பறவைகள்

ஜன்னலை லேசாகத் திறந்து பார்க்கிறார் இப்ராஹிம் பாய். தெருவில் ஒரு குருவி காக்கா கூட இல்லை. வழக்கமாக வாசலில் தான் அமர்ந்திருக்கும் சாய்வு நாற்காலியில் சுவற்றைப்பிடித்துக்கொண்டே அன்றும் போய் உட்காருகிறார்..

சிறிது நேரத்தில் காவல்துறை வாகனத்தின் சைரன் சத்தம் ஒலிக்கிறது. வாகனம் மெதுவாகப் பெரியவரின் வீட்டுக்கு வாசல் அருகே வந்து நிற்கிறது. போலிஸ்காரர் ஒருவர்,, “பாய் வெளிலலாம் உட்காரக் கூடாது உள்ளே போங்க”..என விரட்ட…
மீண்டும் எழுந்து சுவரைப்பிடித்தபடியை உள்ளே போகிறார்.

தான் மட்டுமே வாசிக்கும் வீட்டில் காலையிலிருந்து பொழுது நகரமறுக்கிறது. தான் மலேசியாவில் சொந்தமாக உணவகம் நடத்திய காலத்தில் ஊருக்கு வந்தால் வீடே நண்பர்கள், சொந்தக்காரர்களால் நிறைந்து வழியும், தனது இரண்டு மகன்கள் எப்போதும் தன்னை சுற்றியை விளையாடிக் கொண்டிருப்பார்கள். தன்னை கேட்காமல் இந்த வீட்டில் எதுவும் நடக்காது என்ற நம்பிக்கையோடு வாழ்ந்தவர். இந்த கடைசி பத்தாண்டுகளில் எல்லாம் மாறிவிட்டது. முதலில் தன்னுடைய முகத்தில் சுருக்கமும் நடையில் தடுமாற்றமும் கண்களில் பார்வை குறைபாடும் வந்தது, மனைவியின் இறப்பும், முதுமையும் மனசை லேசாகச் சலனப்படுத்தி இருந்தது. உங்களுக்கு வயதாகி விட்டது என்று சொல்லி தனது மகன்கள் தொழிலை ஏற்றுக்கொண்டு ஊருக்கு அனுப்பி வீட்டில் ஒரு பத்துக்கு பணிரெண்டு அறையைத் தனியாக ஒதுக்கித் தந்து விட்டார்கள். அந்த அறைக்குள் அமர்ந்து அன்றாட செய்திபத்திரிகை, புத்தகங்கள் வாசிப்பதுப்பதும் அன்றாட தன் மனதின் ஓட்டத்தை ஒரு டைரியில் எழுதி வைப்பதும் என்று அவருடைய வாழ்க்கையின் கடைசி பொழுதுகள் கழிந்து கொண்டிருந்தது.

மறுநாள் காலையில் கொஞ்சம் கொஞ்சமாக சுவரைப் பிடித்துக் கொண்டே தன் வீட்டின் மாடிக்கு ஏறிச்சென்று விடுகிறார். நீண்ட நாள் தன் வீட்டின் வாசலை மட்டுமே பார்த்தவருக்கு இன்று ஊரின் ஒட்டுமொத்த இயற்கை அழகும் கண்களில் பட்டது, சில்லென்ற தூய்மையான காற்று அவர் முகத்தை உரசிச்சென்றது. சிரிது நேரத்தில் சிறிய சிட்டுக்குருவிகளின் கூட்டம் ஒன்று அவர் பக்கத்தில் அமர்ந்து ஏதேதோ தன் மொழியால் பேசிக்கொண்டிருந்தது. ஒரு மயில் திடீரென்று பறந்து வந்து அவர் முன்னால் வந்து உட்கார்ந்து தன் தோகையை விரித்து ஆடியது. பெரியவருக்கு மனசு முழுவதும் மத்தாப்பு கொளுத்தியது போல பெரும் மகிழ்ச்சி.,
ஒரு சிட்டு குருவியைக் கையில் எடுத்துக்கொஞ்சுகிறார். அதுவும் அந்த பெரியவரின் முகத்தைப் பார்த்து “க்கி க்கி” சிரிக்கிறது…!

பெரியவருக்கு தனக்கு ஒரு புதிய உலகத்தை இறைவன் தந்திருப்பதைப் போன்ற மகிழ்ச்சி…! தினமும் காலையின் விடியலுக்காய் காத்திருந்து மாடியில் ஏறிச்சென்று தினமும் அந்த பறவைகளோடு போய் கொஞ்சிக் கொண்டிருந்தார்.

இரண்டு மகன்களும் வெளியில் இருப்பதால் மருமகள்கள் அவர்கள் அம்மா வீட்டிலேயே இருப்பார்கள் அங்கிருந்து காலை ஒரு வீட்டிலும் மதியம் ஒரு வீட்டிலும் வேலைக்காரர்கள் மூலம் சாப்பாடு கொடுத்து விடுவார்கள். அன்று மதியம் சாப்பாடு கொண்டு வரும் வேலைக்காரியிடம் சொல்லி அனுப்பினார் கொஞ்சம் சோறு மருமகளிடம் நாளை கூடுதலாக வைக்கச்சொல்லி..

அன்று, தான் நேற்றே எடுத்து வைத்த சோற்றைக் கொஞ்சம் எடுத்துக் கொண்டு ஒரு கிண்ணத்தில் தண்ணீர் கொஞ்சம் பிடித்துக் கொண்டு மிகக் கஷ்டப்பட்டு வீட்டின் மேலேறிச் செல்கிறார். வாசலில் வாகனங்கள் ஒலி எழுப்பியவாறு போய்க்கொண்டு இருக்கிறது. தொலைதூரத்தில் உள்ள சிமெண்ட் ஆலையில் உற்பத்தி தொடங்கிய புகையை அது கக்கிக் கொண்டிருந்தது.. மக்கள் முககவசங்களை அணிந்து கொண்டு வேகவேகமாக எங்கோ போய்க்கொண்டிருக்கிறார்கள்.

நெடுநேரம் பறவைகளின் வருகைக்காய் காத்துக்கொண்டே இருந்தவர் நம்பிக்கையை இழந்து கையிலிருந்த உணவைத் தூக்கி எரிந்து விட்டு மீண்டும் தன் அறையில் போய் அமர்ந்து தன்னுடைய நாட்குறிப்பில்

“நான் இந்த பறவைகள் என்னைத் தேடி வரவில்லை என்று அதன் மீது எனக்குக் கோபம் இல்லை”
ஏனென்றால் நான் எப்போதே இந்த உலகில் நிராகரிக்கப்பட்டவன். என எழுதி விட்டு ஒரு நெடிய உரகத்திற்குச் சென்று விடுகிறார்…

ரஹமதுல்லா

அபுதாபி
Rahamth.1977@gmail.com

One thought on “பறவைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *