
பசீரின் அம்மாவும் பக்கத்து வீட்டு லத்திபாவும் ஒரே வயதென்பதால் வாடி போடி என்றே பேசிக்கொள்வார்கள். சாப்பிட்டுக் கொண்டிருந்த பஷீரிடம் … டேய் உன் ஆதாவா பத்தி உனக்கு தெறியாதுப்பா..!
நீ பொறந்ததும் லேட்டாத்தான் கண்ணு முழிச்சேன்னு ஒரு வருசமாக எங்களுக்கலாம் தெறியாமையை மறைச்சி மறைச்சி உனக்குப் பால் கொடுத்தவடா உங்க அம்மா! அவ” அப்படித்தாண்டா மாத்த முடியாது…!

சாப்பிட்டுக்கொண்டே சரிம்மா இன்னைக்கி ராத்திரி நான் சென்னைக்கு போறேன்.. அங்க பிரண்ட் ஒரு கம்பெனில சேர்த்துவிடுறேன்னு சொல்லி இருக்கான் நான் ஒரு வருசம் வேலை பார்த்து
கொஞ்சம் எக்ஸ்பீரியன்ஸ்சோட துபாய் போனாத்தான் வேலை தேட ஈசியா இருக்கும்.

அதெல்லாம் சரியா வரமாப்பா உனக்கு..?
சின்ன புள்ள தனியா போய் மெட்ராசுல..!

அட சும்மா இரிம்மா என் பிரண்டோட அம்மாலா விடுல அவன..?

சரி பார்த்து பத்திரமா இருக்கனும் வெளியை தெருன்னு சுத்திகிட்டு இருக்கக் கூடாது..!

இரவு சென்னை பேருந்தில் ஏறி தன் தன் நண்பனின் இல்லத்திற்கு வருவதற்குள் இருபது முறை தொலைப்பேசியில் அழைத்து போய் சேந்திட்டியாப்பா எனக் கேட்டுக்கொண்டிருக்க..!

அம்மா வந்துட்டேன் நீ போய் தூங்கு நான் நாளைக்கு முதல் நாள் ஆபிஸ் போயிட்டு வந்து உனக்குக் கால் பன்றேன் எனச் சொல்லிவிட்டுப் போய் உறங்கச்சென்றான் பஷீர்.

சரியாக இன்றோடு பஷீர் போய் பத்தே நாள் தான் சென்னையில் பெருமழை செம்பரம்பாக்கம் ஏரி உடைந்து சென்னை வெள்ளக்காடாக மாறிக்கொண்டிருக்கும் பரபரப்பான காட்சிகள் எல்லா தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது.பஷீரின் அம்மாவிற்கோ இருப்புக் கொள்ளவில்லை. பஷீரின் கூட்டாளி ஹமீதை அழைத்தால் தம்பி.. ஒரு கார் ஒன்னு கூப்டுவாயேன்பா சென்னைக்கு போயி பஷீர கூப்டு வந்துடுவோம்.

ஹலோ அம்மா.. அவனுக்கு ஒன்னும் பிரச்சினை இல்லா சேஃ பாதான் இருக்கான். இல்லப்பா எனக்கு மனசு ஓப்புல நீ கூப்டு வீட்டில சொல்லிட்டு வாயேன்பா போயிட்டு வந்துடுவோம்..

பெரும் மழையும் இடியும் வழியெங்கும் மிரட்டிக்கொண்டிருந்தது. சென்னை முழுதும் வெள்ளக்காடாகக் காட்சியளித்தது. போகும் போது ஹமீது ஏதோ அரசியல் இயக்க நண்பர்களுக்கு போன் போட்டுச் s
சொல்ல அவர்கள் பத்திரமா சென்னை விமானநிலையம் வரை கொண்டு வந்து அவனை விட்டார்கள்.

டேய் லூசு எங்கம்மா தான் சொல்லுதுன்னா நீ ஏண்டா இப்ப கூப்பிட்டு வந்த.! நான்தான் நல்லா இருக்கேன்ல..!

டேய் மாப்ள நான் சொன்னேன்டா..! இப்ப நான் வரலன்னா உன்கம்மா உன் பைக்க ஓட்டிட்டே இங்கே உன்னைத் தேடி வந்தாலும் வந்திருக்கும்…!
என பஷீரிடம் கொஞ்சம் நக்கலோடு திரும்பி வரும்போது சொல்லிக்கொண்டிருக்க..

டேய் தம்பி ஒரு டீ ஒன்னு உன் கையாள வாங்கிட்டு வாடா.. ஒரே வயத்துப் பிரட்டலா இறுக்கு நேத்துலேன்னு இன்னும் ஒன்னும் திங்களடா…!

இதோ.! நான்கு வருடம் ஓடிப்போய்விட்டது வெளிநாட்டு வேலை , திருமணம், குழந்தைகள் என வாழ்க்கை வேகமாக ஓடிவந்து நிற்கிறது.

விடுமுறையில் வந்த ஒருவாரத்தில் தன் அம்மாவின் இறப்பு அவன் இதயத்தை உடைத்திருந்தது..

குருக்கும் நெடுக்கும் போய்க்கொண்டு எதையாவது பேசிக்கொண்டிருக்கும் அம்மாவின் பேச்சற்ற வீட்டின் நிசப்தம் எல்லோரும் இருந்தும் யாருமற்ற உணர்வும்.
வந்த உறவினர்கள் ஒரு சிலர் தங்கியிருக்க மற்றவர்கள் அனைவரும் கட்டிப்பிடித்து ஆறுதல் படுத்திச் சென்று கொண்டிருந்தார்கள்.

மணி இரவு பணிரெண்டை தாண்டிக்கொண்டிருந்து நேற்றிலிருந்து ஒரே சங்கடம் தூக்கமின்மை பசி என அப்படியே வீட்டின் வாசலில் உறக்கம் அழுத்த லேசாகக் கண் இழுத்துக்கொண்டே சென்றது..

பசிக்குதாடா ராஜா பசி தாங்க மாட்டியை கொஞ்சம் இருடா என அவன் தலையை மெல்லக் கோதி விட்டுச் சொல்வதுபோல ஆழ்மனதில் அம்மாவின் குரலை உணர..! திடுக்கிட்டு எழுந்தான் பஷீர்..!

உள்ளே மகன் தொட்டிலில் அழுது கொண்டிருக்க அவன் மனைவி பசிக்குதாடா ராஜா கொஞ்சம் இரிடா.! என அடுப்பங்கரைக்குப் பால் கரைக்க ஓடிக்கொண்டிருந்தாள்..!
இடியை இடித்தாலும் அவ்வளவு சீக்கிரம் கண் விழிக்காத தன் மனைவி தன் குழந்தையின் சிறிய அழுகுரலுக்கு எழுந்து ஓடுவது!

தன்னுடைய ஒரு ஆயுசு முழுதும் தனக்காக அர்ப்பணித்த அம்மாவின் தியாகம் ஒரு நொடியில் அவனுக்கு உணர்த்தக் கண்ணீர் பெருக்கெடுத்து வழிய நிலம் ஈரமாகிக்கொண்டிருந்தது….

எழுத்தும் சிந்தனையும்
ரஹமத்துல்லா,
அபுதாபி,
rahamth.1977@gmail.com.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *